You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குலசேகரப்பட்டினம் விழாவில் பிரதமர் மோதி கூட்டாட்சி மரபுகளை மீறினாரா? என்ன நடந்தது?
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமையன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அதோடு சேர்த்து 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்விற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான கனிமொழி அழைக்கப்படவில்லை என்றும், தமிழக அமைச்சர்களுக்கு சரியான மரியாதை வழங்கப்படவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
"கலைஞரின் கனவுத்திட்டமான ராக்கெட் ஏவுதள திட்டத்தை நாடாளுமன்றத்தில் பல முறை வலியுறுத்தியுள்ள எனக்கு முறையான அழைப்பிதழ் இல்லை, என் பேரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை" என்று விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் கனிமொழி.
ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்டது என்ற நிலையில், விழாவில் அந்த தொகுதி எம்.பியான கனிமொழி புறக்கணிக்கப்பட்டாரா? விழாவில் என்ன நடந்தது?
குலசேகரப்பட்டினத்தில் பிரதமர் நிகழ்வு
பிரதமர் மோதி தமிழகம் வருவது இது ஒன்றும் முதல்முறையல்ல. இதற்கு முன்பு பல முறை பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்த பிரதமரை தமிழக ஆளுநர், அமைச்சர்கள், சில நேரங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் சென்று வரவேற்பதும், அவரோடு நிகழ்வுகளில் பங்கேற்பதும் வழக்கமான நடைமுறைதான்.
அப்படி குலசேகரப்பட்டினத்தில் நடந்த ராக்கெட் ஏவுதளத்திற்கான நிகழ்விலும் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள் என்று செய்தி ஊடங்களில் சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால், நேற்று நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் பங்கேற்றனர்.
பிரதமர் மோதி உரையாற்றுகையில், மேடையில் இருந்த ஆளுநர் தொடங்கி ஒவ்வொருவர் பெயராக குறிப்பிட்டுவிட்டு, அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கனிமொழி ஆகியோரின் பெயர்களை தவிர்த்துவிட்டார் என்று ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
அதே உரையிலேயே தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டிற்கான புதிய திட்டங்கள் குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுவதாகவும், தமிழக அரசு தான் அறிவிக்கும் வளர்ச்சி திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட அனுமதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பிரதமர் மோதியின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்பி கனிமொழி,’பிரதமருக்கு என் பெயரை கூட சொல்ல மனமில்லை’ என்று கூறியுள்ளார்.
கலைஞரின் கனவுத்திட்டம்
குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. அதில் முக்கியமாக மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு அடுத்து 2014ஆம் ஆண்டு மத்தியில் புதிய அரசு பதவியேற்றதில் இருந்து பலமுறை கடிதம் மூலமாகவும், விவாதங்கள் வழியாகவும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பலகட்ட விவாதங்களுக்கு பிறகு குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான முடிவு இறுதிசெய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் விழாவும் தற்போது நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து கனிமொழி அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது, மேற்கூறிய தகவல்களை தெரிவித்த அவர், “முதலில் பல்வேறு விஞ்ஞான காரணங்களுக்காக விஞ்ஞானிகள் இந்த இடம் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க சரியாக இருக்கும் என்ற திட்டத்தை முன்மொழிந்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பல கட்ட முயற்சிகளை எடுத்தது. இந்த பின்னணியில் இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்காக 2000 ஏக்கர் இடத்தை தமிழக அரசு ஒதுக்கி கொடுத்தது. எனவே, இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசின் பங்களிப்பு முக்கியமானது” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு அழைப்போ அல்லது தகவலோ தெரிவிக்கவில்லை என்று கனிமொழி கூறும் நிலையில் அதுகுறித்து கேட்டபோது, “வழக்கமாக சாதாரண சந்திப்புகளின் போதே அந்த தொகுதியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் வழங்கி, நிகழ்வு அழைப்பிதழில் பெயர் இடம்பெறும். ஆனால், இந்த முறை எனக்கு முறையாக எந்த அழைப்பும் இல்லை. அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இது கலைஞரின் கனவுத்திட்டம் மற்றும் தமிழக அரசிற்கு இதில் அதிக பங்கு உள்ள காரணத்தால் நாங்கள் கலந்துக் கொண்டோம்” என தெரிவித்தார் அவர்.
பாஜக என்ன சொல்கிறது?
ஏன் கனிமொழி அவர்களின் பெயர் தவிர்க்கப்பட்டது என்ற கேள்வியை பாஜகவின் மாநிலத் துணை தலைவர் திருப்பதி நாராயண் அவர்களிடம் கேட்டோம்.
இதற்கு பதிலளித்த அவர், “அழைப்பிதழில் கனிமொழியின் பெயர் இருந்தது. பிரதமர் தெளிவாக நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டார். ஆனால், இதை இல்லை என்று சொல்வது மலிவான அரசியல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு குறித்த கேள்வியை முன்வைத்த போது, “இதற்கு முன் திமுக அரசு இருந்தபோது குலசேகரப்பட்டினத்தில் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை கொண்டுவர முயன்ற போது அதை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு தாரை வார்த்து கொடுத்தது திமுகதான். இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்து இத்திட்டத்தை செயல்படுத்திய பிறகு அதை சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையான விஷயம்” என்கிறார் அவர்.
‘கூட்டாட்சி சமநிலைக்கு ஆபத்து’
இந்த நிகழ்வு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களிடம் கேட்ட போது, “சமீபத்திய நிகழ்வுகள் எதுவுமே கூட்டாட்சி சமநிலையை வலியுறுத்துவது போல் இல்லை. இது கட்சி அரசியல் என்பதை தாண்டியும் மோசமானதாக உள்ளது. வரலாற்றை திரிக்கும் வேலை இது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழியின் கருத்துக்கு இடமில்லை, ஆனால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை கூறுவேன் என்பது ஒன்றிய அரசின் அதிகாரத்தை காட்டுவது போல் தானே உள்ளது?” என்று கூறினார்.
மேலும், “ஒரு பிராந்தியத்திற்கான வளர்ச்சி திட்டம் என்று வரும்போது மாநில அரசும், அந்த பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும் தானே முக்கியமான அங்கத்தினர். இது ஒரு பொதுவான வழக்கம், மரபு.”
“உதாரணமாக, வாஜ்பாய் காலத்தில் சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கம் நடைபெறும்போது அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தான் முன்னிலை படுத்தப்பட்டார். எனவே இது தான் நாடு முழுவதும் இருந்த மரபு. அதிலிருந்து மோதி தலைமையிலான இந்த மத்திய அரசுதான் முதல்முறையாக வெளியேறியுள்ளது” என்றும் கூறுகிறார் பன்னீர்செல்வன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)