You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குலசேகரப்பட்டினம்: நாளிதழ் விளம்பரத்தில் சீன கொடி வந்தது எப்படி? தமிழக அமைச்சர் விளக்கம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் தளத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர் அளித்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் தேசியக் கொடி இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.
இந்தப் படம் இடம்பெற்றது எப்படி? தவறு நடந்தது எங்கே? விளம்பரம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
நாளிதழ் விளம்பரத்தில் சீனக் கொடியால் சர்ச்சை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இதனை வாழ்த்தி மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ள அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் சில ராக்கெட்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் பிரதானமாக இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் கொடி இடம்பெற்றிருந்தன. அருகில் இருந்த மற்றொரு ராக்கெட்டில் சீன எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட பா.ஜ.க., தி.மு.க. மீது கடுமையாக தாக்குதல் தொடுத்தது. இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திரமோதி, "திமுகவின் இன்றைய விளம்பரம் நகைப்புக்குரியதாக உள்ளது. அவர்கள் இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ட்விட்டர் பதிவு ஒன்றில் இது தொடர்பாக தி.மு.கவை கடுமையாக விமர்சித்திருந்தார். "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தமிழ் நாளிதழ்களில் அளித்துள்ள விளம்பரம் சீனாவுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பதையும் நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலுமாக புறந்தள்ளியிருப்பதையும் காட்டியிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
கனிமொழி கூறியது என்ன?
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த தி.மு.கவின் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, "யாரோ ஆர்ட் ஒர்க் செய்தவர்கள் இந்தப் படத்தை போட்டிருக்கிறார்கள். சீனப் பிரதமர் இங்கே வருகிறார். அவரை பிரதமர் வரவேற்று மகாபலிபுரத்தில் வாக்கிங் சென்றார்கள். அதை எதிரி நாடு என யாரும் அறிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்
விளம்பர சர்ச்சை தொடர்பாக, நாளிதழில் அதனை அளித்திருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் விளக்கம் கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எங்களுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது." என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், "ஒரு அரசு விழாவில் திட்டத்தையும் பயனையும் பற்றி பேசவார்களே தவிர அரசியல் பேச மாட்டார்கள். அப்படி அரசியல் பேசியது நமது நாட்டின் பிரதமர் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது அடிப்படை தெரியாமல் இருக்கின்றனர்." என்று விமர்சித்தார்.
விளம்பர வடிவமைப்பு நிறுவனம் பதிலளிக்க மறுப்பு
சர்ச்சைக்குள்ளான இந்த விளம்பரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டு, பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது.
எப்படி இந்தத் தவறு நேர்ந்தது என்பது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொலைபேசியிலும் நேரிலும் தொடர்புகொண்டு, இது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் விளக்கம் அளிக்க முன்வரவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)