ரஷ்யா vs யுக்ரேன்: அணையைத் தகர்த்தது யார்? அணை உடைந்ததால் யாருக்கு லாபம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தெற்கு யுக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய அணை தகர்க்கப்பட்டுள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நாசகார செயலால் யாருக்கு லாபம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நோவா கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது குறித்து ரஷ்யா, யுக்ரேன் இருதரப்பும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் மேற்கத்திய நாடுகளின் சந்தேக பார்வை ரஷ்யா மீது விழுந்திருந்தது.
ஆனால், “இவ்விரு சம்பவங்களில் ரஷ்யாவுக்கு எந்த தொடர்பு இல்லை. நாங்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?” என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை ரஷ்ய அரசு பகிரங்கமாக மறுத்தது. அத்துடன், “இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தங்களை காயப்படுத்துகிறது “ என்றும் ரஷ்யா வருத்தம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவை வழங்குவதற்காக ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி வரை, பால்டிக் கடலின் கீழ் செல்லும் இயற்கை எரிவாயு குழாய்களின் கட்டமைப்பே நோர்ட்ஸ்ட்ரீம்.
ரஷ்யாவை பாதிக்கும் விஷயங்கள்
யுக்ரேனின் குற்றச்சாட்டின்படி, கக்கோவ்கா அணையை ரஷ்யா உடைத்ததாக கருதினால், அதனால் தமக்குதான் பாதிப்பு என்பதை அந்த நாடு இரண்டு வழிகளில் சுட்டிக் காட்டலாம்.
முதலாவதாக, அணை உடைக்கப்பட்டுள்ளதன் விளைவாக, கெர்சன் மற்றும் அணை அமைந்துள்ள ‘டினிப்ரோ’ ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்து ரஷ்ய துருப்புகளையும், பொதுமக்களையும் கிழக்குப் பகுதி நோக்கி வெளியேற்ற வேண்டி வரும். அப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது ரஷ்ய படையின் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலால் அன்றாடம் அவதியுற்று வரும் யுக்ரேனின் கெர்சன் பகுதி குடியிருப்புவாசிகளுக்கு சாதகமாகவே அமையும்.
அடுத்து, அணையை உடைப்பதால் அதன் அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பு தீபகற்ப பகுதியான கிரைமியாவுக்கு சென்று கொண்டிருக்கும் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படலாம். கிரிமியா தீபகற்ப பகுதியை 2014ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போதில் இருந்து, யுக்ரேன் மற்றும் ரஷ்யா உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய நிலமாக கிரைமியா தீபகற்பம் மாறி உள்ளது.
இப்படி இவ்விரு காரணங்களும் தங்களுக்கே வினையாக அமையும் எனும்போது தாங்கள் ஏன் அணையை உடைக்கப் போகிறோம்? என்று ரஷ்யா நியாயம் கற்பிக்கலாம்.

பட மூலாதாரம், Google
யுக்ரேன் - ரஷ்யா போர் பின்னணி
ஆனால், இந்த அணை உடைக்கப்பட்டுள்ள நிகழ்வை, யுக்ரேன் போரின் பின்னணியிலும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, ரஷ்ய படைகளுக்கு எதிரான யுக்ரேனின் கோடைகால எதிர்தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியிலும் இதனை பார்க்க வேண்டியுள்ளது.
யுக்ரேன் ராணுவத்தின் இந்த எதிர்முனை தாக்குதல் வெற்றி பெற வேண்டுமானால், கிரைமியா தீபகற்பத்தை யுக்ரேனின் கிழக்கு டோம்பாஸ் பிராந்தியத்துடன் இணைக்கும் பகுதி மீதான ரஷ்ய படையின் ஆதிக்கத்தை தளர்த்த வேண்டும்.
அத்துடன், ஜாபோரிசியாவின் தெற்குப் பகுதியிலும் ரஷ்ய படைகளின் ஆதிக்கத்தை சீர்குலைப்பதன் மூலம் அந்தப் பகுதியை இரண்டாக பிரிக்க முடியும். அதன் பயனாக, கிரைமியா தீபகற்ப பகுதியை தனிமைப்படுத்தி, அதனை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் யுக்ரேன் இறங்கலாம்.
உஷாரான ரஷ்யா

பட மூலாதாரம், Reuters
ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்று வரும் யுக்ரேன் உடனான போரில் இருந்து ரஷ்யா நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது. யுக்ரேன் ராணுவம் எந்தப் பகுதிகளையெல்லாம் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதை ரஷ்யா அறிந்துள்ளது.
முக்கியமாக அசோவ் கடல் பகுதியை நோக்கி யுக்ரேனிய படைகள் முன்னேறுவதை தடுக்கும் நோக்கில், கடந்த இரண்டு மாதங்களாக ரஷ்யா பல்வேறு தடைகளை உருவாக்கி வருகிறது.
ஆனால் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ள மேற்குப் பகுதிக்கு தமது படைகளை அனுப்ப யுக்ரேன் திட்டமிட்டுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ரஷ்யாவை இப்படி யூகிக்க வைப்பதற்காக யுக்ரேன் ராணுவம் இதுபோன்று புத்திசாலித்தனமாக செயல்படுவதாக தெரிகிறது.
தெற்கு யுக்ரேன் பகுதியை அடைந்தபோது, டினிப்ரோ ஏற்கெனவே பரந்து விரிந்த ஆறாகவே இருந்தது.
ரஷ்யாவின் பீரங்கி, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் கீழ், அதன் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய படைகளின் பாதுகாப்பு அரண், உக்ரைனுக்கு மிகவும் ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பெரிய அணை தகர்க்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், கெர்சானுக்கு எதிரே அமைந்துள்ள இடது ( கிழக்கு) ஆற்றங்கரை பகுதிகள் முழுவதும் நீரில் முழ்கி உள்ளன. இதனால் அந்தப் பகுதிக்கு யுக்ரேனிய படைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அணை உடைப்பு வரலாறு
1941 இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்று கொண்டிருந்தபோது, நாஜி படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, இதே டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த அணையை சோவியத் துருப்புகள் தகர்த்தன என்ற வரலாற்று பதிவும் இருக்கதான் செய்கிறது. அணை உடைந்ததன் விளைவாக, அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கான சோவியத் குடிமக்கள் உயிரிழந்தனர் என்ற சோகக்கதையும் இந்த அணையின் பின்னால் உள்ளது.
தற்போது இந்த அணையை யார் உடைத்திருந்தாலும், அந்தச் செயல் தெற்கு உக்ரைன் பகுதியில் நிலைமையை சீர்குலைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா - உக்ரைன் என இருதரப்பிலும் போர் நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மீதான யுக்ரேனின் நீண்டகால எதிர்தாக்குதல் திட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வை அணை தகர்க்கப்பட்டுள்ள சம்பவம் தாமதப்படுத்தக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












