ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் மீண்டும் மின்சார ஏற்றுமதியை தொடங்கிய யுக்ரேன்

ரஷ்யா - உக்ரேன் போர்
    • எழுதியவர், மரிட்டா மோலோனி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் நிர்மூலமான யுக்ரேனின் மின்சார கட்டமைப்புகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது எனவே மின்சார ஏற்றுமதியை அந்நாடு மீண்டும் தொடங்கியுள்ளது.

யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் இருதரப்புமே இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதத்தில் யுக்ரேனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா தீவிரமான தொடர் தாக்குதல்களை மேற்கொண்டது.

இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்களும் குளிர்காலத்தில் இருளில் மூழ்கின. அந்நாட்டின் மின்சார ஏற்றுமதியும் தடைபட்டது. தற்போது, நிலைமை மெல்ல மெல்ல சீராகிவரும் நிலையில், மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு யுக்ரேன் வந்துள்ளது.

மின்சார ஏற்றுமதி தொடர்பான ஆணையில் அந்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ கையெழுத்திட்டுள்ளார். மின்சாரம் ஏற்றுமதி செய்யப்பட்டாலும், உள்ளூர் மக்களின் நலனே பிரதானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாகவே கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருவதாகவும் யுக்ரேனிய மக்கள் எவ்வித தடங்கலையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

‘மிகவும் கடுமையானதான குளிர்காலம் முடிந்துவிட்டது. அடுத்ததாக, மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதை தொடங்க வேண்டும். இதன் மூலம், உருகுலைந்த, பழுதடைந்த மின்சார கட்டமைப்புகளை சீரமைப்பதற்கு தேவையான கூடுதல் நிதிகளை பெற முடியும்’ என்று வெள்ளியன்று ஹலுஷ்செங்கோ குறிப்பிட்டார்.

மின்சார அமைப்பை விரைவாக சரி செய்த பொறியாளர்கள், சர்வதேச பங்குதாரர்கள் ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

கடந்த மாதம் பிபிசியிடம் பேசிய யுக்ரேனிய மக்கள், தற்போது தடையின்றி மின்சாரம் கிடைப்பதாக தெரிவித்திருந்தனர்.

‘இந்த நகரம் மிகவும் மாறிவிட்டது’ என்று கூறுகிறார் நிப்ரோவைச் சேர்ந்த இன்னா ஷ்டாங்கோ. ‘கடைசியாக, தெரு விளக்குகள் மீண்டும் ஒளிரத் தொடங்கிவிட்டன. இனிமேல் தெருக்களில் பயமின்றி நடக்கலாம்’ என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், ரஷ்யாவின் தாக்குதல்கள் நின்றுவிட்டதாக யுக்ரேனியர்கள் நினைத்துக்கொள்ளக் கூடாது என்று அந்நாட்டின் மின்சார நெட்வொர்க்கின் ஆபரேட்டரான உக்ரெனெர்கோ எச்சரித்துள்ளது.

ரஷ்யா - உக்ரேன் போர்

போரின் போது ரஷ்யா இதுவரை 1,200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தங்களின் மின்சார அமைப்புகள் மீது ஏவியுள்ளதாக உக்ரெனெர்கோ தெரிவித்தது.

யுக்ரேனின் எரிசக்தி அமைப்பை அழிக்கும் மிகப்பெரிய முயற்சி இது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டதால், யுக்ரேனைச் சேர்ந்த பலரும் இந்த குளிர்காலத்தில் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இதற்கெனவே அமைக்கப்பட்ட சிறப்பு மையங்களில் தஞ்சமடைந்தனர்.

இந்த மையங்களில் உணவு, மருந்துகள் போன்றவற்றுடன் மின்சார வசதி, அறையை வெதுவெதுப்பாக வைத்துகொள்ளும் வசதி போன்றவையும் செய்யப்பட்டிருந்தது.

யுக்ரேனின் மின்சார உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைக்கத் தொடங்கியதில் இருந்து அந்நாட்டின் அனல்மின் மற்றும் நீர்மின் நிலையங்கள் ஒவ்வொன்றும் சேதத்தை சந்தித்தன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என்று அழைக்கப்படும் ஜபோரிஜியோவில் உள்ள அணுமின் நிலையமும் யுக்ரேனின் கையைவிட்டு சென்றது. தற்போது இந்த நிலையம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

யுக்ரேனின் மிகப்பெரிய மின்சார ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செய்யப்படும் மின்சார ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டின் இறுதிக்குள் 1.5 பில்லியன் பவுண்ட் திரட்ட முடியும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் யுக்ரேன் தெரிவித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: