குஜராத்: பாஜகவின் 'ஹாட்ரிக்' கனவைக் கலைத்த பெண் - மக்களிடமே நிதி திரட்டி தேர்தலை சந்தித்தது எப்படி?

    • எழுதியவர், அர்ஜவ் பரேக்
    • பதவி, பிபிசி குஜராத்தி

குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகள் இருந்தாலும், அங்கு அனைவரது பார்வையும் ஒரு தொகுதியை நோக்கியே இருந்தது. அந்தத் தொகுதியின் பெயர் 'பனஸ்கந்தா’

பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கெனிபென் தாக்கூர் பாஜக வேட்பாளர் ரேகாபென் சௌத்ரியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

கெனிபென், பாஜக வேட்பாளரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இதனால் குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் மூன்றாவது முறையாக கைப்பற்ற வேண்டும் என்ற பாஜகவின் கனவு நிறைவேறவில்லை.

வெற்றிக்கு பிறகு கெனிபென் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பில், "பனஸ்கந்தா மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. எனக்கு வாக்களித்த பனஸ்கந்தா மக்களுக்கு மனமார்ந்த நன்றி," என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"பனஸ்கந்தா மக்கள் எனக்கு நோட்டுகள் (பணம்) மற்றும் வாக்குகள் இரண்டையும் கொடுத்துள்ளனர். நான் உயிருடன் இருக்கும் வரை பனஸ்கந்தா மக்களிடம் நான் பட்டிருக்கும் கடனை என்னால் திருப்பி செலுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு முயற்சிப்பேன்,” என்றார்.

இத்தொகுதியில் கெனிபென்னை எதிர்த்து ரேகா பென் சௌத்ரி என்னும் புதிய வேட்பாளரை பாஜக நிறுத்தியது.

பனஸ்கந்தாவில் பாஜகவின் செல்வாக்கை கெனிபென் தாக்கூர் தகர்த்தியது எப்படி? அவரின் வெற்றி சாத்தியமானது எப்படி?

பாஜகவும் காங்கிரஸும் சொல்வது என்ன?

பிபிசி குஜராத்தியிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மன்ஹர் படேல், "கெனிபென்னின் வெற்றி ஆதிக்கத்திற்கு எதிரான சாமானியரின் வெற்றியாகும். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண், இப்போது குஜராத்தின் ஆறரை கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார். பனஸ்கந்தா மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.”

மேலும், "இதுவரை ஆட்சி செய்த பாஜகவின் 26 எம்.பி.க்களை ஒப்பிடுகையில், கெனிபென் ஒரு நல்ல எம்.பி.யாக இருப்பார். டெல்லியில் குஜராத் மக்களின் குரலாக அவர் ஒலிப்பார்" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பனஸ்கந்தாவின் பாஜக பொதுச்செயலாளர் அசோக் படேல், "பனஸ்கந்தாவிலும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் நிலவியது, ஆனால் சில சமூகங்களின் அதிருப்தியால் எங்களுக்கு குறைந்த வாக்குகளே கிடைத்தன. அதனால், இங்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வாக்குகள் மக்களால் கொடுக்கப்பட்டவை. எனவே அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், குஜராத்தில் மொத்தமுள்ள 26 இடங்களில் 25 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளோம், எதிர்பார்த்தது போலவே நல்ல முடிவு கிடைத்துள்ளது என்றார்.

மக்கள் விரும்பும் பிரபல முகம்

காங்கிரஸ் வேட்பாளர் கெனிபென் தாக்கூர் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அஜய் நாயக், "கெனிபென் நன்கு அறியப்பட்ட சமூக ஆர்வலர். சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர். அவர் வசிக்கும் பகுதியில் மிகவும் பிரபலமானவர். மேலும், அவரது சமூக பிரதிநிதித்துவம் இங்கு அனைவராலும் பாராட்டப்படுகிறது," என்றார்.

அரசியல் ஆய்வாளர் ஃபக்கிர் முகமது முன்னதாக பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் அதற்கு முன்னரும் தனது தொகுதியில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து மக்களை சந்தித்தவர் கெனிபென். தாக்கூர் சமூகத்துக்கு மட்டும் தனி கவனம் செலுத்தாமல் அனைத்து சமூக மக்கள் மீதும் கவனம் செலுத்துவார். அவர் எப்போதும் அனைத்து சமூகங்களின் சுப மற்றும் துக்க நிகழ்வுகளில் பங்கேற்பார். மக்களின் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கும் பங்காளியாக இருக்கும் தலைவர் அவர்’’ என்றார்.

தேர்தலுக்காக மக்களிடம் நிதி திரட்டிய கெனிபென்

கெனிபென் தாக்கூர் திரள்நிதி திரட்டல் (crowdfunding) மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டதால் செய்திகளில் இடம்பிடித்தார்.

தொகுதியில் இருந்த பெரியவர்கள் அவருக்கு ஆசீர்வாதம் செய்து பணம் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தேர்தல் பரப்புரைக்காக ஒரு ரூபாய் கூட தான் செலவழிக்கவில்லை என்றும், காரில் பெட்ரோல் கூட தான் போடவில்லை என்றும் கெனிபென் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் கொடுத்த பணத்தை 'அன்பின் பரிசு' என்று கூறிய அவர், பனஸ்கந்தா மக்கள் தொடர்ந்து என்னை ஆசிர்வதித்து, எனக்கு நிதியுதவி செய்கிறார்கள் என பலமுறை குறிப்பிட்டார்.

'கெனிபென், பனஸ்கந்தாவின் சகோதரி'

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தனது தேர்தல் பிரசாரத்தில் 'பனஸ்கந்தாவின் சகோதரி' (பனாசனி பெஹின் கெனிபென்) என்ற முழக்கத்தை கெனிபென் அதிகமாகப் பயன்படுத்தினார்.

கெனிபென் கருத்துப்படி, இந்த முழக்கம் மக்களால் வழங்கப்பட்டது மற்றும் பிரபலமானதும் கூட. இந்த வாக்கியம் தேர்தல் பிரசாரத்தின் போது சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. கெனிபென்னை அதிகமாக பிரபலப்படுத்தியது இந்த முழக்கம் தான் என்று நம்பப்படுகிறது.

பனஸ்கந்தாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் இந்த முழக்கத்தை பயன்படுத்தினார்.

பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், கெனிபென் பெற்ற வெற்றியில் 'பனஸ்கந்தாவின் சகோதரி' என்ற கோஷம் பெரும் பங்கு வகித்தது என்பதை அரசியல் விமர்சகர்கள் ஒப்புக்கொண்டனர்.

ரேகாபென் செளத்ரியை விட கெனிபெனின் செல்வாக்கும் புகழும் மிக அதிகம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரேகாபென்னுக்கு அரசியல் அனுபவமோ அடையாளமோ இல்லை என்றனர்.

அஜய் நாயக் கூறுகையில், " பாஜகவிடம் ஏராளமான வளங்கள் இருந்தன. பாஜக வேட்பாளர்கள் பெயர் அல்லது உணர்வுகளின் அடிப்படையில், தங்கள் சமூகத்தின் அடிப்படையில் மட்டுமே வாக்கு சேகரித்தனர். மறுபுறம், கெனிபென்னின் விழிப்புணர்வு, அவரது களப்பணி மட்டுமே வாக்காளர்களைக் கவர்ந்தது. அவரது வெற்றி முக்கியமானது,” என்றார்.

காங்கிரஸுக்கு இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது?

குஜராத்தில் 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் இம்முறை குஜராத்தில் கெனிபென் வெற்றியின் மூலம் காங்கிரஸ் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

அஜய் நாயக் கூறுகையில், "கடந்த 2 தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத காங்கிரஸுக்கு இது உற்சாகமான செய்தி. அதே நேரத்தில் தேசிய அளவிலும் காங்கிரஸ் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த வெற்றி மாநில மற்றும் தேசிய அளவில் ஒரு மாற்றத்தை குறிக்கிறது," என்றார்.

"குஜராத்தில் பாஜக இந்த ஒரு தொகுதியை மட்டும் இழந்தது பற்றி நாடு முழுவதும் பேசப்படும். பாஜக மற்றும் பிரதமர் மோதிக்கு எதிராக கெனிபென் பெற்ற இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டுகிறது," என்கிறார் ராஜேஷ்.

கெனிபென் தாக்கூர் யார், அவர் தொடர்பான சர்ச்சைகள் என்ன?

குஜராத்தில் 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 156 இடங்களை வென்று சாதனை படைத்த போதிலும், கெனிபென் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆனார்.

2022 ஆம் ஆண்டில், அவர் பனஸ்கந்தாவின் 'வாவ்’ என்ற சட்டமன்றத் தொகுதியில் 15601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2017 இல், அதே தொகுதியில் பாஜகவின் 'பெரிய தலைவர்' மற்றும் அப்போதைய மாநில அமைச்சர் சங்கர் செளத்ரியையும் தோற்கடித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி அறிக்கையின்படி, அவர் பகுதி நேர மாணவராக அரசியல் அறிவியல் பிரிவில் சேர்க்கை பெற்றார், ஆனால் முதல் ஆண்டிலேயே படிப்பை விட்டுவிட்டார்.

காங்கிரஸின் பனஸ்கந்தா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு 2012ல் முதன்முறையாக வாவ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சீட் கிடைத்தது.

அவரது அரசியல் மற்றும் ஆளுமை பற்றி விவரித்து, உள்ளூர் பத்திரிகையாளர் கல்பேஷ் தாக்கூர் இவ்வாறு கூறுகிறார்.

"கெனிபென் மற்ற தலைவர்களைப் போலல்லாமல், ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனாலும் அவர் மக்களை கவர்ந்து எதிரிகளை தோற்கடிக்கிறார்."

பனஸ்கந்தா மாவட்டத்தில் 'காங்கிரஸின் வெற்றிக்கு உதாரணமாக' விளங்கும் கெனிபென், அடிக்கடி தனது காட்டமான உரைகளால் சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார். பொது நிகழ்வு உரைகளின் போது 'அவதூறுகள்' மற்றும் 'ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை' பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

'பாலியல் வன்புணர்வில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பொதுவெளியில் எரிக்க வேண்டும்' , 'பாஜக தலைவர்களைக் கொல்ல வேண்டும்' போன்ற சர்ச்சையான கருத்துக்களால் இவர் விமர்சிக்கப்படுகிறார்.

2019 ஆம் ஆண்டில், தாக்கூர் சமூகத்தின் திருமணமாகாத மகள்களுக்கு மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் கோரிக்கையையும் அவர் ஆதரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மொபைலை விட பெண்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)