சென்னை அணிக்கு தண்ணி காட்டிய சுப்மன் கில்: 'இம்பாக்ட்' பிளேயர் என்ன செய்தார்? சிஎஸ்கே எங்கே சறுக்கியது?

பட மூலாதாரம், TWITTER/CSK
ஐபிஎல் தொடரில் புதிய சாம்பியன் அணியாக உருவாகியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்துள்ளது.
சவாலான இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி தொடக்கம் முதல் இறுதி வரை கிட்டத்தட்ட எந்தவொரு இடத்திலும் எதிரணிக்கு வாய்ப்பே தராமல் வெற்றியை ருசித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'இம்பாக்ட்' ப்ளேயர் விதியை அந்த அணி திறமையாகப் பயன்படுத்திக் கொண்டது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த ஐ.பி.எல். திருவிழா கோலாகலமாகத் தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4 முறை சாம்பியன் என்பதுடன் மிகவும் வெற்றிகரமான கிளப் என்ற பெருமையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சென்னை அணிக்கு புதிய ரன் குவிக்கும் இயந்திரமாக உருவாகியிருக்கும் ருதுராஜ் கெயிக்வாட் கடந்த 3 தொடர்களைப் போல அல்லாமல், இம்முறை முதல் போட்டியிலேயே அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உண்மையில், இந்தப் போட்டியும் அவர் பேட்டிங் செய்ய களத்தில் இருக்கும் வரைதான் சென்னை அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
குஜராத் அணிக்கு தனி ஒருவனாக 'தண்ணி' காட்டிய ருதுராஜ்
நடப்பு சாம்பியனுக்கு தனி ஒருவனாக தண்ணி காட்டிய ருதுராஜ் கெயிக்வாட், நாலாபுறமும் பந்துகளை விளாசினார். அவரது பேட்டில் இருந்து பந்துகள் பவுண்டரி, சிக்சர்களாக பறந்தன. 50 பந்துகளிலேயே 92 ரன்களை குவித்த அவர், சதம் அடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி எதிர்பாராத விதமாக அவுட்டாகி வெளியேறினார். அவர் மொத்தம் 9 சிக்சர்கள், 4 பவுண்டரிகளை விளாசினார்.
பவர் பிளே முடிந்த பிறகு 7 முதல் 16 ஓவர் வரையிலான மிடில் ஓவர்களில் ருதுராஜ் கெயிக்வாட் பேட்டிங்கில் அனல் பறந்தது. அந்த ஓவர்களில் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்சர்களை பறக்கவிட்டார். அத்துடன் ஒரு பவுண்டரியும் அடித்திருந்தார். இதே ஓவர்களில் சென்னை அணியின் பிற பேட்ஸ்மேன்கள் 29 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
குறிப்பாக, ஷார்ட் பிட்ச் பந்துவீச்சில் ருதுராஜ் தவிர்த்த சென்னை அணியின் பிற வீரர்களால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை. ருதுராஜ் 21 ஷார்ட் பிட்ச் பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களை சேர்த்தார். ஷார்ட் பிட்ச் பந்தில் அவரது ஸ்டிரைக் ரேட் 205.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஷார்ட் பிட்ச் பந்துகளில் ருதுராஜ் தவிர மற்ற வீரர்கள் திணறல்
ஷார்ட் பிட்ச் பந்துகளில் சென்னை அணியின் மற்ற வீரர்களின் ஸ்டிரைக் ரேட் வெறும் 105 தான். 37 ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்ட மற்ற வீரர்கள் 17 பந்துகளில் ரன் எடுக்கவே இல்லை. மொத்தம் 39 ரன்களை மட்டுமே சேர்த்தனர்.
குறிப்பாக, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே ஆகியோர் துரிதமாக ரன் சேர்க்க முடியாமல் திணறினர். அவர்களது பலவீனத்தைப் புரிந்து கொண்ட குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்துவீச்சாளர் அல்ஜார் ஜோசப்பை பயன்படுத்தி அவர்களைத் திணறடித்தார். ராயுடு, துபே ஆகிய இருவரின் மந்தமான ஆட்டம் சென்னை அணியின் ரன் ரேட்டை வெகுவாகப் பாதித்தது.
அம்பத்தி ராயுடு 12 பந்துகளில் 12 ரன்னும், ஷிவம் துபே 18 பந்துகளில் 19 ரன்னும் மட்டுமே எடுத்தனர். ஒருபுறம் ருதுராஜ் கெயிக்வாட் சரவெடியாக வெடித்துக் கொண்டிருக்க, இவர்களோ பந்துகளை வீணாக்கினர். இதனால், ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ரன்களில் அடங்கிப்போனது.

பட மூலாதாரம், ANI
சிக்சரை அபாரமாக செயல்பட்டு தடுத்த வில்லியம்சன்
ருதுராஜ் கெயிக்வாட் அடித்த ஒரு சிக்சரை தடுத்து நிறுத்திய கேன் வில்லியம்சன் அதற்கான விலையாக களத்தை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆம், பவுண்டரி எல்லையில் நின்றிருந்த வில்லியம்சன் துள்ளிக் குதித்து பந்தை கேட்ச் செய்தார்.
அப்போது அந்தரத்தில் இருந்த அவர், எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டதால் பந்தை களத்திற்குள் எறிந்துவிட்டு கீழே குதிக்க முயன்றார்.
ஆனால் வில்லியம்சன் எதிர்பார்த்தபடி நடக்காத அதேநேரத்தில், அவரும் கீழே எக்குத்தப்பாக விழுந்ததில் காயமடைந்தார். கால் முட்டியில் அடிபட்டதால் களத்தைவிட்டு வில்லியம்சன் வெளியேறினார்.
அசத்தல் ஃபார்மை தொடரும் சுப்மன் கில்
சவாலான இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்சுக்கு சுப்மன் கில் - விருத்திமான் சாஹாவின் கூட்டணி அசத்தல் தொடக்கம் தந்தது. கடந்த ஓராண்டாக ஒருநாள், டி20 போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் அதை ஐபிஎல் போட்டியிலும் தொடர்ந்தார்.
ஆரம்பத்தில் விருத்திமான் சாஹா அதிரடி காட்ட, சுப்மன் கில் களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தினார்.
விருத்திமான் சாஹா அவுட்டாகி வெளியேறிய பிறகு, அணியின் ரன் ரேட்டை பராமரிக்கும் பொறுப்பை சுப்மன் கில் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அல்லது சிக்சர்களை அவர் பறக்கவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் ரேட் 10க்கும் மேலாகவே எப்போதும் இருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
'இம்பாக்ட்' பிளேயர் விதியை சரியாக பயன்படுத்திய குஜராத் அணி
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பாக்ட் பிளேயர் விதியை குஜராத் டைட்டன்ஸ் அணி திறம்பட பயன்படுத்திக் கொண்டது. ஃபீல்டிங்கின்போது காயமடைந்து வெளியேறிய, உலகத்தரம் வாய்ந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சனை 'இம்பாக்ட்' பிளேயராக பயன்படுத்தி தனக்குத் தேவையான இம்பாக்டையும் பெற்றுக்கொண்டது குஜராத் டைட்டன்ஸ்.
சாஹா ஆட்டமிழந்ததும் உள்ளே வந்த சாய் சுதர்சன், தொடக்கம் முதலே அதிரடி காட்டி அணியின் உத்வேகம் சற்றும் குறையாமல் பார்த்துக் கொண்டார். அவரது அதிரடி ஆட்டத்தால் சுப்மன் கில் களத்தில் அவசரப்படாமல் ஆசுவாசமாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். சாய் சுதர்சன் எடுத்த 23 ரன்களும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் எடுக்கப்பட்டவை என்பதால் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாகவே அமைந்தன.
இம்பாக்ட் பிளேயர் விதியால் உள்ளே வந்த சாய் சுதர்சனின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணிக்கு நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இல்லாத குறையே தெரியாமல் போனது. அதேநேரத்தில், மறுபுறம் சென்னை அணி இம்பாக்ட் பிளேயர் வசதியை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பதும் ஒப்பு நோக்கத்தக்கது.
குஜராத் அணி காயம்பட்ட உலகத் தரம் வாய்ந்த வீரருக்கு மாற்றாக உள்ளூர் வீரரை இம்பாக்ட் பிளேயராக வெற்றிகரமாகப் பயன்படுத்தியது என்றால், சென்னை அணியோ தனது பலவீனத்தைச் சரிக்கட்ட அந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டது. ஆனால், அதில் சென்னை அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
மீண்டும் வெளிப்பட்ட சென்னை அணியின் பலவீனம்
சென்னை அணிக்கு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் இல்லாத குறை மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பவர் பிளே மற்றும் இறுதிக்கட்டத்தில் டெத் ஓவர்களை வீசுவதற்குத் தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களின் தேவையை இந்த ஆட்டம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியது.
முதல் பாதி ஆட்டம் அதாவது சென்னை அணியின் பேட்டிங் முடிந்ததும், அம்பத்தி ராயுடுவுக்குப் பதிலாக இம்பாக்ட் பிளேயராக உள்ளே கொண்டுவரப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷார் பாண்டேவால் ஆட்டத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
இன்னும் சொல்லப் போனால், துஷார் பாண்டேவின் பந்துகளை குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் வெளுத்து வாங்கினர். 3.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய துஷார் பாண்டே 51 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார்.
அதுவும், ஆட்டத்தின் 15வது ஓவரில் 5வது பந்தை சிக்சருக்கு விளாசிய சுப்மன் கில், கடைசி பந்தையும் சிக்சருக்கு விளாச முற்பட்டு எல்லைக் கோடு அருகே கேட்ச் கொடுத்தார். ஆனால், அதற்குள் சென்னை அணிக்குப் போதுமான சேதத்தை அவர் விளைவித்திருந்தார்.
குஜராத் அணி இலக்கைத் துரத்துகையில், ஆட்டம் சென்னை வசம் போகிறதோ என்று ரசிகர்களை எண்ண வைத்தவை, சுப்மன் கில் அவுட்டான பிறகு வந்த 2 ஓவர்கள்தான். ஆனால், சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததற்கான விலையை சென்னை அணி கொடுத்தது.
ஃபீல்டிங்கில் கோட்டை விட்ட ஸ்டோக்ஸ் - கான்வே
அத்துடன், சென்னை அணியின் பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை. குறிப்பாக, சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு குஜராத் அணி மீது மெல்ல அழுத்தம் படியத் தொடங்கியபோது சென்னை அணி ஃபீல்டர்கள் மன்னிக்க முடியாத தவறைச் செய்தார்கள்.
16வது ஓவரில் சாண்ட்னர் வீசிய பந்தை விஜய் சங்கர் ஓங்கி அடிக்க, எல்லைக்கோடு அருகே பந்தை நோக்கி விரைந்து வந்த பென் ஸ்டோக்ஸும், டெவோன் கான்வேவையும் யார் பிடிப்பது என்ற குழப்பத்தில் கோட்டை விட்டனர்.
சரியான புரிதல் இல்லாமல் சர்வதேச வீரர்கள் செய்த இந்தத் தவறால் குஜராத் அணிக்கு கிடைத்த 4 ரன்கள் முக்கியமானவை. இதனால், களத்தில் செட்டிலாமல் இருந்த விஜய் சங்கர் - ராகுல் தெவாதியா இணை மீதிருந்த அழுத்தம் சற்று குறைந்தது.
பென் ஸ்டோக்ஸ் - கான்வே இருவரும் தவறான புரிதலால் பந்தை கோட்டைவிட்டதை சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பேட்டிங்கில் அதகளப்படுத்திய ரஷித் கான்
கடந்த ஐபிஎல் தொடர்களில் கடைசி நேரத்தில் காட்டடி அடித்து அணிக்கு வெற்றித் தேடித் தந்த வரலாறு கொண்ட அபாயகரமான பேட்ஸ்மேனான ராகுல் தெவாதியாவால் பெரிய அளவில் விளாச முடியவில்லை. எனினும், விஜய் சங்கர் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் விளாசி, அணியின் ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டார்.
18வது ஓவரின் கடைசிப் பந்தில் விஜய் சங்கர் அவுட்டாக, குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டன. தீபக் சாஹர் வீசிய 19வது ஓவரில் 2வது பந்து லெக் பை முறையில் குஜராத் அணிக்கு 4 ரன்களை பெற்றுக் கொடுத்தது. தோனி வலதுபுறம் டைவ் அடித்து பிடிக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது.
விஜய் சங்கருக்குப் பதிலாக களமிறங்கிய ரஷித் கான், பரபரப்பான கட்டத்தில் எந்தவொரு பதற்றமும் இன்றி விளையாடினார். 19வது ஓவரில் 4வது பந்தை எதிர்கொண்ட அவர் முதல் பந்திலேயே அநாயசமாக சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். அடுத்த பந்தையும் பவுண்டரி அடித்தன் மூலம் இலக்கைத் துரத்துவதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இருந்த நெருக்கடியை ஒட்டுமொத்தமாக அவர் இல்லாமல் போகச் செய்துவிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
மாறுபட்ட பிரச்னைகளை ஹர்திக், தோனி கையாண்டது எப்படி?
சிறந்த வேகப்பந்துவீச்சாளரே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, வேறு வழியின்றி கடைசி ஓவரை துஷார் தேஷ்பாண்டேவுக்கு கொடுத்தார்.
கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், அதுவரையிலும் களத்தில் துரிதமாக ரன் சேர்க்கத் திணறிக் கொண்டிருந்த ராகுல் தெவாதியா, துஷார் பாண்டே வீசிய முதலிரு பந்துகளையும் முறையே சிக்சர், பவுண்டரி விளாசி குஜராத் அணிக்கு நடப்பு ஐ.பி.எல். தொடரை தித்திப்பாகத் தொடங்கி வைத்தார்.
சென்னை அணி கேப்டன் தோனிக்குப் பயன்படுத்த சிறந்த வேகப்பந்துவீச்சாளரே இல்லை என்றால், மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிரச்னை வேறானதாக இருந்தது.
அதாவது, அவரது அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் நிறைய இருந்ததால் யாரைப் பயன்படுத்துவது என்ற நெருக்கடி அவருக்கு இருந்தது. போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவரே இதனை ஒப்புக் கொண்டார்.
கடந்த முறை பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி குஜராத் அணிக்கு துருப்புச் சீட்டாகத் திகழ்ந்த முகமது ஷமியை தொடக்கத்திலேயே முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஹர்திக் பாண்ட்யாவால் முடிந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு தாக்குதலை தலைமையேற்று நடத்தும் அல்ஜாரி ஜோசப்பை, பிற்பாதியில்தான் அவர் பயன்படுத்தினார். அவர் வீசிய முதல் ஓவரில் ருதுராஜ் 3 சிக்சர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார்.
ஆனால், தான் ஒரு சர்வதேச வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக மீண்டு வந்த ஜோசப், அடுத்து வந்த 3 ஓவர்களையும் சிறப்பாக வீசி சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
200 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியை 178 ரன்களுக்குள் அடக்கியதில் ஜோசப்பின் சிறப்பான பந்துவீச்சுக்கும் முக்கிய பங்கு உண்டு.
சென்னை அணிக்கு நம்பிக்கை தரும் விஷயம் ஒன்று உண்டென்றால், அது ருதுராஜ் கெயிக்வாட் முதல் போட்டியிலேயே அசத்தல் ஃபார்மில் இருப்பதும், அறிமுக வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்ஹரும் சிறப்பான பந்துவீச்சும் தான்.
அறிமுக ஆட்டத்திலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர் ஹங்கர்ஹர் முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு பலம் சேர்த்தார். 4 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












