ஐபிஎல் பற்றிய இந்தக் கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியும்?

பட மூலாதாரம், IPL/BCCI
- எழுதியவர், அபிஜீத் ஸ்ரீவாஸ்தவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஐபிஎல் என கூறப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகளைச் சேர்ந்த 243 கிரிக்கெட் வீரர்கள் 52 நாட்களுக்கு தங்களுக்குள் போட்டியிடுவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது அது தொடர்பான செய்திகள் களத்தில் மட்டுமின்றி தொலைக்காட்சி, OTT, சமூக வலைதளங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதை நாம் பார்க்க முடிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தையாக ஐபிஎல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுளில் ஐபிஎல் பற்றி மக்கள் என்ன தேடுகிறார்கள், அவற்றில் சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் உங்களுக்காக இங்கே வழங்குகிறோம்.எனவே இந்த கேள்விகளில் எத்தனை கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியும் என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஐபிஎல்லின் முழு பெயர் என்ன?
ஐபிஎல்லின் முழுப் பெயர் இந்தியன் பிரீமியர் லீக். ஐபிஎல் ஒரு கிரிக்கெட் லீகாக விளையாடப்படுகிறது, இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதாவது BCCI ஆல் நடத்தப்படுகிறது.
ஐபிஎல் எப்போது தொடங்கியது? முதல் முறையாக கோப்பையை வென்ற அணி எது?
ஐபிஎல், 2008 இல் தொடங்கியது. முதல் சீசனில் எட்டு அணிகள் பங்கேற்றன. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெக்கன் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின.
முதல் சீசனின் இறுதி ஆட்டம் வரை மொத்தம் 59 போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்ட்டி 2008 ஜூன் 1 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கேப்டன் செளரவ் கங்குலி வெற்றி பெற்ற நிலையில், கோப்பையை கைப்பற்றிய முதல் கேப்டனாக ஷேன் வார்ன் ஆனார்.

பட மூலாதாரம், Getty Images
முதல் ஐபிஎல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடந்தது?
முதல் ஐபிஎல் ஆட்டம் 2008 ஏப்ரல் 18 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. கொல்கத்தா அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது.
அந்த போட்டியில் பெங்களூரு அணியின் ஆட்டம் பரிதாபகரமாக இருந்தது. அந்த அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரே ஒரு பெங்களூரு பேட்ஸ்மேன் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எடுத்தார்.(பிரவீன் குமார் 18 ரன்கள்).
140 ரன்கள் வித்தியாசத்தில் பெறப்பட்ட இந்த வெற்றி, அடுத்த எட்டு சீசன்களுக்கான ஐபிஎல்-ல் மிகப்பெரிய வெற்றிக்கான சாதனையாக இருந்தது.
ஐபிஎல்லில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனை என்ன?
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படைத்த சாதனையை எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலியின் அணி முறியடித்தது.
2016ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ் அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தாவின் எட்டு ஆண்டு கால சாதனையை உடைத்தது.
இருப்பினும் பெங்களூரின் இந்த சாதனையை 2017 இல் மும்பை இந்தியன்ஸ் முறியடித்தது. அந்த அணி டெல்லி கேபிட்டல்ஸை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது இன்னும் ஐபிஎல்லில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையாக தொடர்கிறது.

பட மூலாதாரம், BCCI
குறைந்த ரன்களில் வெற்றி
ஐபிஎல்லில் மிக்குறைவான ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி என்ற முதல் சாதனை 2008-ம் ஆண்டு நடைபெற்ற 45-வது போட்டியில் படைக்கப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மும்பை இண்டியன்ஸ் அணியை வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆனால், அதன் பிறகு மீண்டும் 10 போட்டிகளில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் வந்தன. அதாவது, இதுவரை ஐபிஎல்லில் 11 முறை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் ஒரு அணி 10 முறை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எட்டு போட்டிகளில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.
ஐபிஎல்லில் முதல் சிக்ஸர் அடித்தவர் யார்?
ஐபிஎல்லின் முதல் சிக்ஸர் 2008 ஆம் ஆண்டின் முதல் போட்டியில் பிரண்டன் மெக்கலத்தின் மட்டையிலிருந்து வந்தது. முதல் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் இந்த சிக்சர் அடிக்கப்பட்டது. முதல் சிக்சர் அடிக்கப்பட்ட அந்த பந்தை வீசியவர் ஜஹீர் கான்.
ஜஹீரின் இந்த ஓவரில் மெக்கல்லம் முதலில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்தார். அதாவது முதல் பவுண்டரி மற்றும் முதல் சிக்சரை அடித்த பேட்ஸ்மேன் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் முதல் பவுண்டரி மற்றும் சிக்சரை கொடுத்த பந்துவீச்சாளர் ஜஹீர் கான்.
ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தவர் யார்?
வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் 357 சிக்ஸர்களை அடித்து சாதனையை செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ரோகித் ஷர்மா (240 சிக்சர்கள்) மற்றும் நான்காவது இடத்தில் மகேந்திர சிங் தோனியும் (229 சிக்சர்கள்) உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல்லில் அதிக பவுண்டரிகளை அடித்தவர் யார்?
ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 701 பவுண்டரிகளை அடித்துள்ளார். விராட் கோலி (578) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (561) 3வது இடத்திலும், ரோஹித் ஷர்மா (519 பவுண்டரிகள்) நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா (506 பவுண்டரிகள்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல்லில் முதல் சதம் அடித்தவர் யார்?
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்தது பிரெண்டன் மெக்கல்லம் (கேகேஆர் அணி). மெக்கல்லம் 73 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் எடுத்தார்.
மெக்கல்லத்தை தொடர்ந்து 2008ல் மைக்கேல் ஹஸ்ஸி (சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 116 நாட் அவுட்), ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக 117 நாட் அவுட்), ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் சதம் அடித்தனர்.
ஐபிஎல்லில் மிக அதிக ஸ்கோரையும், குறைந்த பந்துகளில் சதம் அடித்தவரும் யார்?
ஐபிஎல்லின் மிகப்பெரிய ஸ்கோர் கிறிஸ் கெயில் பெயரில் உள்ளது. 2013 இல் புனே வாரியர்ஸுக்கு எதிராக கெயில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார்.அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். இது இன்றுவரை ஐபிஎல்லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.
இந்தப் போட்டியில், கெய்ல் வெறும் 30 பந்துகளில் சதம் அடித்தார். இது இன்றுவரை ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடிக்கப்பட்ட சாதனையாகும்.
கெய்லுக்கு முன் இந்த சாதனை ராஜஸ்தான் ராயல்ஸின் யூசுப் பதானின் பெயரில் இருந்தது. பதான் 2010ல் மும்பை இண்டியயன்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல்லில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன் யார்?
2022 வரை ஐபிஎல்லில் மொத்தம் 75 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக எட்டு சதங்கள் 2022 லும், குறைந்தபட்சமாக இரண்டு சதங்கள் 2009 இலும் அடிக்கப்பட்டன.
ஐபிஎல்லில் மொத்தம் 6 சதங்கள் அடித்த கிறிஸ் கெய்லின் பெயரில் அதிக தனிநபர் சதங்கள் அடித்த சாதனையும் உள்ளது.
விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் 5 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
மறுபுறம் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், கேஎல் ராகுல் ஆகியோர் தலா 4 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ஐபிஎல்லில் அதிக பூஜ்ஜியங்கள் பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?
ரோஹித் ஷர்மா மற்றும் மன்தீப் சிங் ஆகிய இருவருமே 14 முறை டக் அவுட்டாகினர்.
அதே நேரத்தில் 13 முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் ஆறு வீரர்கள் உள்ளனர். இவர்கள் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே மற்றும் பார்த்தீவ் படேல்.
ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்தவர் யார்?
விராட் கோலி இதுவரை 223 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6,624 ரன்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் படைத்துள்ளார்.
ஷிகர் தவான் (6244 ரன்கள்), டேவிட் வார்னர் (5881 ரன்கள்), ரோஹித் ஷர்மா (5879 ரன்கள்), சுரேஷ் ரெய்னா (5528 ரன்கள்) ஆகியோர் விராட்டுக்குப் பிறகு அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றனர்.
ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் யார்?
அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
லசித் மலிங்கா (170 விக்கெட்) இரண்டாவது இடத்திலும், அமித் மிஷ்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் 166 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும், பியூஷ் சாவ்லா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 157 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

பட மூலாதாரம், IPL/BCCI
ஐபிஎல்லில் டாட் பால்களை வீசுவதில் யார் முன்னணியில் இருக்கிறார்கள்?
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்பட்டாலும், சில பந்து வீச்சாளர்கள் தங்கள் சிறந்த பந்துவீச்சால் அனைவரையும் கவர்கின்றனர்.
அவர்களது எகானமி மிகவும் சிறந்தது என்று இதற்கு அர்த்தமல்ல. மாறாக அவர்கள் தங்கள் ஒவ்வொரு பந்திலும் ரன்கள் எடுக்க அனுமதிப்பதில்லை.
ஐபிஎல்லில் அதிக டாட் பால்களை வீசிய பந்துவீச்சாளர்களைப் பற்றி நாம் பேசுகிறோம்.
புவனேஷ்வர் குமார் 1406 டாட் பால்களுடன் முதலிடத்திலும், சுனில் நரேன் 1392 டாட் பால்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1387 டாட் பால்களை போட்டுள்ளார்.
ஐபிஎல்லில் அதிக ஸ்கோர் அடித்த அணி எது?
10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013 ஏப்ரல் 23 அன்று பெங்களூருவில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு மறக்கமுடியாத போட்டியில் விளையாடியது. அன்று பல பெரிய சாதனைகள் படைக்கப்பட்டன.
இதே ஆட்டத்தில்தான் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து, அதிவேக சதம் மற்றும் அதிக தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்தப் போட்டியில் பெங்களூர் அணி 263 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் எடுக்காத மிகப்பெரிய ஸ்கோராகும்.

பட மூலாதாரம், ANI
ஐபிஎல்லில் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் மற்றும் பந்துவீச்சு எகானமியில் சாதனை படைத்தவர் யார்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் 177.88 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஐபிஎல்லில் ஒரு பேட்ஸ்மேனின் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டின் சாதனை இதுவாகும்.
பந்துவீச்சில் சிறந்த எகானமி பற்றி பேசினால், ரஷீத் கான் 6.38 என்ற எகானமி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் 2023 யின் அட்டவணை என்ன? எந்தப் போட்டி எப்போது, எங்கு, யாருக்கு இடையே நடக்கும்?
ஐபிஎல் 2023 தொடரின் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மார்ச் 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 70 லீக் ஆட்டங்களும், நான்கு பிளேஆஃப் போட்டிகளும் நடைபெறும்.
இந்தப் போட்டிகள் அகமதாபாத், மொஹாலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மஷாலா ஆகிய 12 நகரங்களில் நடைபெறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












