ரூ.1 கோடி காப்பீட்டு தொகைக்காக நண்பரை கொன்ற ஜிம் மாஸ்டரை சிக்க வைத்த செல்போன்

கடந்த செப்டம்பர் மாதம், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டரான சுரேஷ்குமார்(38) செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அந்தக் காலகட்டத்தில் அவருடைய நண்பரும் எண்ணூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநருமான டெல்லி பாபு(39) என்பவரும் காணாமல் போனார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட டெல்லி பாபு வீடு திரும்பவில்லை.
இதனால் டெல்லி பாபுவை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி அவரது தாயார் லீலாவதி செப்டம்பர் 23ஆம் தேதியன்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மகனின் நண்பர் என்ற முறையில், இறந்துபோன சுரேஷின் உடலுக்கு டெல்லி பாபுவின் தாயார் லீலாவதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த இருவேறு சம்பவங்களுக்கு இடையே என்ன தொடர்பு? எரிந்த நிலையில் சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டதற்கும் செப்டம்பர் 16ஆம் தேதியன்று டெல்லி பாபு காணாமல் போனதற்கும் என்ன தொடர்பு?
உயிருடன் திரும்பிய சுரேஷ்

தனது மகனைக் காணவில்லை என்று அளித்த புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டெல்லி பாபுவின் தாயார் லீலாவதி ஆட்கொணர்வு மனு ஒன்றை நவம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி பாபுவைக் கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட்டது. இதற்குப் பிறகு காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்தது. காணாமல்போன டெல்லி பாபுவின் நணபர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
அப்போது, அதே காலகட்டத்தில் டெல்லி பாபுவின் நண்பரான சுரேஷ் என்பவர் அச்சரப்பாக்கத்திற்கு அருகில் உள்ள அல்லானூர் பகுதியில் இருந்த குடிசையில் உடல் முழுதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தெரிய வந்தது. இதை அந்த நேரடத்தில் தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்திருந்தனர்.
டெல்லி பாபு வழக்கை விசாரிக்கும்போது, அதே காலகட்டத்தில் சுரேஷும் இறந்து போயிருந்ததால், அவரது செல்போன் எண்ணை போலீசார்ர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் அரக்கோணம் பகுதியில் செயல்பாட்டில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார்ர், அரக்கோணம் சென்றனர்.
அங்கு ஓரிடத்தில், சுரேஷ் தனது நண்பர்கள் ஹரி கிருஷ்ணன், கிரி ராஜன் ஆகியோருடன் தங்கியிருப்பது தெரிய வந்தது. ஏற்கெனவே இறந்து போனதாகக் கருதப்பட்ட சுரேஷ் உயிருடன் இருந்ததால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரையும் அவருடைய நண்பர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில்தான் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தன் நண்பர்களுடன் இணைந்து டெல்லி பாபுவை சுரேஷ் கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்தக் கொலையை சுரேஷ் எப்படி திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதை விவரித்தனர்.
உருவ ஒற்றுமை கொண்ட நபருக்கான தேடுதல் வேட்டை

இந்த விசாரணையில்தான் சுரேஷ் ஒரு கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்திற்காக தனது நண்பர்களுடன் இணைந்து டெல்லி பாபுவைக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்கள் சுரேஷ் எப்படி இதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார் என்பது குறித்து விசாரணையில் கிடைத்த தகவல்களை விவரித்தனர்.
ஜிம் மாஸ்டரான சுரேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு விபத்துக் காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், அந்தப் பணத்தைக் குறுக்கு வழியில் பெறுவதற்காக சுரேஷ் தனது நண்பர்களான கீர்த்தி ராஜன், ஹரி கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அந்தக் காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக சுரேஷை போலவே இருக்கும் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, சுரேஷ்தான் இறந்துவிட்டதாகச் சொன்னால் காப்பீட்டுப் பணம் கிடைக்கும் என அவர்கள் திட்டமிட்டனர்.
இதற்காக ஜிம் மாஸ்டர் சுரேஷ் போலவே தோற்றமளிக்கும் ஒருவரை அவர்கள் தேடினர். அப்போதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த டெல்லி பாபுவின் நினைவு அவருக்கு வந்துள்ளது. அவர் எண்ணூரில் வசிக்கும் தகவல் தெரிய வரவே, அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர்.
காப்பீட்டு பணத்திற்காக நடந்த கொலை

அவரைத் தேடிக் கண்டுபிடித்து நண்பரான பிறகு, டெல்லி பாபுவை அழைத்துக்கொண்டு சுரேஷும் அவரது நண்பர்களும் புதுச்சேரி சென்றனர். அங்கிருந்து பிறகு முன்பே திட்டமிட்டிருந்த குடிசை வீட்டுக்கு அவரை அழைத்துக்கொண்டு அனைவரும் சென்றதாக விவரித்தார் விசாரணை அதிகாரி.
அந்தக் குடிசையில் வைத்துதான் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் டெல்லி பாபுவை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு உடலை எரித்துவிட்டு, சுரேஷ் தலைமறைவனார். டெல்லி பாபுவின் உடலைக் காட்டி அவர் சுரேஷ் இறந்துவிட்டதாக செய்தி பரப்பப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, “சுரேஷ் தனது நண்பர்களின் மூலமாக தனியார் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி பணத்தைப் பெற முயன்றார். அப்போது சுரேஷின் மரணம் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தற்கொலை எனப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் காப்பீட்டுப் பணத்தைத் தர முடியாது என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்தால் சுரேஷும் அவரது நண்பர்களும் அரக்கோணம் பகுதிக்குச் சென்று பதுங்கியிருந்தார்கள். அங்குதான் அவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர்,” என்று கூறினார் காவல்துறையைச் சேர்ந்த இந்த வழக்கின் விசாரணை அதிகாரி.
மகன் உடல் எனத் தெரியாமல் அஞ்சலி செலுத்திய தாயின் வேதனை

சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் பரவியதும், டெல்லி பாபுவின் சகோதரரும் அவரது தாயும் நேரில் சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது சுரேஷின் உடல் எனத் தாங்கள் அஞ்சலி செலுத்தியது, தமது மகன் டெல்லி பாபுவுக்கு என்பது தெரிய வந்ததும் அவரது தாயார் டெல்லி பாபு நொறுங்கிப் போய்விட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரம் பற்றிப் பேசுவதற்கு டெல்லி பாபுவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஆனால், சுரேஷின் தாயார் மேரியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி பாபுவின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












