நார்வே: வைக்கிங் மக்களின் வாழ்க்கை முறை பற்றி 1,700 ஆண்டுகள் கழித்து வெளிப்பட்ட ரகசியம்

நார்வே: வைக்கிங் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? 1,700 ஆண்டுகள் கழித்து வெளிப்பட்ட ரகசியம்

பட மூலாதாரம், Getty Images

காலநிலை நெருக்கடி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதையும் கடல் மட்டம் உயர்ந்து வருவதையும் பல ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. குறுகிய கால இடைவெளிகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்கள் காலநிலை நெருக்கடிகளால்தான் நிகழ்கின்றன என ஆராய்ச்சியாளர்களும் சூழலியல் ஆர்வலர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இப்படியிருக்கையில், நார்வே மலைகளில் உள்ள பனிப்பாறைகள், பனிக்கட்டிகள், உருகி வருவதால், பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்திருந்த ஆயிரக்கணக்கான பழங்கால கலைப்பொருட்கள் வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் மீட்டு வருகின்றனர்.

இதனால், இப்பகுதிகளுக்கு அதிகமான தொல்லியல் ஆய்வாளர்கள் வருகை தருகின்றனர். பனிப்பாறைகளில் தொல்லியல் ஆய்வு செய்வது ஒரு புதிய துறையாகவே அங்கு உருவாகி வருகிறது. அங்கு புதைந்துள்ள கலைப் பொருட்களைக் காப்பாற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.

நார்வே பனிப்பாறைகள்

அப்படி அந்த பனிப்பாறைகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்ட குழுவினரிடம் பேசினோம். அக்குழுவில் ஒருவரான ஜூலியன் ராபர்ட் போஸ்ட்-மெல்பை, தெற்கு - மத்திய நார்வேயில் அமைந்துள்ள லென்ட்ப்ரீன் பகுதியில் அத்தகைய பனிப்பாறைகள் அடங்கிய இடத்திலிருந்து பேசினார்.

பழங்கால வேட்டைக் கருவிகள்

"இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1,650 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நாங்கள் முன்பு களப்பணியில் இருந்தபோது பார்த்த கடைசி பனிப்பாறையும் முன்பைவிட இப்போது வேகமாக உருகி வருகிறது," எனத் தெரிவித்தார்.

நார்வேயின் இன்லேன்டெட் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தொல்லியல் ஆய்வாளரான எஸ்பென் ஃபின்ஸ்டட் கூறுகையில், குளிர்காலத்தில் தோன்றும் பனி, ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து அம்மாத மத்தியிலேயே உருகிவிடுவதாகத் தெரிவிக்கிறார். அதனால் பனிப்பாறைகளுக்கு அடியில் உள்ள கலைப்பொருட்களை மீட்கும் பயணத்தில் தாங்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிடுவதாகக் கூறுகிறார்.

நார்வே பனிப்பாறைகள்

"நான் இங்கு 2006இல் முதன்முறையாக வந்தேன். மேலே இருந்த பனிப்பாறைகள் உருகி அதன் உயரம் குறைந்து கீழே வந்துவிட்டது. சுமார் 200 - 300 மீட்டர் உயரம் கொண்ட பனிப்பாறைகள் உருகியிருக்கின்றன. 18 ஆண்டுகளில் சுமார் 70 சதவீத பனிக்கட்டிகள் உருகியுள்ளன," என்றார் அவர்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அக்குழுவினர் அப்பகுதியில் இருந்து குச்சி போன்ற பழங்கால பொருள் ஒன்றைக் கண்டறிந்தனர். அது, கலைமானை (Reindeer) வேட்டையாடப் பயன்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

மேலும், சுமார் 1,500 ஆண்டுகளாக அது அங்கு புதைந்திருக்கலாம் என்றும் சமீபத்தில்தான் பனிப்பாறைகள் உருகி வெளிப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

வைக்கிங் வரலாற்றைப் பாதுகாத்து வைத்த பனிப்பாறைகள்

நார்வே பனிப்பாறைகள்

எஸ்பென் ஃபின்ஸ்டட் கூறுகையில், "லென்ட்ப்ரீன் மிக அற்புதமான இடம். இது மலைக்குச் செல்வதற்கான வழித்தடமாக இருக்கிறது. இந்தப் பாதை கி.பி. 200இல் இருந்து இருந்திருக்கலாம். அதாவது, வைக்கிங் காலத்தில் போக்குவரத்துப் பாதையாக இது இருந்திருக்கலாம். அதன் பின்னர் இந்தப் பாதை மறக்கப்பட்டுவிட்டது," என்றார்.

பல வித்தியாசமான 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய பொருட்களைத் தாங்கள் கண்டறிந்ததாக அக்குழுவினர் கூறுகின்றனர். வரலாற்றில் மலைகளின் முக்கியத்துவம் குறித்த கதைகளை அந்தப் பொருட்கள் கூறுவதாக எஸ்பென் தெரிவிக்கிறார். மேலும், இந்தப் பாதை `வைக்கிங் கால நெடுஞ்சாலை` என்று வர்ணிக்கிறார்.

இரும்பினால் ஆன குதிரை கடிவாளமும் இங்கு கண்டெடுக்கப்பட்டதாக ஜூலியன் ராபர்ட் தெரிவிக்கிறார். இது மிகவும் அரிதானது எனக் கூறும் அவர், 1,000 ஆண்டுகளுக்கும் மேல் இது பழமையானதாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

மேலும் கூறிய ஜூலியன் ராபர்ட், "இந்தப் பகுதியை வரலாற்றுக்கு முந்தைய `ஃப்ரீசர்` (freezer) என்றே சொல்லலாம். அந்தப் பொருட்கள் பனியில் உறைந்திருக்கின்றன. அதனால், அவை அழியவில்லை. இந்தப் பொருட்களை மிக விரைவில் பாதுகாக்க வேண்டும். வருங்கால தலைமுறையினருக்கு இவற்றைப் பாதுகாப்பதற்குச் சிறு வாய்ப்பு மட்டுமே உள்ளது," என்றார்.

வைக்கிங் மக்களின் மிகப் பழமையான ஆடை

நார்வே பனிப்பாறைகள்

கண்டெடுக்கப்பட்ட இந்தப் பொருட்களை மிகக் கவனமாக மலையில் இருந்து கீழே கொண்டு வந்து ஆஸ்லோவில் உள்ள அருங்காட்சியகத்தில் சேர்க்க வேண்டியது அடுத்தகட்ட வேலை. அங்கு விதவிதமான ஆய்வுகள் நடக்கும்.

இந்த ஆய்வில் 1,700 ஆண்டுகள் பழமையான முழு அங்கியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது நார்வேயின் மிக மிகப் பழமையான ஆடையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்த கண்காட்சி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு, வைக்கிங் கால வாள்கள் முதல் பனிகளில் செல்லும் குதிரைகளுக்குப் பயன்படுத்தப்படும் காலணிகள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் ஆரம்பத்தில் இடைக்கால மற்றும் இரும்புக் கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தற்போது அதைவிட பழமையான பொருட்கள் கிடைத்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐரோப்பாவிலேயே இங்கு மட்டும்தான் 6,000 ஆண்டுகள் பழமையான வேட்டையாடும் கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

7,000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷங்கள்

நார்வே பனிப்பாறைகள்

எஸ்பென் ஃபின்ஸ்டட் கூறுகையில், "இங்கு 1,300 ஆண்டுகள் பழமையான பனிச்சறுக்கு ஸ்கேட்டிங் போர்டுகள் கிடைத்துள்ளன. வைக்கிங் மற்றும் வெண்கல காலத்தைச் சேர்ந்த காலணிகளும் ரோமானிய நாகரிகத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட காலணிகளும் கிடைத்துள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்தும் மலைகளின் பயன்பாடு மற்றும் பயணம் குறித்த அனைத்துப் புரிதல்களையும் மாற்றிவிட்டன," என்றார்.

இங்குள்ள பனிப்பாறைகள் காலநிலை நெருக்கடி காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வால் வேகமாக உருகி வருவதாக அவர் கூறுகிறார்.

இந்தப் பனிப்பாறைகள் அடுத்த 20-40 ஆண்டுகளில் முழுவதும் உருகிவிடும் எனத் தெரிவிக்கும் ஜூலியன் ராபர்ட், அவை இங்கு சுமார் 7,000 ஆண்டுகளாக இருந்ததாகக் கூறுகிறார்.

"இங்கு ஒவ்வொரு புதிய பொருளைக் கண்டெடுக்கும்போதும் என் இதயம் வேகமாகத் துடிக்கும். ஆனால், அடுத்த 50 ஆண்டுகளில் இந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போது எனக்கு கவலை ஏற்படுகிறது. ஆனால், நாங்கள் இங்கு சில பொருட்களைப் பாதுகாக்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சி," என்றார் எஸ்பென் ஃபின்ஸ்டட்.

பிபிசி ரீல்ஸ் பகுதியில் கேமெலியா சடெக்ஸடே தயாரித்த காணொளியின் அடிப்படையில் எழுதப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)