உலகக்கோப்பை 2023: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இலங்கை - யாருக்கு பலம் அதிகம்?

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை நான்காவது லீக் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. இதில், இலங்கை – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது இலங்கை அணி.
தொடர்ந்து நடந்த உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.
இரு அணிகளின் பலம் என்ன ?

பட மூலாதாரம், Getty Images
பேட்டிங்கில் ஓரளவு பலமாக உள்ள இலங்கை அணி, பந்துவீச்சில் முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாததால், சற்றே பின்தங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி, இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
உலகக்கோப்பை போட்டிகளின் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தமை, உலகக்கோப்பை மீதான இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பை இல்லாது செய்துள்ளதாகக் கூற முடிகின்றது.
முதலாவது பயிற்சிப் போட்டியில் வங்கதேசம் அணியுடன் இலங்கை அணி தோல்வியை சந்தித்ததுடன், இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் தோல்வியைத் தழுவியது.
இவ்வாறு எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் இலங்கை அணியின் தயார் நிலைகள் தொடர்பில் பிபிசி தமிழுக்கு, விளையாட்டு ஊடகவியலாளர் அப்துல் ரகுமான் கருத்து தெரிவித்தார்.
''தென்னாபிரிக்க அணியுடனான முதல் போட்டி, இலங்கை அணிக்கு கடுமையான சவால் நிறைந்த போட்டியாக அமையும். அதற்குக் காரணம், இரண்டு பயிற்சி போட்டிகளிலும் இலங்கை அணி கடுமையான தோல்வியைச் சந்தித்திருந்தது.
அது லேசான தோல்வி அல்ல. படுதோல்வி அடைந்தது. இலங்கை அணியின் பேட்டிங்கை, ஆசியக் கோப்பை தொடர் மாத்திரமல்ல, அதற்கு முந்தைய தொடர்களிலிருந்தே பார்த்து வருகின்றோம்.
யாராவது ஒரு வீரர் சிறப்பாக பேட்டிங் செய்யும்போது, ஏனைய வீரர்கள் விளையாட்டைக் குழப்பி விடுவார்கள். அதனால் பேட்டிங் சீர்குலைந்து விடும். இலங்கை வீரர்களில் யாரும் நின்று, நிதானமாக பேட்டிங் செய்வதாக இல்லை. எனவே, இலங்கை அணிக்குக் கடுமையாக சவால் நிறைந்த போட்டியாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை," என அவர் பதிலளித்தார்.
இதுவரை தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பலமாக உள்ளது. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதுவரையில் தென்னாப்பிரிக்கா அணி உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால், இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு தென்னாப்பிரிக்கா அணி களம் காண்கிறது.
உலகக்கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியும் இலங்கை அணியும் இதுவரை ஆறு முறை நேருக்க நேர் மோதியுள்ளன. அதில், தென்னாப்பிரிக்கா அணி நான்கு முறையும், இலங்கை அணி ஒரு முறையும், ஒரு போட்டி சமனிலும் முடிந்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












