விராட் கோலி: ரூ.20 லட்சத்தில் தொடங்கிய ஆர்சிபி பயணம் - 19 வயது இளைஞரின் கனவு நனவான கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இதற்காக 18 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
நம்பர் ஒன் வீரர் ஒருவர் ஐபில் கோப்பையைக் கையில் ஏந்துவதைப் பார்க்க, 18 ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது தொடங்கிய இந்தக் காத்திருப்புக்கு, ஜூன் 3, 2025 அன்று விடை கிடைத்துள்ளது. 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஷஷாங்க் சிங் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடிக்கத் தவறியபோது, ஆர்சிபியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.
ஒரு முழுமையடையாத கனவு நிறைவேறிய கதையை, விராட் கோலியின் ஈரமான கண்கள் சொல்லத் தொடங்கின. அதன் பிறகு, ஒவ்வொரு பாஸிங் பந்திலும், ஆர்சிபியின் வெற்றி உறுதியானது. விராட் கோலியின் உணர்ச்சிகள் உச்சத்தை எட்டின.
சில நேரங்களில் தனது ஈரமான கண்களை மறைத்துக் கொண்டிருந்த கோலி, சில நேரங்களில் வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் ஆர்சிபி பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தவுடன், எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார் விராட்.
தரையில் மண்டியிட்டு அமர்ந்து முகத்தை கைகளால் மூடிக்கொண்டார். இந்த வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட அவர், இந்த நாள் வரவே வராது என நினைத்தேன் என்று கூறினார்.
விராட் கோலி மீது ஆர்சிபி கட்டிய பந்தயம்

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி இந்திய அணிக்காக அறிமுகமாகாத காலத்திலேயே ஆர்சிபி அவர் மீது பந்தயம் கட்டியது. ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் ஆனதைப் பற்றி விராட் கோலி கூறுகையில், இந்த வெற்றி எந்தளவுக்கு அணியைப் பற்றியதோ, அதே அளவுக்கு ரசிகர்களையும் பற்றியது என்றார்.
"பதினெட்டு வருட நீண்ட காத்திருப்பு. என் இளமை, என் விளையாட்டின் உச்சகட்டம், என் அனுபவம் என நான் அனைத்தையும் அணிக்காகக் கொடுத்தேன். இந்த நாள் வரவே வராது என்று நினைத்தேன். கடைசி பந்து வீசப்பட்டவுடன், நான் உணர்ச்சிவசப்பட்டேன்" என்று விராட் கோலி கூறினார்.
மேலும், "என்ன நடந்தாலும், நான் இந்த அணியுடன் தொடர்பில் இருந்தேன். நான் வேறு விதமாக யோசித்த தருணங்கள் இருந்தன. ஆனாலும் நான் இந்த அணியுடன் தொடர்பில் இருந்தேன். என் இதயம் பெங்களூருவுடன் உள்ளது, என் ஆன்மா பெங்களூருவுடனும், இந்த அணியுடனும் உள்ளது. நான் ஐபிஎல் விளையாடும் வரை இந்த அணியுடன்தான் இருப்பேன்," என்றார் விராட்.
இந்த வெற்றி தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த தருணங்களில் ஒன்று என்று கூறிய கோலி, "இன்று நான் ஒரு குழந்தையைப் போல தூங்கப் போகிறேன். ஏலத்திற்குப் பிறகு பலர் எங்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் எங்களிடம் இருந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். என்னைப் பற்றி ஏற்கேனவே நிறைய கூறப்பட்டுவிட்டது. இந்த வெற்றி பெங்களூருக்கானது" என்றும் தெரிவித்தார்.
முதல் சீசனில் ரூ.20 லட்சம் பெற்ற விராட்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது, அவர் உலகப் புகழ் பெற்றார்.
விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இல்லாததால், முதல் சீசனில் அவரை ஆர்சிபி ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், விராட் கோலி முதல் சீசனின் ஏலம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
"ஏலம் நடந்தபோது நாங்கள் மலேசியாவில் இருந்தோம். முதல் தர கிரிக்கெட் வீரர்களாக ரூ.20 லட்சம் சம்பளத்தில் வாங்கப்பட்டோம். எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எங்களுக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது. அதற்குப் பின்னால் ஆழமான உணர்ச்சிகள் இருந்தன," என்று அவர் கூறியிருந்தார்.

இதன் பிறகு, ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஒருபோதும் பின்னோக்கிப் பார்க்கவே இல்லை.
முதல் சீசனில் அதிக ரன்கள் எடுக்காத விராட் கோலி, 13 போட்டிகளில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆனால் 2010 வாக்கில் அவரது செயல்திறன் மேம்பட்டது. முதல் முறையாக அவரால் ஒரு சீசனில் 300 ரன்களுக்கு மேல் எடுக்க முடிந்தது.
ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2011ஆம் ஆண்டு, விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் அற்புதமாகச் செயல்பட்டு 16 போட்டிகளில் 557 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஆர்சிபி இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்சிபி அணியை பட்டத்தை வெல்லவிடாமல் தடுத்தது.
பல வருட ஏமாற்றங்களுக்குப் பிறகு, 2016ஆம் ஆண்டு உறுதியுடன் களத்தில் இறங்கிய விராட் கோலி, ஒரே சீசனில் பல புதிய சாதனைகளைப் படைத்தார்.
அவர், 16 போட்டிகளில் 973 ரன்கள் எடுத்து வரலாறு படைத்தார். நான்கு சதங்கள் மற்றும் ஏழு அரை சதங்களை விளாசினார்.
ஆர்சிபி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வெறும் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கோலியின் கனவு மீண்டும் கானல் நீராகிப் போனது.
நிறைவேறிய ஒரு கனவு
வருடங்கள் உருண்டோடின.
விராட் கோலியின் பேட்டில் இருந்து ரன் மழையும் தொடர்ந்து பொழிந்துகொண்டே இருந்தது. ஆனால் பட்டத்தை வெல்வது மட்டும் ஆர்சிபிக்கு வெறும் கனவாகவே இருந்தது.
சாம்பியனாகாத ஏமாற்றத்தின் மத்தியில், 2022 சீசன் தொடங்குவதற்கு முன்பே விராட் கோலி ஆர்சிபியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
ஆனால் தொடர்ந்து பேட்டிங்கில் அற்புதமாகச் செயல்பட்ட அவர், ஆர்சிபி அணியை சாம்பியனாக்கியுள்ளார். 2023ஆம் ஆண்டில், விராட் கோலி 639 ரன்கள் எடுத்தார், 2024ஆம் ஆண்டில், 741 ரன்கள் எடுத்தார்.
இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் எட்டாயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் விராட் பெற்றார். இந்த வருடமும் ஆர்சிபியை சாம்பியனாக்க, கோலி தனது முழு முயற்சியையும் மேற்கொண்டார்.
கடந்த 15 போட்டிகளில் 657 ரன்கள் எடுத்த கோலியின் கனவு, இறுதியாக 18 வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொடரில் நனவாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












