ஐபிஎல் பைனலில் பஞ்சாப்: தோனி, ரோகித் சாதனையை சமன் செய்வாரா ஸ்ரேயாஸ்?

ஐ.பி.எல், பஞ்சாப் - மும்பை, குவாலிபயர், பைனல், ஹர்திக், ஸ்ரேயாஸ், ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் 2025 சீசனின் ப்ளே ஆஃப் சுற்றில் இன்று ஆமதாபாத்தில் நடக்கும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி மோதியது.

மழை குறுக்கிட்டதால் இரண்டு மணி நேர கால தாமதத்திற்குப் பிறகு இரவு 9.45 மணிக்குப் போட்டி தொடங்கியது. அர்ஷ்திப் சிங்கின் முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே வந்தது. கைல் ஜேமீசன் வீசிய இரண்டு ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் சிக்சர் அடித்தார். அதே ஓவரில் ரோகித் சர்மா கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் அணி தவறவிட்டது.

கடந்த போட்டியில் ரோகித் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை குஜராத் அணி தவறவிட்டிருந்தது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா 81 ரன்கள் அடித்திருந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய மூன்றாவது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய ரோகித் சர்மா அடுத்த புல் ஷாட் அடித்து சிக்ஸருக்கு அனுப்பும் முயற்சியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஒன் டவுன்னாக களமிறங்கிய திலக் வர்மா சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்ஸர் அடித்து இண்டெண்டை காட்டினார். ரோஹித் சர்மாவின் விக்கெட்டைத் தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய நான்காவது ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார் பேர்ஸ்டோவ். பவர் ப்ளேவில் பவுண்டரி அடிக்க திலக் வர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் மிகவும் ஆர்வம் காட்டினர். ஐந்தாவது ஓவரை வீசிய ஜேமிசன் குட் லெந்தில் பந்துகளை வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆறாவது ஓவரில் மும்பை அணி 15 ரன்கள் எடுத்தது. பவர்ப்ளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி.

வலுவான பார்ட்னர்ஷிப்

ஐ.பி.எல், பஞ்சாப் - மும்பை, குவாலிபயர், பைனல், ஹர்திக், ஸ்ரேயாஸ், ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

சூர்யகுமார், திலக் வர்மா இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களைச் சேர்த்தனர். ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் இருவரும் சேர்த்ததால், ரன்ரேட் சீராக உயர்ந்தது. சஹல் வீசிய 14-வது ஓவரில் சூர்யகுமார் சிக்ஸர், பவுண்டரி அடித்து அரைசதத்தை நெருங்கினார், ஆனால்கடைசிப்பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று வதேராவிடம் கேட்ச் கொடுத்து 26 பந்துகளில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

அடுத்தடுத்து விக்கெட் இழப்பு

15-வது ஓவரை ஜேமிஸன் வீசினார். ஜேமிஸன் வீசிய ஸ்லோவர் பந்தில் திலக் வர்மா ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸர் அடிக்க முயல ஆர்யாவிடம் கேட்சானது. திலக் வர்மா 44 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மும்பை அணி 4வது விக்கெட்டை இழந்தது. 6-வது வீரராக நமன் திர் களமிறங்கினார். 142 ரன்களில் மும்பை அணி ஹர்திக், திலக் வர்மா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அர்ஷ்தீப் வீசிய 17-வதுஓவர் மும்பைக்கு பெரிய ஓவராக அமைந்தது. நமன் திர் முதல் இரு பந்துகளையும் ஷார்ட் பைன்லெக் திசையில் பவுண்டரிக்கு அனுப்பினார் அதன்பின் கடைசிப்பந்திலும் பவுண்டரி அடிக்கவே 14 ரன்கள் சேர்த்தார்.

நமன்திர் அதிரடி

ஐ.பி.எல், பஞ்சாப் - மும்பை, குவாலிபயர், பைனல், ஹர்திக், ஸ்ரேயாஸ், ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

ஓமர்சாய் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்த நிலையில் 4-வது பந்தை ஸ்குயர் லெக் திசை பவுண்டரிக்கு அடித்தார். அங்கு பீல்டிங்கில் இருந்த பிரப்சிம்ரன் நழுவவிடவே பவுண்டரியானது. அந்த ஓவரின் கடைசிப்பந்தில் ஹர்திக் பாண்டை பெரிய ஷாட்டுக்கு முயல அவரின் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் இங்கிலிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ராஜ் பவார் களமிறங்கினார். அர்ஷ்தீப் வீசிய 19-வது ஓவரில் நமன்திர் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார், பெரிய ஷாட்டுக்கு நமன் திர் முயன்றும் அவரால் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. கடைசி ஓவரை ஓமர்சாய் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த நமன்திர், 3வது பந்தை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரிக்கு அடிக்க முயன்றபோது ஸ்டாய்னிஷிடம் கேட்ச் கொடுத்து நமன்திர் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சான்ட்னராலும் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியவில்லை

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் ஓமர்சாய் 2 விக்கெட்டுகளையும், ஜேமிஸன், சஹல், வைசாக் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

204 ரன்கள் சேர்த்தால் வெற்றி என பஞ்சாப் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

முதல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணியிடம் மோசமாகத் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 2வது தகுதிச்சுற்றுக்கு வந்துள்ளது. அதேபோல எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தகுதிச்சுற்றுக்கு வந்துள்ளது.

ஆமதாபாத் மைதானத்தில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி அதில் ஒன்றில் மட்டுமே வென்று 5ல் தோற்றுள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். டாஸ் நிகழ்வுக்கு சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பஞ்சாப் அணியில் கடந்த சில போட்டிகளாக காயத்தால் அணியில் இடம் பெறாமல் இருந்த அனுபவ லெக் ஸ்பின்னர் யுஜுவேந்திர சஹல் இந்தப் போட்டியில் விளையாடுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கிளீசனுக்குப் பதிலாக ரீஸ் டாப்ளி சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பையை ஸ்வாகா செய்த ஸ்ரேயாஸ்

ஐ.பி.எல், பஞ்சாப் - மும்பை, குவாலிபயர், பைனல், ஹர்திக், ஸ்ரேயாஸ், ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தொடங்கியது. ப்ரப் சிம்ரன் சிங் தொடக்கத்திலேயே ஆட்டத்தை இழந்தாலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜோஸ் இங்லிஷ் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். ஒரு கட்டத்தில் மும்பை அணியின் கையில் எளிதாக கிடைப்பது போன்று இருந்த போட்டியை, பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் படிப்படியாக மாற்றினார்.

டிரெண்ட் போல்ட், பும்ரா என்ற என அபாயகரமான பவுலர்களுக்கு எதிராக அற்புதமான இன்னிங்சை ஷ்ரேயாஸ் அய்யர் ஆடினார். 18வது ஓவரில் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்க விட்டு ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக பஞ்சாப் பக்கம் மாற்றினார். 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்ற பஞ்சாப் அணி ஆர்சிபி அணியை ஜூன் 3ம் தேதி இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல், பஞ்சாப் - மும்பை, குவாலிபயர், பைனல், ஹர்திக், ஸ்ரேயாஸ், ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

அடுத்தடுத்து இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடிய கேப்டன்கள் என்கிற பெருமை தோனி, ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவிடம் மட்டுமே உள்ளது. தொடர்ந்து இரண்டு கோப்பைகளை வென்ற கேப்டன்கள் என்கிற பெருமை தோனி மற்றும் ரோஹித்திடம் மட்டுமே உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால் அவர்களின் சாதனையை சமன் செய்கிறார். கோப்பையை வென்றால் இரு வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக அடுத்தடுத்த கோப்பைகளை வாங்கிக் கொடுத்த பெருமை அவருக்கே கிடைக்கும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு