வெற்றி தின அணிவகுப்பில் ஆயுத பலத்தை உலகுக்குக் காட்டிய சீனா - காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களின் சிறப்பம்சங்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
- பதவி, பாதுகாப்புச் செய்தியாளர்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உரைக்குப் பிறகு, சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் (Victory Day Parade) அந்நாட்டின் ராணுவ வலிமை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அடங்கும்.
அணிவகுப்புக்கு முன்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் ஒன்றாகக் காணப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை வாழ்த்தி, அமெரிக்காவுக்கு எதிராக இந்தக் கூட்டணி 'சதி' தீட்டுவதாக கிண்டலாக குற்றம் சாட்டினார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை ஜின்பிங் நடத்தினார்.
இந்த அணிவகுப்பு சீனாவின் ராணுவ சக்தியை வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. அணிவகுப்பின் போது, சீனா பல புதிய ஆயுதங்களை காட்சிப்படுத்தியது.
புதிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ஐசிபிஎம்) டிஎஃப்-61 மற்றும் டிஎஃப்-5சி ஆகியவை சீன சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றன.
இதனுடன், ஜே-20 என்ற ஸ்டெல்த் போர் ஜெட், 99பி டாங்கி மற்றும் லேசர் ஆயுதங்களின் புதிய தொழில்நுட்பம் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய அணிவகுப்பில் சில புதிய படைப்பிரிவுகளும் இடம்பெற்றன, அவை முதல் முறையாக அணிவகுத்துச் சென்றன. இவற்றில் விண்வெளிப் படை, சைபர்ஸ்பேஸ் படை மற்றும் தகவல் ஆதரவுப் படை ஆகியவை அடங்கும்.
வெற்றி தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பார்ப்போம்.
ஐசிபிஎம் டிஎஃப்-61

பட மூலாதாரம், AFP via Getty Images
பிபிசியின் 'ஆசிய டிஜிட்டல்' பிரிவின் செய்தியாளர் டெஸ்ஸா வோங் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
"ஹைப்பர்சோனிக் கிளைட் வாகனங்கள், ஒய்ஜே-21 கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணை மற்றும் ஜேஎல்-3 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை டோங்ஃபெங்-61 ஆகியவற்றையும் நாங்கள் கவனித்தோம்," என்று அவர் கூறினார்.
"நான் பாதுகாப்பு நிபுணர் அலெக்சாண்டர் நீலுடன் அமர்ந்தேன். அவர் பல்வேறு குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள், பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் மற்றும் ஆளில்லா போர் வான்வழி வாகனங்கள் (ஸ்டெல்த் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியவற்றை அடையாளம் கண்டார்," என்று அவர் கூறினார்.
டோங்ஃபெங்-61 ஏவுகணை சீனாவின் வடக்கு சிலோ ஏவுதளத்தில் (நிலத்தடி) இருந்து ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது அமெரிக்காவின் உள்கட்டமைப்பை குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் அலெக்சாண்டர் நீல் பிபிசியிடம் தெரிவித்தார்.
மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, டோங்ஃபெங்-5 என்பது அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா முழுவதையும் குறிவைத்து அதிவேக அணு ஆயுதங்களை செலுத்தும் திறன் கொண்ட ஒரு சிலோ அடிப்படையிலான (சிலோ தளத்தில் இருந்து ஏவப்படக்கூடிய) ஏவுகணை ஆகும்.
டிஎஃப்- 61 அம்சங்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images
டோங்ஃபெங்-61 ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆய்வாளர் அலெக்சாண்டர் நீலின் கூற்றுப்படி, சாலை மார்க்கமாக இயக்கப்படுவதுதான் இதை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.
சாலை மார்க்க ஏவுகணைகள் என்பவை லாரிகளில் ஏற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சாலை வழியாக கொண்டு செல்லக்கூடியவை.
டிரான்ஸ்போர்ட்டர்-எரெக்டர்-லாஞ்சர் (TEL) உடன் இணைக்கப்படும்போது, அவற்றை எளிதாக மறைக்க முடியும். தேவைப்படும்போது அவற்றை எரிபொருள் நிரப்பி விரைவாகப் பயன்படுத்தலாம்.
இந்த ஏவுகணையை வெவ்வேறு இடங்களில் இருந்தும் ஏவ முடியும். இதன் பொருள் எதிரியால் அதன் நிலைநிறுத்தலை துல்லியமாக மதிப்பிட முடியாது.
இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்றும், ஒரு ஏவுகணை 12 போர்முனைகளை சுமந்து செல்லும் என்றும் நீல் கூறினார்.
ரோபோ நாய்கள் மற்றும் ட்ரோன்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images
அணிவகுப்பில் காணப்பட்ட புதிய ராணுவ உபகரணங்களில், தரையிலிருந்து வான் ஏவுகணைகளை இடைமறிக்கும் ஹெச்கியூ-19 அதி-உயர இடைமறிப்பான் மற்றும் நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் ஆகியவை அடங்கும்.
ட்ரோன் தொழில்நுட்பமும் அதிக எண்ணிக்கையில் இருந்தது. இதில் டாங்கிகளில் பொருத்தப்பட்ட ட்ரோன் தளங்கள், ட்ரோன் எதிர்ப்பு திரள் அமைப்புகள், தானியங்கி ட்ரோன்கள் மற்றும் 'ரோபோ நாய்கள்' ஆகியவை அடங்கும்.
நான்கு கால் ரோபோக்களின் ஒரு படை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒப்பீட்டளவில் இது சீன ராணுவத்தில் புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஆயுதமாகக் கருதப்படுகிறது.
சீன அரசு ஊடகங்களின்படி, இந்த இயந்திரங்கள் உளவு பார்க்கவும், பொருட்களை வழங்கவும், எதிரிகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை நடத்தவும் வல்லவை. கடந்த ஆண்டு கம்போடியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளில் சீனா 'ரோபோ நாய்களை' காட்சிப்படுத்தியது.
ஆனால், பின்னர் அவை 'ஃபாக்ஸ்' என்று மறுபெயரிடப்பட்டன. இது ஒரு 'மூலோபாய மாற்றம்' என்று விவரிக்கப்பட்டது. இந்த தகவலை சீன அரசு ஊடகமான 'சிசிடிவி' (CCTV) கடந்த ஆண்டு வழங்கியது.
அவற்றின் போர் திறன்களும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திறன்களும் மேம்பட்டுள்ளதாகவும், இலக்குகள் மீது மிகவும் துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், AFP via Getty Images
நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images
இந்த அணிவகுப்பில் ஏஜேஏஎக்ஸ்-002 'எக்ஸ்ட்ரா லார்ஜ் அன்க்ரூட் அண்டர்வாட்டர் வெஹிகிள்ஸ்' (XLUVs) என்ற வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இது 18 மீட்டர் நீளமுள்ள, நீருக்கடியில் இயங்கக்கூடிய ஒரு பெரிய ட்ரோன் ஆகும், இது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்த மாபெரும் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற ட்ரோன்கள் 18 முதல் 20 மீட்டர் ஆழம் வரை தண்ணீருக்குள் செல்ல முடியும்.
எதிரி கடற்படைகள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் மீதான தாக்குதல்களின் போது கட்டளை மற்றும் கட்டுப்பாடு (Command and control) மற்றும் உளவுப் பணிகளில் இவற்றைப் பயன்படுத்தலாம்.
புதிய லேசர் ஆயுதம்

பட மூலாதாரம், AFP via Getty Images
இந்த அணிவகுப்பில் சீனாவின் மற்றொரு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுதம் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பெயர் எல்ஒய்-1 லேசர் ஆயுதம்.
இது எட்டு சக்கரங்கள் கொண்ட HZ-155 கவச டிரக்கில் பொருத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆய்வாளர் அலெக்சாண்டர் நீலின் கூற்றுப்படி, இந்த லேசர் ஆயுதம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதன் சிறப்பு என்னவென்றால், மின்னணு உபகரணங்களை முடக்கவோ அல்லது எரிக்கவோ இதனால் முடியும்.
மேற்கத்திய நாடுகளுக்கு இது ஏன் கவலைக்குரிய விஷயம்?

பட மூலாதாரம், AFP via Getty Images
நீருக்கடியில் இயங்கும் மிகப்பெரிய டார்பிடோக்கள் முதல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தக்கூடிய அதிநவீன லேசர் ஆயுதங்கள் வரை அனைத்தையும் சீனா இன்று காட்சிப்படுத்தியது.
இப்போது அமெரிக்கா உள்பட உலகம் முழுவதிலுமிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்வார்கள்.
மக்கள் விடுதலை ராணுவம் (PLA) ஒரு விரிவான ராணுவ நவீனமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் அது அமெரிக்காவுக்கு சமமாக முன்னேறியுள்ளது, சில பகுதிகளில் அதை விஞ்சியுள்ளது.
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் அத்தகைய ஒரு ஆயுதமாகும்.
லண்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான RUSI-இன் முன்னணி ஏவுகணை நிபுணரான டாக்டர் சித்தார்த் கௌஷல், ஒய்ஜே-17 (ஹைப்பர்சோனிக் சறுக்கு வாகனம்) மற்றும் ஒய்ஜே-19 (ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை) ஆகியவற்றைக் குறித்து எடுத்துரைத்தார்.
சீனா, செயற்கை நுண்ணறிவு மற்றும் தனித்து இயங்கும் ஆயுதங்களில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணம் ஏஜேஏஎக்ஸ்-002 ஆகும்.
இருப்பினும், நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை உள்ளடக்கிய சீனாவின் அணு ஆயுதக் கிடங்கு, ரஷ்யா மற்றும் அமெரிக்காவை விட மிகவும் பின்தங்கியிருக்கிறது.
ஆனால், அதன் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, தனது போர்முனைகளை வழங்குவதற்கான புதிய வழிகளையும் சீனா ஆராய்ந்து வருகிறது.
ஷி ஜின்பிங் மற்றும் டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Anadolu via Getty Images
ஆயிரக்கணக்கான துருப்புகளின் அணிவகுப்பில் உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், இதை "புதிய பயணம், புதிய சகாப்தம்" என்று வர்ணித்தார்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாம் உலகப் போரில் சீனாவுக்காக அமெரிக்க வீரர்கள் செய்த தியாகங்களை சீனாவுக்கு நினைவூட்டினார், மேலும் அணிவகுப்பில் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இருப்பதையும் விமர்சித்தார்.
"தயவுசெய்து விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்கிறார்கள்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












