குழந்தைகளை மோசமாக பாதிக்கக்கூடிய பெற்றோரின் 4 செயல்கள் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
ஒரு குழந்தை கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் வழிந்தால், அந்த குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த குழந்தைக்கு வலிக்கும் என்றும் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்.
ஆனால், குழந்தைகளுக்கு மனதில் ஏற்படும் காயம் பல நேரங்களில் கவனிக்கப்படுவதில்லை. அதுவும் அந்த காயம் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான உறவுகளால் உள்ளாக்கப்பட்டால் அதன் பாதிப்பு சிலருக்கு தீவிரமாக இருக்கும். தொடர் பாதிப்புகள் ஏற்பட்டால் அது குழந்தையின் நடத்தையை, மனநலனை வெவ்வேறு விதங்களில் பாதிக்கக் கூடும். இதை குழந்தைப் பருவ மன அதிர்ச்சி (Childhood Trauma) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவுகள் பிற்காலத்திலும் குழந்தையை பாதிக்கும் விதத்தில் இருக்கக் கூடும்.
குழந்தைகளை மோசமாக பாதிக்கக்கூடிய பெற்றோரின் 4 செயல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன
1. வார்த்தைகள் மூலம் திட்டுவது
உதாரணமாக உடல் சற்று பருமனாக இருக்கும் குழந்தை பள்ளிக்கூடங்களில், நண்பர் வட்டத்தில், குடும்பங்களில் கேலி செய்யப்பட வாய்ப்புண்டு. 'குண்டு', 'அரிசி மூட்டை' போன்ற வார்த்தைகள் சாதாரணமாக நாம் காதுபட கேட்கக்கூடியவை. ஒரு குழந்தை தொடர்ந்து இதுபோன்ற உருவகேலிக்கு ஆளாகும் போது அதுவும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இது பிற்காலத்தில் குழந்தைக்கு தன்னம்பிக்கை குறைவு போன்ற சிக்கல்களை உருவாக்கலாம்.
இதை படிக்கும் போது இயல்பாக ஒரு கேள்வி சிலரது மனதில் எழலாம். "என்னையும் கூட சிறுவயதில் இப்படி கேலி செய்தார்களே, எனக்கு எந்த மன அதிர்ச்சியும் ஏற்படவில்லையே" என்று தோன்றலாம்.
மன அதிர்ச்சி (ட்ராமா) என்பது இதுதான் என்று விளக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல. உலக அளவில் பிரபலமான மன அதிர்ச்சி மருத்துவர் காபர் மேட் (Gabor Mate), "மன அதிர்ச்சி என்பது உங்களுக்கு என்ன நடந்தது என்பதல்ல, உங்களுக்கு ஒரு விஷயம் நடந்ததன் விளைவாக உங்களுக்குள் என்ன நேர்ந்ததோ அதுவே மன அதிர்ச்சி" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
குழந்தை பருவத்தில் மன ரீதியாக பாதிப்புகளை சந்தித்தவர்களுக்கு அவர்கள் வளர்ந்த பிறகும், அதன் தாக்கம் நீடித்து இருக்கக் கூடும்.
"ஒரு கடினமான மனிதர் நல்ல முறையில் தன்னிடம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று முயல்வது" குழந்தைப்பருவ ட்ராமா அனுபவித்தவர்களின் தெளிவான அறிகுறி என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ராமா மருத்துவர் பேட்ரிக் தீஹென்.
உதாரணமாக உங்கள் அலுவலகத்தில் தனக்கு கீழ் வேலை செய்பவர்களை எப்போதும் நியாயமற்ற முறையில் திட்டிக் கொண்டிருக்கும் நபரிடம் எப்படியாவது நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பது குழந்தைப் பருவ மன அதிர்ச்சியின் விளைவாக இருக்கலாம் என்கிறார்.
"இதுபோன்றவர்களுக்கு 'தான்' என்ற உணர்வும், சுயமதிப்பும் குறைவாக இருக்கக் கூடும். பிறர் தன்னை 'சரி' என்று கூறும் போதே அவர்கள் மதிப்புள்ளவர்களாக தங்களை கருதிக் கொள்வர்" என்கிறார்.
இதன் ஊற்று குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
2. உணர்ச்சி பற்றாக்குறை
இதன் ஊற்று குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல், தினமும் அடி-உதை இவை போன்றவை மட்டும் மன அதிர்ச்சிக்கு காரணம் அல்ல. உடல் ரீதியான துன்புறுத்தல் இல்லாத போதும் குழந்தையின் உணர்வு ரீதியான தேவைகள் பூர்த்தி செய்யப்படாத போதும், அது மன அதிர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
தனக்கு நேர்ந்ததை உதாரணமாக சுட்டிக்காட்டும் காபர்மேட், யூத படுகொலையின் போது, அவரை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக அவரது தாய் நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். தன்னை பிடிக்காததால் தான் தன்னை மற்றொரு நபரிடம் தனது தாய் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்று ஒரு வயது குழந்தையாக இருந்த காபர் மேட் புரிந்துக் கொண்டதாக கூறுகிறார். ஐந்து வாரங்கள் கழித்து தனது தாய் தன்னை வந்து மீண்டும் பெற்றுக் கொண்டாலும், அவர் விட்டுச் சென்றது தன்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார்.
மன அதிர்ச்சி என்றால் என்ன?

பட மூலாதாரம், Facebook
மன அதிர்ச்சி என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி என்கிறார் சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் வெங்கடேஸ்வரன்.
"எனது வீட்டின் மீது மேலிருந்து ஒரு கல் விழுகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த கல் எங்கு விழும், என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது. என் வீட்டில் உள்ள கண்ணாடியை உடைக்கலாம், செடிகளை சேதப்படுத்தலாம், எதன் மீதும் விழாமல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமலும் இருக்கலாம். அதுபோல தான் மன அதிர்ச்சி. ஒருவருக்கு மிகுந்த மன அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய விசயங்கள் வேறு சிலருக்கு மிக எளிதில் கடந்து செல்லக் கூடியதாக இருக்கும்" என்றார்.

3. கவனம் செலுத்தாமல் இருப்பது
சென்னையைச் சேர்ந்த ஜோசப் சேகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இது பற்றி தனது அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறார். "எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, பள்ளியில் ஒரு பரிசை வென்றிருந்தேன். நான் வீட்டுக்கு வந்ததும், பரிசை கையில் ஏந்தியபடி உற்சாகத்துடன் அம்மாவிடம் ஓடினேன். ஆனால் ப்ராஜெக்ட் பற்றியோ அல்லது வெற்றி பெற்றதைப் பற்றியோ நான் எப்படி உணர்ந்தேன் என்றோ என்னிடம் அம்மா கேட்கவில்லை." என தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.
"மாறாக அன்று நான் அணிவதற்காக அம்மா தேர்ந்தெடுத்த ஆடை பற்றி பேசிக் கொண்டிருந்தார், அதில் நான் எவ்வளவு அழகாக இருந்தேன் என்றும், அவர் அதைத் தேர்ந்தெடுத்ததில் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்றும் கூறினார்.
எனக்கு குழப்பமாகவும் சற்று ஏமாற்றமாகவும் இருந்தது. அந்த ஆடை அளவுக்கு பரிசு ஒரு பொருட்டல்ல என்பது போல் இருந்தது. நான் எதையாவது சாதிக்கும்போதெல்லாம், அது பெரும்பாலும் வேறு ஏதோவொன்றால் மறைக்கப்படுகிறது. எனது சாதனைகள் மதிக்கப்படவில்லை என்று தோன்றியது"
இப்போது, ஒரு வயது வந்தவராக, தனது சொந்த சாதனைகளை அங்கீகரிக்க நான் போராடுவதாகக் கூறும் ஜோசப். பாராட்டுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக இருப்பதால், முயற்சியைக் காட்டிலும் அதிர்ஷ்டத்தை காரணமாகக் காட்டும் செயலில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்.
"நான் என்ன செய்கிறேன் என்பது உண்மையிலேயே முக்கியமானதல்ல, அங்கீகாரத்துக்கு தகுதியானது அல்ல என்று எனது ஆழ்மனதில் நான் இன்னும் நம்புகிறேன். அந்த குரல் என்னுள் ஒலித்துக் கொண்டே உள்ளது இவ்வளவு சிறிய விசயங்கள் ஒருவரின் முழு பார்வையையும் எவ்வாறு வடிவமைக்க முடியும் என்பது வேடிக்கையானது. ஆனால் குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்ளும் புறக்கணிப்பு அதைத்தான் செய்கிறது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஜோசப்.
4. நிபந்தனையுடன் கூடிய அன்பு
"நான் சொல்வதை நீ செய்தால் மட்டுமே நான் உன்னை நேசிப்பேன்" - உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கும் செய்தி இதுவே. எனவே தனது குழந்தைப் பருவ ஆசைகளை, தேவைகளை பூர்த்தி செய்வதை விட பெற்றோரின் அன்பை தொடர்ந்து பெறுவதே முக்கியமானதாக மாறிவிடும். இது குழந்தையின் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் காபர் மேட் கூறுகிறார்.
"நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் பள்ளி வளாகத்தில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் என்னை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எனது அம்மாவுக்கு தகவல் கொடுத்தனர். சில நிமிடங்களில் எனது அம்மா அங்கே வந்தார். அவர் வந்தவுடன் நான் கூறிய வார்த்தைகள், "எனக்கு ஒன்றும் இல்லை அம்மா, நீ கவலைப்படாதே" தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் இருக்கும் நான், அம்மாவின் பதற்றத்தைப் பற்றி கவலைப்பட்டுள்ளேன். அப்போது எனக்கு என்ன நிகழ்ந்துக் கொண்டிருந்தது என்று புரியவில்லை. 40 வருடங்கள் கழித்து திரும்பி பார்க்கும் பல நிபுணர்களின் உதவியுடன் நான் என்ன செய்துக் கொண்டிருந்தேன் என்று விளங்குகிறது. இந்த சம்பவம் எனக்கு ஏன் இப்போதும் நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை" என்கிறார் ச.நிவேதிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) .
மன அதிர்ச்சிக்கான காரணங்கள் என்ன?
"பெற்றோர் பிரிந்து செல்வது, வறுமை, பெற்றோரை இழப்பது, பள்ளியில் கேலி கிண்டல் செய்யப்படுவது, உருவ கேலி செய்யப்படுவது, நண்பர்களால் ஒதுக்கப்படுவது என பல்வேறு காரணங்களால் குழந்தைகள் பாதிக்கப்படலாம். சொல்லப்போனால் ஏதாவது ஒரு உள ரீதியான சிக்கலை ஒவ்வொரு குழந்தையும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். சிலருக்கு அது குறைவாக இருக்கலாம், சிலருக்கு அதிகமாக இருக்கலாம்" என்கிறார் மருத்துவர் வெங்கடேஸ்வரன்.
குழந்தைப் பருவ மன அதிர்ச்சி காரணமாக பிந்தைய நாட்களில் பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஏற்படலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. யூரோபியன் ஜர்னல் ஆப் ட்ராமா அண்ட் டிஸ்ஸசோசியேஷன் என்ற ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையில், "ஒரு அழுத்தமான சூழலில் இருக்கும் குழந்தையின் உடம்பில், ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் விடுவிக்கப்படும். இது தன்னை சுற்றி நடக்கும் விசயங்களுக்கான உடலின் எதிர்வினையாகும். இது தொடர்ந்து ஏற்பட்டால் மூளையில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். ஒரு அசாதாரண சூழல் நிலவும் போது மூளைக்கு நரம்பு மண்டலம் எச்சரிக்கைகளை அனுப்பும். இதன் காரணமாக ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகமாக விடுவிக்கப்பட்டு, உடல் எப்போதுமே ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே இருக்கும். குழந்தைப்பருவத்தில் இது அடிக்கடி நேர்ந்தால், அதிகப்படியான கார்டிசால் சுரப்பிகள் வெளியிடப்படுவதால் பிந்தைய ஆண்டுகளில் பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஏற்படக் கூடும்" என்று விளக்கப்பட்டுள்ளது.
"பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாலியல் வல்லுறவு போன்ற ஒரு பெரிய நிகழ்வின் காரணமாக யாருக்கும் மன அதிர்ச்சி ஏற்படலாம் என்பது எதிர்பார்க்கப்பட்டது. பல நேரங்களில், லேசான அல்லது மிதமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள் ஏற்படலாம்- உதாரணமாக பள்ளியில் ஆசிரியர் திட்டலாம், நண்பர்கள் கேலி செய்யலாம். சிலருக்கு இது போன்ற நிகழ்வுகள் கூட மன அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும்" என்கிறார் வெங்கடேஸ்வரன்.
- சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? - இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு நடந்தது என்ன?
- வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா? 'அடோலசென்ஸ்' வெப் சீரிஸ் கூறும் செய்தி என்ன?
- குழந்தைகளை அடிப்பது மட்டுமல்ல, அதீத செல்லமும் ஆபத்து - நிபுணர்கள் கூறுவது என்ன?
- வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா? 'அடோலசென்ஸ்' வெப் சீரிஸ் கூறும் செய்தி என்ன?
மன அதிர்ச்சியின் விளைவுகள் என்னவாக இருக்கும்?
"மன அதிர்ச்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு உணர்வுகளை ஒழுங்குப்படுத்துவது மிக கடினமாக இருக்கலாம். பணியிடங்களில் உறுதியாக நடந்துக் கொள்வது முடியாமல் போகலாம். அது அவர்களின் சுய மதிப்பை பாதிக்கக் கூடும், எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களாக இருப்பார்கள். வளர் இளம் பருவத்தில் உறவுகளை வளர்ப்பதில் பதற்றம் ஏற்படலாம், நம்மை குற்றம் சொல்வார்களோ என்று தொடர்ந்து பயம் இருக்கலாம். தோல்வியில் முடியும் என்ற அச்சம் இருப்பதால், உறவுகளே இல்லாமலும் சிலர் இருக்கலாம்" என்று குழந்தை மனநல மருத்துவர் சிவபிரகாஷ் ஶ்ரீநிவாசன் கூறுகிறார்.
"2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது முகாம்களாக பயன்படுத்தப்பட்ட தங்கள் பள்ளிகளில், நிலைமைகள் சீரான பிறகு அந்த வகுப்பறைகளில் அமர்ந்து பாடம் கற்க முடியவில்லை. அந்த அறைகள் துயரமான நினைவுகளை அவர்களுக்கு தூண்டிவிட்டன" என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் சிவபிரகாஷ் ஶ்ரீநிவாசன்.
மன அதிர்ச்சியை எதிர்கொள்ளும் குழந்தைகள் போதை பொருட்களுக்கு அடிமையாதல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் போன்ற தவறான வழிகளில் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
2022-ம் ஆண்டு மருத்துவர் சிவபிரகாஷ் உட்பட ஏழு பேர் சிறார் இல்லங்களில் உள்ள குழந்தைகளிடம் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள 278 குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் 71% பேர் உணர்வு ரீதியான புறக்கணிப்பை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு நிகழ்வு மன அதிர்ச்சியை ஏற்படுத்தாது, அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாக இருந்தாலொழிய என்று குறிப்பிடும் மருத்துவர் வெங்கடேஸ்வரன், தொடர் பாதிப்புகளை எதிர்கொள்ளும் போது மன அதிர்ச்சி ஏற்படும் என்கிறார். இதன் காரணமாக "உறவுகளை பராமரிக்கும் திறன் குறைவாக இருக்கலாம், பிறரை நம்புவதில் சிக்கல் ஏற்படலாம், சிறு விசயங்களுக்கு மிகுந்த கோபம் ஏற்படலாம், தற்கொலை எண்ணங்கள் உருவாகலாம். சிலருக்கு மன அழுத்தம், பதற்றம், இணையதள அடிமைத்தனம் போன்ற மனநல பிரச்னைகள் ஏற்படலாம். பொதுவாக அந்த கட்டத்தில் தான் மருத்துவர்களிடம் வருவார்கள். அப்போது தான் அவருக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சி தெரிய வரும்" என்கிறார்.
"ஆரோக்கியமான குடும்ப சூழல், நல்ல நண்பர் வட்டம், படிப்பிலோ அல்லது விளையாட்டு, கலை வடிவங்களிலோ அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்படுவது போன்றவை குழந்தையை மன அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கக் கூடிய காரணிகள் ஆகும். இவை இருந்தால் லேசான மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளால் மன அதிர்ச்சி ஏற்படாமல் குழந்தையால் சமாளித்துக் கொள்ள முடியும்" என்றார் வெங்கடேஸ்வரன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












