மத்திய கிழக்கு மோதலால் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சோதனை என்ன?

பட மூலாதாரம், Harun Ozalp/Anadolu via Getty Images
மத்திய கிழக்கு மோதலை சமநிலைப்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சி குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு மோதலானது பாகிஸ்தானை ஒரு சிக்கலான ராஜ்ஜீய நிலையில் நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியாவுடனான அதன் மூலோபாய உறவுகளையும், அமெரிக்காவுடனான உறவையும் சமநிலைப்படுத்துவதோடு, அண்டை நாடான இரானுடன் நிலையான உறவைப் பேண வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
அமெரிக்காவுடனான உறவில் சமீபகாலமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைப் பாகிஸ்தான் பகிரங்கமாக எதிர்த்தது.
ஆனால் அதே நேரத்தில், சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது இரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களையும் அது கண்டித்தது.
சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பணம் மற்றும் நிதி உதவியை அது பெரிதும் நம்பியிருப்பது அதன் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதே சமயம், இரானுக்கு எதிராக சவுதி அரேபியாவை முழுமையாக ஆதரிப்பது பாகிஸ்தானின் நீண்ட மேற்கு எல்லையை நிலைகுலையச் செய்யும் மற்றும் உள்நாட்டில் மதப் பிரிவினைவாத மோதல்களைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தனது மூலோபாய நடுநிலைமையைப் பாதுகாக்க முயற்சிக்கிறது, ஆனால் பிராந்திய பதற்றங்கள் நீடிப்பதால், இந்த நுட்பமான சமநிலையைப் பேணுவது கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகிஸ்தானின் 'சமநிலைப்படுத்தும்' முயற்சி
பாகிஸ்தான் வரலாற்று ரீதியாக இஸ்லாமிய நாடுகளின் இறையாண்மை மற்றும் நிலைத்தன்மையை ஆதரித்து வரும் அதே வேளையில், அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான உறவுகளையும் பேணி வருகிறது.
ஆனால் இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெடித்துள்ள மத்திய கிழக்கு மோதல், பாகிஸ்தானின் ராஜ்ஜியக் கணக்கீடுகளைச் சிக்கலாக்கியுள்ளது.
பாகிஸ்தான் ஒரு "சமநிலைப்படுத்தும்" அல்லது "கவனமாக அளவீடு செய்யப்பட்ட"ராஜ்ஜிய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக ஆய்வாளர்களும் ஊடகங்களும் விவரிக்கின்றன.
பாகிஸ்தான் தனது முயற்சியைப் பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு வகை "ஷட்டில் டிப்ளோமசி" என்று குறிப்பிடுகிறது.
பிப்ரவரி 28 அன்று, இரானிய அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட தாக்குதல்களைப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டித்தது, அவற்றை இரான் மீதான "நியாயமற்ற தாக்குதல்கள்" மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றும் விவரித்தது.
அதே நேரத்தில், வளைகுடா நாடுகள் மீது இரான் நடத்திய "பதிலடி" தாக்குதல்களையும் பாகிஸ்தான் கண்டித்தது, அவற்றை "இறையாண்மையை அப்பட்டமாக மீறும் செயல்கள்" என்று அழைத்தது.
அப்போதிருந்து, போர் தீவிரமடைவதைத் தடுக்க பாகிஸ்தான் ராஜ்ஜீய முயற்சிகளை தொடர்ந்துள்ளதுடன், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

பட மூலாதாரம், Geo News
பாகிஸ்தானின் அணுகுமுறைக்குப் பின் உள்ள முக்கிய காரணிகள்
பாகிஸ்தானின் இந்த அணுகுமுறைக்கு ஒரு முக்கிய காரணம், வளைகுடா நாடுகள் மற்றும் இரானுடன் நீண்டகாலமாகத் தான் கொண்டுள்ள உறவுகளைப் பேண வேண்டிய அவசியத்துடன் தொடர்புடையது.
பாகிஸ்தான் பாரம்பரியமாக இரானின் இறையாண்மை உரிமையை ஆதரிப்பதோடு, இஸ்ரேலின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அது சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவுடனான பாகிஸ்தானின் கூட்டாண்மை கணிசமாக வலுவடைந்துள்ளது. 2025 செப்டம்பரில், இரு நாடுகளும் ஒரு மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இதன் மூலம் ஒரு தரப்பிற்கு எதிரான "ஆக்கிரமிப்பை" இரு தரப்பிற்குமான "ஆக்கிரமிப்பாக" கருத ஒப்புக்கொண்டன.
இந்த ஒப்பந்தம் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இத்தகைய ஏற்பாடுகள் சவால்களை ஏற்படுத்துவதாகவும், இரானுடனான பதற்றம் மேலும் அதிகரித்தால் பாகிஸ்தான் சவுதி அரேபியாவை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
"சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை இரான் குறிவைத்தால், அந்தச் சூழல் தீவிரமடைந்தால், பாகிஸ்தான் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாகப் பதிலளிக்க வேண்டியிருக்கும்," என்று சர்வதேச விவகார நிபுணர் நயீம் அகமது மார்ச் 8 அன்று கூறியதாக 'தி நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், SAUDI PRESSS AGENCY
மேலும், வளைகுடா பிராந்தியம் பாகிஸ்தானுக்குப் பொருளாதார ரீதியாக மிக முக்கியமானது.
சவுதி அரேபியா பொருளாதார உதவிக்கான முக்கிய ஆதாரமாகவும், லட்சக்கணக்கான பாகிஸ்தானியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இடமாகவும் உள்ளது. இருப்பினும், சவுதி அரேபியாவை பகிரங்கமாக ஆதரிப்பது இரானுடனான பாகிஸ்தானின் உறவைச் சேதப்படுத்தும் மற்றும் மதப் பிரிவினைவாத பதற்றத்தைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் இரானுடன் 900 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் பிராந்திய மோதல்கள் பெரும்பாலும் பதற்றத்தை உருவாக்கினாலும், இரு தரப்பும் தங்கள் உறவுகளை நடைமுறை ரீதியாக நிர்வகித்து வருகின்றன.
குறிப்பாக 2024-இல் நடந்த எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, உறவுகளை நிலைப்படுத்த சமீபத்தில் இரு நாடுகளும் பணியாற்றின.
உள்நாட்டில், பாகிஸ்தானின் கணிசமான ஷியா மக்கள் தொகை மற்றும் காமனெயி கொல்லப்பட்ட பிறகு நடந்த பரவலான போராட்டங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன. அப்போராட்டங்களில் 24 பேர் உயிரிழந்தனர்.
முன்னணி ஆங்கில நாளிதழான 'டான்' மார்ச் 7 அன்று வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, "பாகிஸ்தானால் சவுதி அரேபியாவுடனான தனது பாதுகாப்பு கூட்டாண்மையை புறக்கணிக்க முடியாது, அதே சமயம் இரானுடனான உறவு முறிவையும் அது தாங்க முடியாது".
எனவே, ராஜ்ஜீயம் என்பது "ஒரே நேரத்தில் இரு உறவுகளையும் நிர்வகிப்பதற்கான ஒரு கவனமாக கட்டமைக்கப்பட்ட கருவியாக" உள்ளது.
அதேபோல், அரசு தொலைக்காட்சியான பிடிவி நியூஸில் மார்ச் 3 அன்று ஒரு பாதுகாப்பு ஆய்வாளர் கூறுகையில், பாகிஸ்தானால் "ஒரு நண்பரை விட்டுவிட்டு மற்றொருவருடன் நிற்க முடியாது" என்பதால் இந்தச் சூழல் சவாலானது என்றார்.
மார்ச் 7 அன்று 'தி நியூஸ்' இதழில் வெளியான ஒரு கட்டுரை, பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரம் "பெரிய வெளிப்புற அதிர்ச்சிகளைத் தாங்க முடியாது" என்றும், இரு தரப்பில் யாரையாவது பகைத்துக் கொள்வது பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தது.
அமெரிக்க உறவுகள்:
பாகிஸ்தானின் இந்த "நுட்பமான சமநிலைப்படுத்தும் முயற்சி", அமெரிக்காவுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட உறவுகளைப் பாதுகாக்கும் முயற்சியாலும், அதே சமயம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதாகத் தோன்றுவதைத் தவிர்ப்பதாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் அப்படி ஒரு அமெரிக்கா ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக கருத்தப்பட்டால், நாட்டுக்குள் உள்நாட்டு பதற்றங்கள் அதிகரிக்கக்கூடும்.
2025-இல் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், பைடன் நிர்வாகத்தின் கீழ் கணிசமான விரிசல் கண்ட உறவை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் முயன்று வருகிறது.
இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் புதுப்பித்துள்ளன மற்றும் பாகிஸ்தானின் முக்கியமான கனிமத் துறையில் அமெரிக்க முதலீட்டிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்களைத் தொடங்கியுள்ளன.
உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான சமீபத்திய உரையாடல்கள் மிகவும் சுமூகமாக இருந்தன. டிரம்ப் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரைப் பலமுறை பாராட்டியுள்ளார்.
இந்த உறவு மீண்டும் மலர்ந்த போதிலும், இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைப் பாகிஸ்தான் பகிரங்கமாக எதிர்த்ததுடன், இரானுக்கு ராஜ்ஜீய ஆதரவையும் வழங்கியது.
இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டபடி, பாகிஸ்தான் அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலையோ நேரடியாகப் பெயரிடுவதைத் தவிர்த்தது.
அமெரிக்கா மீதான பாகிஸ்தானின் ராஜ்ஜீய மற்றும் பொருளாதார சார்பே இந்த எச்சரிக்கையான நகர்வுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மார்ச் 5 அன்று 'தி டிப்ளமேட்' இணையதளத்தில் பாகிஸ்தானிய பத்திரிகையாளர் உமைர் ஜமால் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், "இரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கும் முடிவில் பாகிஸ்தான் தெளிவாக ஏமாற்றமடைந்திருந்தாலும், அமெரிக்காவின் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்டிக்க பாகிஸ்தானுக்கு சிறிதும் விருப்பம் இல்லை." என பதிவு செய்துள்ளார்.
"அமெரிக்கா மீதான ஆழமான ராஜ்ஜீய மற்றும் பொருளாதாரம் சார்ந்த தேவைகளில் இருந்தே இந்த எச்சரிக்கை உணர்வு எழுகிறது. பாகிஸ்தானின் பொருளாதார நிலைத்தன்மை முயற்சிகள், பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களை அணுகுவதற்கு அமெரிக்காவின் ஆதரவு இப்போதும் மிக முக்கியமானதாக உள்ளது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து என்ன?
பாகிஸ்தான் இதுவரை, மோதலில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்துள்ளதுடன், தொடர்ந்து ராஜ்ஜீய நடவடிக்கைகள் மற்றும் பதற்றத்தைத் தணிப்பதையே வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், சவுதி அரேபியாவுடனான அதன் பாதுகாப்பு ஒப்பந்தம், அதன் பிராந்திய நிலைப்பாட்டை வடிவமைக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
மார்ச் 3 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், இந்த ஒப்பந்தம் குறித்து இரானுடன் விவாதித்ததாகக் கூறினார்.
"நாங்கள் சவுதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளோம், இதை நான் இரான் தரப்பிற்குத் தெரிவித்தேன்," என்றார் அவர்.
இந்த ஒப்பந்தத்தின் பொருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில், பீல்ட் மார்ஷல் முனீர் மார்ச் 6 அன்று சவுதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானைச் சந்தித்தார்.
எஸ்எம்டிஏ கட்டமைப்பிற்குள் சவுதி நிலப்பரப்பின் மீதான இரானியத் தாக்குதல்களை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக பாகிஸ்தான் ராணுவ அறிக்கை தெரிவித்தது.
ராணுவ அறிக்கையில் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, "சவுதி நிலப்பரப்பு நேரடி ராணுவ அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில், சவுதியுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள ஒற்றுமையின் சமிக்ஞையாகும்" என்று 'டான்' இதழ் குறிப்பிட்டுள்ளது.
மோதல் தொடர்ந்தால், பாகிஸ்தான் தனது மூலோபாய நடுநிலைமையைப் பேணுவது கடினமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
"பாகிஸ்தான் ராஜ்ஜீய ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் இரானை ஆதரித்தாலும், அமெரிக்க அழுத்தத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பாகிஸ்தான் நடுநிலையைப் பேணுவது மிகவும் கடினமாக இருக்கும்," என்று நயீம் அகமது கூறியதாக 'தி நியூஸ்' அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
"பாகிஸ்தான் மீது இரட்டை அழுத்தம் இருக்கும். ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் சவுதி அரேபியாவிடமிருந்தும், நட்புறவைக் கொண்டுள்ள அமெரிக்காவிடமிருந்தும் அழுத்தம் வரும்... இது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு சோதனையாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












