'பெண்களை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்' : மாதவிடாய் விடுப்பு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கருத்து

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கட்டாய விடுப்பு வழங்கினால் அது இளம் பெண்கள் தங்கள் ஆண் சக ஊழியர்களுக்கு ‘சமமானவர்கள் அல்ல’ என்று நினைக்கத் தூண்டும் என்றும், இது அவர்களின் ‘வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்றும் கூறியது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் மாதவிடாய் இன்னும் பேசுவதற்கு தடைசெய்யப்பட்ட விஷயமாகவே உள்ளது.
    • எழுதியவர், கீதா பாண்டே மற்றும் நிகிதா யாதவ்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு கோரும் மனுவை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இத்தகைய சட்டத்தை உருவாக்கினால் "யாரும் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்," என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கட்டாய விடுப்பு வழங்கினால் அது இளம் பெண்கள் தங்கள் சக ஆண் ஊழியர்களுக்கு 'சமமானவர்கள் அல்ல' என்று நினைக்கத் தூண்டும் என்றும், இது அவர்களின் 'வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும்' என்றும் கூறியது.

மாதவிடாய் விடுப்பு குறித்து இந்திய சமூகத்தில் நீண்ட காலமாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. பலர் நீதிபதிகளின் கருத்துக்களுடன் உடன்பட்டாலும், மற்றவர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் விடுப்பு எடுப்பது பெண்கள் மாதவிடாய் வலியைக் கையாள உதவும் என்று வாதிடுகின்றனர்.

சில மாநிலங்களும், பல பெரிய தனியார் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாகத் தங்கள் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

மாதவிடாய் விடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தேசிய அளவிலான மாதவிடாய் விடுப்புக் கொள்கையைக் கோரி வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தது என்று சட்ட இணையதளமான 'லைவ் லா' செய்தி வெளியிட்டுள்ளது.

மாதவிடாய் காலச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு "இரண்டு முதல் மூன்று நாட்கள் விடுப்பு" கிடைக்கும் என்று தான் நம்பியதாக திரிபாதி பின்னர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இருப்பினும், இத்தகைய கொள்கையை அறிமுகப்படுத்துவது பெண்களுக்குப் பயனளிக்காது என்றும், மாறாக, இது பாலின ரீதியான ஒரே மாதிரியான பார்வைகளை வலுப்படுத்துவதன் மூலமும், அவர்களின் வேலைவாய்ப்புத் திறனைப் பாதிப்பதன் மூலமும் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தனியார் துறை நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்குவதற்கு வழிவகுக்கும் என்றும், இறுதியில் பெண்களின் வேலைவாய்ப்பை இது ஊக்கப்படுத்தாமல் போகலாம் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும், "அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து மாதவிடாய் விடுப்புக் கொள்கையை உருவாக்கலாம்," என்று அவர்கள் கூறியதாக 'லைவ் லா' தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கள், இந்தியாவில் நீண்ட காலமாக மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட ஒரு விஷயத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

இது ஒரு முற்போக்கான நடவடிக்கையா அல்லது பெண்கள் பலவீனமானவர்கள் மற்றும் பணியிடத்திற்குப் பொருத்தமற்றவர்கள் என்ற ஒரே மாதிரியான பார்வையை ஊக்குவிக்கிறதா என்ற விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உச்ச நீதிமன்றத்தின் கருத்து பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?

மாதவிடாய் விடுப்பு பெண்களை பணிபுரியத் "தகுதியற்றவர்களாக " மாற்றும் என்று நீதிபதிகள் கூறியதன் மூலம், "அவர்கள் மாதவிடாய் குறித்த சமூகத் தடையை மீண்டும் வலியுறுத்துகின்றனர். மேலும் நாம் இதுவரை பெறத் தவறிய உரிமைகள் பற்றியும் வெளிப்படுத்துகின்றனர்" என்று பொது சுகாதார நிபுணரும் வழக்கறிஞருமான சுகிருதி சவுகான் பிபிசியிடம் தெரிவித்தார்.

பெண்களுக்கான "பணியிட கண்ணியம், பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்" பற்றிப் பேசும் சட்டங்கள் இந்தியாவில் உள்ளன என்றும், "மாதவிடாய் விடுப்பை மறுப்பது பெண்களை அசௌகரியமான, கண்ணியமற்ற அல்லது அபாயகரமான பணிச்சூழலுக்குத் தள்ளுவதன் மூலம் இந்தக் கொள்கைகளை மீறுகிறது" என்றும் அவர் கூறினார்.

மேலும், "மாதவிடாய் விடுப்பு வழங்குவது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், வேலை இடங்களில் உற்பத்தித்திறன் மற்றும் திறமையையும் மேம்படுத்துகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்குக் கூடுதல் விடுப்பு வழங்குவது ஆண்களுக்கு எதிரான பாகுபாடாக அமையும் என்றும், மாதவிடாய் இன்னும் ஒரு விலக்கப்பட்ட விஷயமாகக் கருதப்படும் நாட்டில், அதாவது பெண்கள் கோவில்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுவதோ அல்லது "அசுத்தமானவர்கள்" என்று வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதோ நடக்கும் சூழலில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த விடுப்பைக் கோரவே கூச்சப்படலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால் ஸ்பெயின், ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தோனீசியா போன்ற பல நாடுகள் ஏற்கனவே மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன என்றும், இந்த விடுப்பு பெண்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியாவில் மாதவிடாய் விடுப்பு வழங்கும் அமைப்புகள், நிறுவனங்கள் எவை?

மாதவிடாய் விடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்தியாவின் சில மாநிலங்களும் வரையறுக்கப்பட்ட மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன. உதாரணமாக, பிஹார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு நாட்கள் விடுப்பு வழங்குகின்றன, அதே நேரத்தில் கேரளா, பல்கலைக்கழகம் மற்றும் தொழில் பயிற்சி நிறுவன ஊழியர்களுக்கு இதை வழங்குகிறது.

கடந்த ஆண்டு, தென்னிந்திய மாநிலமான கர்நாடகா மாதவிடாய் காலத்தில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒரு நாள் விடுப்பு அளிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில், பல நிறுவனங்களும் பெண் ஊழியர்களுக்காக இதே போன்ற கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

2025-ஆம் ஆண்டில், தொழில்துறை மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆர்பிஜி குழுமம், தனது துணை நிறுவனமான சியட் ஊழியர்களுக்கு மாதம் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை அறிவித்தது.

பொறியியல் துறையின் முன்னணி நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனமும் இதே போன்ற கொள்கையை அறிமுகப்படுத்தி மாதம் ஒரு நாள் விடுப்பு வழங்குகிறது, அதே நேரத்தில் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ ஆண்டுக்கு 10 நாட்கள் வரை மாதவிடாய் விடுப்பு வழங்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு