You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இணைய தாக்குதலா? அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் முடங்கின
அமெரிக்காவில் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் ஸ்தம்பித்துப் போயின. ஆயிரக்கணக்கான விமானங்கள் முடங்கின. இணைய தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், முழுமையான விசாரணைக்கு அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு விமான சேவைகளே பெருமளவில் முடங்கியுள்ளன. வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களும், வந்து சேரும் விமானங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையை ஒட்டிய கிழக்கு மாகாணங்களில்தான் அதிக அளவில் விமான சேவைகள் முடங்கியுள்ளன.
விமானம் பயணிக்கும் பாதையில் தோன்றும் ஆபத்துகள், வானிலை மாற்றங்கள், தற்காலிக மாறுபாடுகள் குறித்த தகவல்களை விமானிகளுக்கு உடனுக்குடன் அளிக்கும் தகவல் பரிமாற்ற கட்டமைப்பு (Notice to Air Missions System - NOTAM ) திடீரென செயலிழந்ததே இதற்குக் காரணம். செல்லும் பாதை பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாத நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து விமானங்கள் புறப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்கா முழுவதும் இவ்வாறு புறப்படத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான விமானங்கள் திடீரென அப்படியே நிறுத்தப்பட்டன. இதையடுத்து, தேசிய கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம்(FAA) தெரிவித்தது.
விமானிகளுக்கு உரிய எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக எப்.ஏ.ஏ. கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்யும் பணி எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்த தொடர்ச்சியான அப்டேட்களை அந்த அமைப்பு வழங்கிய வண்ணம் இருந்தது. அனைத்து விமான நிறுவனங்களின் விமான சேவைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கன் ஏர் விமான நிறுவனம் கூறியுள்ளது. எஃப்.ஏ.ஏ.விடம் இருந்து கூடுதல் விவரம் கிடைக்கும் வரை அனைத்து உள்நாட்டு விமானங்களும் தாமதமாகவே இயக்கப்படும் என்று யுனைட்டட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முழுவதுமே விமான சேவைகளில் தாமதம் இருப்பதாக விமானப் பயணிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். விமான சேவைகள் தாமதம் குறித்த உரிய விவரங்களை சரியான நேரத்தில் எப்.ஏ.ஏ. பகிர்ந்து கொள்ள தவறிவிட்டதாக குற்றம்சாட்டி பயணிகள் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். விமான சேவைகள் முடங்கியதைத் தொடர்ந்து எப்.ஏ.ஏ.வுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் பிரச்னை சரி செய்யப்படும் என்றும் அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் பீட் புட்டிஜேஜ், ட்வீட் செய்தார்.
அதேவேளையில், ட்விட்டர் வாயிலாக அடுத்தடுத்து அப்டேட்களை பகிர்ந்து வந்த எப்.ஏ.ஏ. வானில் பறக்கும் அனைத்து விமானங்களுமே பாதுகாப்பாக தரையிறங்குவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக எப்.ஏ.ஏ. அடுத்த அப்டேட்டை வழங்கியது. விமானங்களை தரையிலேயே நிறுத்தி வைக்குமாறு கொடுத்த எச்சரிக்கையையும் எப்.ஏ.ஏ. திரும்பப் பெற்றது. தேசிய விமான கட்டுப்பாடு அமைப்பில் ஏற்பட்ட பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் எப்.ஏ.ஏ. தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது.
எப்.ஏ.ஏ. அறிவிப்பைத் தொடர்ந்து, நியூ ஆர்க், அட்லாண்டா உள்ளிட்ட பல நகரங்களில் விமான சேவைகள் படிப்படியாக தொடங்கி வருகின்றன. அமெரிக்காவில் விமான சேவைகளை ஸ்தம்பிக்கச் செய்த தொழில்நுட்பக் கோளாறுக்கு இணைய தாக்குதல் காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், இதற்கான வாய்ப்புகளை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. விமான சேவை பாதிப்பு குறித்த விவரங்களை அதிபர் பைடனிடம் போக்குவரத்துத் துறை செயலாளர் பகிர்ந்து கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர்ரி தெரிவித்துளளார்.
தற்போதைய நிலையில், தொழில்நுட்பக் கோளாறுக்கு இணைய தாக்குதல் காரணமாக இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் இதுகுறித்து முழுமையாக விசாரணையைத் தொடங்குமாறு போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்