You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துணிவு விமர்சனம்: என்ன சொல்கின்றன ஊடகங்கள்?
நடிகர்கள்: அஜீத், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, பாவனி ரெட்டி, மகாநதி சங்கர், ஜி.எம். சுந்தர்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இசை: ஜிப்ரான்; இயக்கம்: எச். விநோத்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அஜீத் - விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கின்றன. வலிமைக்குப் பிறகு அஜீத்துடன் எச். வினோத் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது.
இந்தப் படத்தின் கதை இதுதான்: சென்னையின் பிரதான பகுதியில் இயங்கும் வங்கியில் கொள்ளையடிக்க உள்ளே நுழையும் கும்பல் ஒன்று, வங்கிக்குள் உள்ள அனைவரையும் பணயக் கைதிகளாக்குகிறது. அந்த நேரத்தில் வாடிக்கையாளரைப் போல உள்ளே வரும் கதாநாயகன் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். திடுக்கிட்டுப்போகும் காவல் துறை கதாநாயகனைப் பிடிக்க அலர்ட்டாக, இறுதியில் காவல் துறை கையில் மைக்கல் சிக்கினாரா? எதற்காக அவர் வங்கியைக் கொள்ளையடிக்க நினைக்கிறார் என்பது மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, முதல் பாதி மிகச் சிறப்பாக அமைந்திருந்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை அவ்வளவு சிறப்பாக இல்லை என்கிறது இந்து தமிழ் திசை இணைய தளத்தின் விமர்சனம்.
"படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் அதீத ஆக்ஷன் காட்சிகள், தெறிக்கும் தோட்டாக்களுடன் நகர்கிறது. ஆரம்பத்தில் ரசிக்க வைக்கும் அந்த தோட்டாக்களின் சத்தம் ஒரு கட்டத்தில் இரைச்சலாக மாற, விறுவிறுப்பு மட்டுமே மிஞ்சி கதை நகராமல் ஒரே இடத்தில் தேங்கிவிடுகிறது. அதுவரை கட்டி எழுப்பப்பட்ட பில்டப்பிற்கு கதை சொல்லியாக வேண்டிய இரண்டாம் பாதியில் அஜித்துக்கான பின்புலக் கதை படு சுமார் ரகம். அதற்கடுத்து வரும் மற்றொரு பின்புலக் கதையானது, கருத்தை சொல்லியாக வேண்டுமே என செயற்கையாக திணிக்கப்பட்டிருப்பதை போல துரத்தி நிற்கிறது. இரண்டாம் பாதியைப் பார்க்க ரசிகர்களுக்கே ‘துணிவு’ தேவைப்படுகிறது. சில இடங்களில் வகுப்பெடுக்கும் உணர்வும் எழுவதை அடக்க முடியாமல் போகிறது.
‘இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத’ என வடமாநில காவல் படையிடம் பேசும் அரசியல் வசனங்களும், வங்கிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசின் முகத்தையும் படம் பதிவு செய்கிறது. அத்துடன் திருநங்கை ஒருவரை அவரின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தது நெருடல். க்ளைமாக்ஸ் காட்சிகளில் வரும் அதீத ஹீரோயிசமும், திகட்டும் ஆக்ஷனும் படம் முடிந்தும் முழுமையில்லாத உணர்வை கொடுக்கிறது." என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
"துணிவு படத்தில் அசரச் செய்யும் முதல் விஷயம், அதன் வேகம். ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு தலைதெரிக்கும் வேகத்தில் ஒடுகிறது படம். வேகம் குறைந்து இயல்புநிலைக்கு வரவே சிறிது நேரம் பிடிக்கிறது.
இது போன்ற ஒரு படத்தின் கதையை எழுதுவதற்கு முன்பாக என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டுமோ, அவற்றுடன் களமிறங்கியிருக்கிறார் எச். விநோத். நிதி ரீதியான முறைகேடுகள் எப்படிச் செய்யப்படுகின்றன, கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை வங்கியில் முதலீடு செய்யும்போது அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என ஏகப்பட்ட தகவல்களைத் தருகிறார் வினோத். ஆனால், படம் ஓடும் வேகத்தில் இவற்றையெல்லாம் புரிந்துகொள்வதற்கு சற்று சிரமமாக இருக்கிறது. படத்தின் வேகம் சற்று குறைந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் வில்லன்கள் மட்டுமல்ல, காவல்துறையினர், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனைவருமே வில்லன்கள்தான். ஆனால், ஒருவர் எப்படி மற்றவருக்கு உதவுகிறார் என்பது படத்தின் வேகத்தில், சரியாக விவரிக்கப்படவில்லை.
இந்தப் படத்தின் இரண்டாம் பாதியை ஒருவர் தனியாகப் பார்த்தால், ஷங்கர் அல்லது ஏ.ஆர். முருகதாஸின் படத்தில் வரும் காட்சிகளோ எனத் தோன்றும். நாயகன் ஏன் இதுபோலச் செய்கிறார் என்பதை விவரிக்க, ஷங்கர் படங்களில் வருவதைப் போன்ற ஒரு துயர்மிகு ஃப்ளாஷ்பேக் வருகிறது. மற்றொரு பகுதியில், ஏ.ஆர். முருகதாஸ் படங்களில் வருவதைப் போல மக்களை ஏமாற்றிவந்த வில்லன்கள், தொலைக்காட்சியில் நேரலையில் தங்கள் செயல்களை விளக்குகிறார்கள்.
ஒரு கட்டத்தில் லாஜிக் இல்லாத துரத்தல் காட்சிகள் எல்லாம் வர ஆரம்பிக்கும்போது, தைரியம் மட்டுமே புகழைக் கொடுத்துவிடுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது" என இந்தப் படத்தை விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
துணிவு திரைப்படம் மின்னல் வேகத்தில் பயணிக்கும் பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் என புகழ்ந்திருக்கிறது புதிய தலைமுறை இணையதளத்தின் விமர்சனம்.
"ஆக்ஷன் த்ரில்லர், மணி ஹெய்ஸ்ட் பாணி கதை, அதனூடே ஒரு சமூக கருத்து என பக்காவான பாதையைப் பிடித்திருக்கிறார் எச். வினோத். ஏமாற்றுவதில் இருக்கும் சுவாரஸ்யத்தை நமக்கு சதுரங்க வேட்டையில் சொல்லிக்கொடுத்த வினோத், இந்த முறை ஏமாற்றத்தால் நிகழும் சோகம் குறித்தும் அது தரும் வலி குறித்தும் பாடம் எடுத்திருக்கிறார்.
இரு கும்பல் VS காவல் துறை VS வங்கி என ஆரம்பிக்கும் கதை மெல்லமெல்ல திசைமாறி விஸ்வரூபமெடுக்க ஆரம்பிக்கிறது. அஜீத்தின் பின்கதை என்ன, காவல்துறை உண்மையிலேயே உங்கள் நண்பனா, வங்கிகளில் நமக்கென வழங்கப்படும் ஆஃபர்களில் எவையெல்லாம் ஆப்புகள், என பல்வேறு கிளைக் கதைகளுடன் பயணிக்கும் கதையை பரபர த்ரில்லர் ஆக்ஷனாக்கியிருக்கிறார் எச். வினோத்.
எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன அஜீத்தை எனர்ஜியுடன் பார்த்து? மனிதர் அவ்வளவு ஜாலியாக நடித்திருக்கிறார். மங்காத்தா சால்ட் & பெப்பர் லுக் என்றால், துணிவு சால்ட் மட்டும்தான். அஜீத்திற்கு கிட்டத்தட்ட படத்தில் பெயரே இல்லை. அவர் யார் என்பதைக் காவல்துறை கண்டறிய முயலும்போதெல்லாம் ஜாலி டான்ஸ்தான். மங்காத்தா ஸ்டைல் சிரிப்பு, நக்கல் வசனங்கள், படு ஸ்டைலான லுக் என ஆளே மாறியிருக்கிறார்" எனப் பாராட்டியிருக்கிறது புதிய தலைமுறை.
துணிவு திரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். ஆனாலும் குறைகளைத் தாண்டி படத்தை ரசிக்க முடியும் என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.
"துணிவு படத்தில் சறுக்கல்கள் இல்லாமல் இல்லை. திரைக்கதை சில இடங்களில் மோசமாக இருப்பதோடு, சில இடங்களில் பின்னிழுக்கவும் செய்கிறது. நம்பவே முடியாத, யதேச்சையான சம்வங்கள், லாஜிக் ஓட்டைகளும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷன் காட்சிகள் நீண்டு கொண்டே செல்கிறது. படத்தின் மையமான விஷயத்தைச் சொல்வதற்கு முன்பாக நிறைய சுற்றிவளைக்கிறார்கள்.
ஏகப்பட்ட தகவல்களைக் கொட்டாமல், திரைக்கதையைச் சுருக்கியிருந்தால் துணிவின் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். பல தருணங்களில் ஏகப்பட்ட தகவல்களைக் கொட்டுகிறார்கள் எனத் தோன்றுகிறது. உண்மையிலேயே என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, உச்சகட்ட காட்சி வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதேபோல, ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் உணர்வுரீதியாக ஒன்ற முடியவில்லை என்பதும் பலவீனம்தான்.
இத்தனையும் சொன்னாலும் அஜீத் குமார்தான் இந்தப் படத்தின் ஆன்மா. படாடோபமான எதிர் - நாயகனாக வரும் அஜீத்தைப் பார்ப்பதே ஆனந்தமாகஇருக்கிறது. அவருடைய தோற்றம், நடந்துகொள்ளும்விதம் எல்லாம் சிறப்பாக அமைந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் நாம் ரசித்த அஜீத்தை இந்தப் படம் திருப்பிக் கொடுத்திருக்கிறது. நல்ல அடிப்படை இருப்பதால், இன்னும் சிறப்பாக அமைந்திருக்க முடியும். ஆனால், அதைத் தாண்டி படத்தை ரசிக்க முடியும்" என்கிறது இந்தியா டுடே இதழின் விமர்சனம்.
துணிவு திரைப்படத்திற்கு ஊடகங்களில் வரும் விமர்சனங்களைப் பார்க்கும்போது, முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என்றாலும், குறைகளைத் தாண்டி படத்தை ரசிக்க முடியும் என்ற முடிவுக்கே வர முடிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்