பிக் பாஸ் சீசன் 6: ட்விட்டரில் டிரெண்டாகும் 'கிரிஞ்ச் அசீம்' - என்ன நடந்தது?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி 90 நாட்களைக் கடந்துவிட்டது. விரைவில் இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன. 06) நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் விமர்சித்து விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அனைவரும் மற்ற போட்டியாளர்கள் வழங்கிய விருதுகளை பெற்றுக்கொண்ட நிலையில், அசீம் மட்டும் இரு விருதுகளை புறக்கணித்தது சர்ச்சையாகியுள்ளது. அவர் புறக்கணித்த விருதுகளுள் ஒன்றான 'கிரிஞ்ச்' விருது தற்போது அவர் பெயருடன் ட்விட்டரில் டிரெண்டாகி (Cringe Azeem) வருகிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் இறுதிப்போட்டியில் நேரடியாக நுழைவதற்கான டிக்கெட்டை (Ticket To Finale) பெறுவதற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் பெறும் இடங்களின் அடிப்படையில் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டைல்ஸ் கற்கள் வழங்கப்படும். அதை பிக் பாஸ் இல்லத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள சாலையில் ஒவ்வொரு போட்டியாளரும் பொருத்தி வர வேண்டும்.

எந்த போட்டியாளர் டைல்ஸ் கற்கள் மூலம் தனக்கான வரிசையை முதலில் நிறைவு செய்கிறாரோ அவருக்கே இறுதிப்போட்டியில் நேரடியாக நுழைவதற்கான டிக்கெட் வழங்கப்படும்.

அதன்படி, நடத்தப்பட்ட போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் அமுதவாணன் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் அதற்கான போட்டி நடத்தப்பட்டது. முடிவில் அமுதவாணன் சக போட்டியாளர்களை முந்தி டைல்ஸ் கற்கள் மூலம் தனக்கான சாலையை நிறைவு செய்து இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை பெற்றார். அந்த டிக்கெட், ட்ரோன் மூலம் கொண்டு வரப்பட்டு அமுதவாணனுக்கு வழங்கப்பட்டது. 

இதையடுத்து, போட்டியாளர்கள் ஒருவரையொருவர் விமர்சித்து வழங்கப்படும் 'Critics Award' விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 'ஓபனிங்லாம் நல்லா இருக்கு, உங்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா' என்ற விருதை ஏ.டி.கே. அசீமுக்கு வழங்கினார்.

அசீம் செய்ய நினைப்பது ஒன்றாகவும் முடிவில் அது வேறு மாதிரியாக ஆகிவிடுவதாகவும் காரணம் கூறி, அசீமுக்கு இந்த விருதை ஏடிகே வழங்கினார். ஆனால், இந்தக் காரணம் தனக்கு சரியாகப்படவில்லை என்றும், எனக்கு இந்த விருது வழங்கியது பிடிக்கவில்லை என்றும் கூறி, அந்த விருதை அசீம் ஏற்க மறுத்துவிட்டார்.

அதேபோன்று, 'கிரிஞ்ச்' விருதை விக்ரமன் அசீமுக்கு வழங்கினார். தன்னுடைய பேச்சோ, செயல்களோ மற்றவர்களுக்கு சுவாரஸ்யத்தை அளிக்காதபோது அந்த நபர்களை 'கிரிஞ்ச்' எனக் குறிப்பிடும் டிரெண்ட் உள்ளது.

இந்தக் காரணத்திற்காக அசீமுக்கு அவ்விருதை வழங்குவதாக விக்ரமன் கூறினார். "மற்றவர்களை நீங்கள் இகழ்ந்து பேசுவது எனக்கு 'கிரிஞ்ச்' ஆக தெரிகிறது" என விக்ரமன் கூறினார். ஆனால், தான் 'கிரிஞ்ச்' இல்லை எனக் கூறிய அசீம், அந்த விருதை விக்ரமனுக்கே அளித்தார். இருவருக்கும் இடையே அப்போது சிறிய விவாதம் நடைபெற்றது. "பிக்பாஸ் மேடையை உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள்.

உங்களின் ஓட்டரசியலுக்கான மேடை பிக் பாஸ் மேடை அல்ல. ஓட்டு அரசியலுக்காகத்தான் நீங்கள் ஷிவினை எப்போதும் புகழ்கிறீர்கள்" என்று அசீம் விக்ரமனிடம் கூறினார். அசீம் தனக்கு அளித்த அந்த விருதை மேடையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார் விக்ரமன். இரு விருதுகளைப் புறக்கணித்த அசீம், 'வீக்கெண்ட் ஆக்டர்' என்ற விருதை கதிரவன் வழங்கியபோது அதை ஏற்றுக்கொண்டார். 'முந்திரி கொட்டை' என்ற விருதை ரக்‌ஷிதா வழங்கியபோதும் அதை அசீம் பெற்றுக்கொண்டார். 

அதேபோன்று, அசீம் மற்றவர்களை விமர்சித்து வழங்கிய விருதுகளை அந்தப் போட்டியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். 'பேமெண்ட் வேஸ்ட்' என்ற விருதை அசீம் வழங்கியபோது அதை ரக்‌ஷிதா பெற்றுக்கொண்டார். '

விஷ பாட்டில்' என்ற விருதை அசீம் ஷிவினுக்கு வழங்கியபோதும் அதை அவர் பெற்றுக்கொண்டார். 'பன்னிக்குட்டியெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது' என்ற விருதை ரக்‌ஷிதா விக்ரமனுக்கு வழங்கினார். தனக்கு இது ஏற்புடையதாக இல்லாவிட்டாலும், அவர் வழங்கியதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி விக்ரமன் அதைப் பெற்றுக்கொண்டார். அதேபோன்று, 'ஓஹோ, இதான் அநியாயத்தைக் கண்டா பொங்குறதா?" என்ற விருதை ஷிவின் விக்ரமனுக்கு வழங்கினார்.

அதற்கு ஷிவின் கூறிய காரணத்தை ஏற்காத விக்ரமன், மரியாதைக்காக தான் இதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், பழைமையான விஷயங்களை இப்போதும் பேசுபவர் என்ற அர்த்தத்தில் 'பூமர் அங்கிள்' என்ற பட்டத்தை அமுதவாணன் விக்ரமுக்கு வழங்கினார்.

அதை மரியாதைக்காக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த விக்ரம், தான் பழைமைவாதி அல்ல என்றும் 'மாடர்ன்' என்றும் கூறினார். 'ஜால்ரா' பட்டத்தை அமுதவாணன் மைனாவுக்கு வழங்கினார்.

இவ்வாறு நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிலையில், அசீம் ஏற்றுக்கொள்ளாத 'கிரிஞ்ச்' விருது அவர் பெயருடன் 'Cringe Azeem' என்ற ஹேஷ்டேகில் டிரெண்டாகி வருகிறது.

தற்போதுவரை அதில் 16,000 ட்வீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன. விக்ரமனின் அரசியல் வாழ்க்கையை அசீம் குறிப்பிட்டுப் பேசியதையும் எப்போதும் கோபப்படும் அவர் வார இறுதிகளில் கமல்ஹாசன் முன்பு வேறு மாதிரியாகப் பேசுவதையும் குறிப்பிட்டு அசீம் 'கிரிஞ்ச்' தான் எனப் பலரும் பதிவிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: