You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் - அஜித்: யார் பெரிய நடிகர்? தில் ராஜுவின் கருத்தால் ரசிகர்கள் ஆவேசம்
அஜித்தை விட விஜய் பெரிய நடிகர்; அவர் நடிக்கும் படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் தேவை என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியிருக்கிறார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்துப் பேசவிருப்பதாக கூறியிருக்கிறார். ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
துணிவு படத்தை எச். வினோத்தும் வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளியும் இயக்குகின்றனர். துணிவு படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் என்ற பெயரில் தில் ராஜு என்பவர் தயாரிக்கிறார்.
இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டில்தான் விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் அஜித் நடித்த வீரம் திரைப்படமும் பொங்கலின்போது ஒரே நேரத்தில் வெளியாகின. எட்டு ஆண்டுகள் கழித்து இரு நடிகர்களின் படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால், விஜய், அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியது.
இதையடுத்து, அந்தப் படத்திற்கு திரையரங்குகளை 'புக்' செய்யும் பணிகள் வேகமான நடந்தன. தற்போதைய சூழலில் வாரிசு படத்தைவிட துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் 'புக்' செய்யப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தை வெளியிடுவதில் ஆரம்பத்தில் இருந்தே தில் ராஜு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறார்.
முதலில், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் விழா காலங்களில் நேரடி தெலுங்குத் திரைப்படங்களுக்கே திரையரங்குகளில் முன்னுரிமை தரப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டிலும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த தில் ராஜு, வாரிசு திரைப்படத்திற்கும் உரிய திரையரங்குகளைக் கேட்டு உதயநிதி ஸ்டாலினைச் சந்திக்கப்போவதாகத் தெரிவித்தார்.
ஆனால், அதே பேட்டியில் தமிழ்நாட்டில் அஜித்தோடு ஒப்பிட்டால் விஜய்தான் நம்பர் ஒன் நடிகர் என்று தெரிவித்தது, அஜித் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
“தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் நட்சத்திரம் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சுமார் 800 தியேட்டர்கள் உள்ளன. நான் அவர்களிடம் 400 தியேட்டர்கள் தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன். கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்.
என் படமும் பெரிய படமாக இருந்தும் நான் தியேட்டர்களுக்காக கெஞ்ச வேண்டியிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார்.
விரைவில் சென்னைக்கு சென்று அவரைச் சந்தித்து எனக்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்குமாறு கேட்கப் போகிறேன். நடிகர் விஜய், அஜித்தை விட பெரிய ஸ்டார். அதனால்தான் ஒரு தயாரிப்பாளராக விஜய் படத்திற்கு அதிக தியேட்டர்கள் தரவேண்டுமென சொல்கிறேன்” என அந்தப் பேட்டியில் தில் ராஜு கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் யார் பெரிய நடிகர் என்பது குறித்து சண்டையிட்டு வருகின்றனர். #Dilraju என்ற ஹாஷ்டாகும் ட்ரெண்டாகி வருகிறது.
அஜித்தின் படத்தை உதயநிதி வெளியிடுவதால், விஜயின் ரசிகர்கள் சக்தியும் அஜித்தின் படத்தை வெளியிடும் உதயநிதியின் அரசியல் சக்தியும் போட்டியிடுவதாகப் பொருள்படும் வகையில் 'Fans Power vs Political Power' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் விஜய்யை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. அதன் படத்தை சிலர் பகிர்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், தயாரிப்பாளர் தில் ராஜு இன்று சென்னையில் இருப்பதாகவும் கூடுதல் திரையரங்குகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு அல்லது நாளை இது தொடர்பான அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்