You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாரிசு விமர்சனம்: விஜய்யின் நகைச்சுவை, ஆக்ஷன் எப்படி?
நடிகர்கள்: விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பு, யோகிபாபு; ஒளிப்பதிவு: கார்த்திக் பழனி, இயக்கம்: வம்சி பைடிபள்ளி.
தெலுங்கில் பிரபல இயக்குநரான வம்சி பைடிபள்ளியின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு. இதற்கு முன்பாக வம்சியின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த படம் தோழா மட்டும்தான்.
வாரிசு படத்தின் கதை இதுதான்: ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி இருக்கிறது. தன் தந்தை எப்போதும் நிறுவனமே கதி என்று இருப்பதால், ராஜேந்திரனின் மகன்களில் ஒருவரான விஜய், வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டுக்கு வரும் விஜயிடம், தனது தொழிலில் உள்ள பிரச்னைகள், வீட்டில் உள்ள பிரச்னைகளை ராஜேந்திரன் கூற, அதனை எதிர்கொள்ள முடிவெடுக்கிறார் விஜய். இதனை எப்படி சாதிக்கிறார் என்பதுதான் மீதிப் படம்.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தை விஜய்யின் ரசிகர்கள் ரசிக்கலாம். மற்றவர்கள் அதே அளவு ரசிக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
"படத்தின் மிகப் பெரிய பிரச்னை, அதன் மையக்கதை. விஜய்க்கும் சரத்குமாருக்கும் இடையிலான பிரச்னையை காட்டியிருக்கும் விதம் அழுத்தமில்லாமல் இருப்பதுதான். அதேபோல வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் பலவீனமான எழுத்து சுவாரஸ்யமில்லாமல் கடக்கிறது. படத்தின் தொடக்கத்தில் ‘சூர்யவம்சம்’ காட்சிகள் நினைவுக்குவர, அதற்குப் பிறகு ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ எட்டிப் பார்க்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்க்கும் உணர்வும் எழாமலில்லை. காரணம், அந்தப் படத்தின் கேங்க்ஸடருக்கு பதிலாக கார்ப்பரேட் தொழிலை பின்புலமாக வைத்தால் ‘வாரிசு’ கதை ஒட்டிவிடுகிறது. அப்பா - மகன்கள், அண்ணன் தம்பிகளுக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் மூட்டையில் திணிக்கும் துணியைப் போல பிதுங்கி புடைத்திருக்கிறது.
கணிக்கக்கூடிய கதையுடன் காட்சிகளாகவும் எளிதில் கணிக்க முடிவதால் சுவாரஸ்யம், விறுவிறுப்புக்கு வறட்சி நிலவுகிறது. தேவையில்லாத இடங்களில் பாடல்களும், சண்டைக் காட்சிகளும், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் வாக்குப் பதிவு என கூறி வைக்கப்பட்ட காட்சி ஒன்றும் சோதிக்கிறது. விஜய் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை வேறு வகையில் சொல்லவைத்திருப்பது சில இடங்களில் கைகொடுக்கிறது. ஆனால், பல இடங்களில் ‘கிரிஞ்ச்’ ஆகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்புத் தோற்றம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் அதீத செயற்கை ஆக்ஷன் காட்சிகள் தெலுங்கு படங்களை நினைவூட்டுகின்றன" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
மேலும், விஜய் போன்ற பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை குற்றவாளியாக்கி, எளிய மக்களை, மாணவிகளை கடத்துபவர்களாக காட்டும் காட்சிகள் அறம் சார்ந்த பிழை என்றும் சுட்டிக்காட்டுகிறது இந்து தமிழ் திசை.
உப்புசப்பில்லாத கதைக்களத்துடன், வழக்கமான சினிமாவாக எஞ்சியிருக்கிறது வாரிசு என விமர்சித்துள்ளது புதிய தலைமுறை இணையதளம்.
"படத்தின் மிகப் பெரிய போதாமை, படத்தின் திரைக்கதையில் இருக்கிறது. குடும்பப் பாசம், பனிப்போர் தொடர்பான கதை என்றாலும் அதில் எவ்வித உப்புச்சப்பில்லாமல், எதற்கெனத் தெரியாமல் மோதிக்கொள்ளும் அண்ணன் - தம்பி பஞ்சாயத்து போரடிக்க வைக்கிறது. எதிர்மறை கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்படவில்லை. விஜய் போன்ற ஸ்டாருடன் போட்டிபோடும் அளவுக்கு இல்லையென்றாலும் சுமாரான சண்டைக்குக்கூட லாயக்கில்லாத அளவுக்கு மேம்போக்காக கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருப்பதால் எப்படியும் எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என நமக்குத் தெரிந்துவிடுகிறது.
இதுபோன்ற பிசினஸ் சம்பந்தப்பட்ட களத்தில் ஹீரோவுக்கு வரும் சவால்களை இன்னும் மிஸ்டர் பாரத் காலத்திலிருந்தே யோசித்துக் கொண்டிருப்பது படு போர். கதையளவில் புதிதாக எதுவும் வழங்காத மிக மிக வழக்கமான ஒரு சினிமா," என விமர்சித்துள்ளது புதிய தலைமுறை இணையதளம்.
தினமணி நாளிதழின் இணைய தளமும் திரைக்கதை மிக மேலோட்டமாக இருப்பதாகக் கூறியிருக்கிறது.
"இந்தப் படத்தின், திரைக்கதைக்குத் தேவையான சிக்கல்கள் பெரும்பாலும் குடும்பத்தைச் சுற்றியே வருவதால், படத்துக்கு ஒரு வில்லன் கதாபாத்திரம் தேவை என்பதற்காக எழுதப்பட்டதைப்போல இருக்கிறது ஜெயபிரகாஷாக வரும் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம். இருந்தபோதிலும், வாரிசு திரைப்படத்தை எடுப்பதற்கான நோக்கத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார் வம்சி.
மையக் கருவான தாயின் பார்வையில் குடும்பத்தைப் பார்க்கும் உணர்வுகள், எல்லாம் இருந்தும் அனைத்தையும் இழந்ததைப் போல தவிக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு தந்தை / தொழிலதிபர் உணர்வுகள் மிகச் சரியாகக் கடத்தப்பட்டிருக்கிறது. தவறியிருந்தால் படமே தடம்புரண்டிருக்கும். வம்சியின் இரண்டாவது நோக்கம் விஜய் ரசிகர்கள். ரசிகர்களுக்கும் சரியான விருந்தைப் படைத்திருக்கிறார் வம்சி. குறிப்பாக இரண்டாவது பாதியில் “மூன்று பிளாக்பஸ்டர் கதையைச் சொல்லி” என விஜய் பேசுவதும், அந்தக் காட்சியே போதும், வம்சி மனதில் விஜய் ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர.
படம் முழுக்க தனியொருவராக தூக்கி சுமக்கிறார் விஜய் என்றால் மிகையாகாது. நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல்கள் என முதல் பாதியில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய். இரண்டாவது பாதியிலிருந்து, விசில் பறப்பதற்கான காட்சிகளிலும் விஜய் மிரட்டியிருக்கிறார். நடனம், கேலி - கிண்டல், சண்டை என மேலே சொன்னதைப்போல படத்தின் திரைக்கதையைத் தனியாளாக சுமந்திருக்கிறார் விஜய். ஆனால், திரைக்கதையைப் பொருத்தவரை, மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்ட உணர்வைத் தருகிறது" என்கிறது தினமணி இணையதளம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்