செந்தில் பாலாஜி: எதிரிகளை நண்பர்களாக்கி அசுர வளர்ச்சி கண்ட அரசியல்வாதி

பட மூலாதாரம், SENTHIL BALAJI/TWITTER
செந்தில் பாலாஜி... இன்று மாநில எல்லை தாண்டி தேசிய அளவில் அரசியல் தலைவர்கள் உச்சரிக்கும் பெயராக மாறி நிற்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக, அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஏற்பு தெரிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அவரை அமைச்சரவையில் தொடர வைத்திருந்தது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விசாரணைக்காக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கொண்டு செல்லவிருந்த நிலையில், நெஞ்சு வலிப்பதாக, செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில், அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவாமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
யார் இந்த செந்தில் பாலாஜி
கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டு, அரசியலில் குதித்த அவர், திமுகவில் பயணத்தை தொடங்கி அதிமுகவில் அசுர வேக வளர்ச்சி கண்டு, பின்னர் தொடங்கிய இடத்திற்கே வந்தவர். கட்சி மாறி வந்திருந்தாலும் கூட, திமுகவில் சீனியர்களை எல்லாம் தாண்டி திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதியாக கட்சிக்குள் முக்கியத்துவம் தேடிக் கொண்டவர்.
கள அரசியலில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர், தமிழ்நாடு அமைச்சரவையில் மிக முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருப்பவர் என்பதாலேயே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வால் குறி வைக்கப்பட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது எந்த வழக்கில் சிக்கி இன்றைய முதலமைச்சரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாரோ அதே வழக்குதான் இப்போதும் கழுத்தைச் சுற்றிய பாம்பாக அவரை மீண்டும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதே அந்த வழக்காகும்.
கரூரில் பிறந்த செந்தில் பாலாஜி மிகக் குறுகிய கால கட்டத்தில் அரசியலில் படுவேகமாக முன்னுக்கு வந்து, இன்று அவருக்காக தேசியத் தலைவர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவரது இந்த அசுர வளர்ச்சியை எப்படி எட்டினார்?
அதற்காக எத்தகைய உத்தியை பயன்படுத்தினார்? வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டதோடு, எதிர்கொண்ட சிக்கல்களை எப்படி சமாளித்தார்?
திமுக to அதிமுக - அசுர வளர்ச்சி
கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர்.
1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். அதன் பிறகுதான் அவரது அசுர வளர்ச்சி தொடங்கியது. இந்த கால கட்டத்தில் நியூமராலஜிப்படி, செந்தில் குமார் என்ற தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.
கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரான அவர், 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார்.
2007ம் ஆண்டில் கரூர் மாவட்டச் செயலாளராக, அதிமுகவில் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றார். இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி.
இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.
2015-ம் ஆண்டு வரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியமைத்த போதும், செந்தில் பாலாஜியை மட்டும் நீக்கவே இல்லை. சீனியர் தலைகள் எல்லாம் உருண்ட போதும் செந்தில் பாலாஜி மட்டும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது. செந்தில் பாலாஜி முதலமைச்சராக்கப்படலாம் என்று கூட பேச்சுகள் அடிபட்டன. அந்த அளவுக்கு அதிமுகவில் ஜெயலலிதாவுக்கும், சசிகலா குடும்பத்திற்கும் நெருக்கமானவராக, விசுவாசம் மிக்க நம்பிக்கையானராக வலம் வந்தார் செந்தில் பாலாஜி.

அரசியலில் திடீர் இறங்கு முகம்
ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
அடுத்தடுத்து பதவிகள் பறிக்கப்பட்ட போதிலும் அசராமல் அமைதி காத்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், காவடி எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது, பால் குடம் எடுப்பது என்று கவனம் ஈர்த்தார் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டத்தில் செல்வாக்கை வளர்த்ததுடன் நில்லாமல், மாவட்டத்திற்குள் தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜியின் அரசியலுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல், அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
அதிமுக சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.
அதிமுக பிளவுபட்டிருந்த போது, 2017 ஏப்ரலிலேயே செந்தில் பாலாஜி தி.மு.கவில் சேரப் போவதாக செய்திகள் அடிபட்டன. தன்னுடன் 5 எம்.எல்.ஏ.க்களையும் அவர் தி.மு.கவுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவருககு உறுதுணையாக நின்றார் செந்தில் பாலாஜி.
ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியால் திரும்பிப் பார்க்க வைத்த டி.டி.வி. தினகரன், அதன் பிறகு அரசியலில் தேங்கிப் போக, அவருடன் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு 2018-ம் ஆண்டு செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்.

பட மூலாதாரம், ANI
திமுகவில் சேர்ந்ததும் மீண்டும் ஏறுமுகம்
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் 23 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக பலவீனமாக இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் 100 சதவீத வெற்றியைப் பெற்றதில் முக்கிய பங்காற்றியதன் மூலம் கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெற்றதாக கூறப்படுவது உண்டு.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் வாய்ப்பு பெற்று, சட்டமன்றத்திற்குள் நுழைந்த செந்தில் பாலாஜிக்கு தனது அமைச்சரவையிலும் இடம் கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டதால் மூத்த அமைச்சர்கள் பலருக்கும் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் கசிந்தன.

அரசியலில் மீண்டும் நெருக்கடி
ரூ.1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் பா.ஜ.க. வெளியிட்ட பட்டியலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அமைச்சருக்கு நெருக்கமான பலரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வருமான வரி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் திமுக பெண் நிர்வாகி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறையிடம் தெரிவிக்காமல் வருமானவரித்துறையினர் வந்ததே பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று திருப்பூர் எஸ்பியும் விளக்கம் கொடுத்திருந்தார்.
மீண்டும் சோதனை - கைது
அதுபோன்ற நிலை இம்முறை வந்துவிடக் கூடாது என்றே, முன்கூட்டியே திட்டமிட்டு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஒருபுறம் சோதனை நடக்க, மறுபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைம் தொடர்ந்தனர்.
முடிவில், இன்று அதிகாலையில் விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் எத்தனித்த போதுதான், அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி காரிலேயே அலறித் துடித்தார்.
ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரணியில் உள்ள கட்சிகள் பலவும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்துள்ளன.

பட மூலாதாரம், ANI
கள அரசியலில் சுறுசுறுப்பானவர் என்று பெயரெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் கட்சித் தாவல், அசுர வேக வளர்ச்சி, இறங்கு முகம், வழக்குகளால் சிக்கல் என்பன மாறிமாறி வந்துள்ளன. கட்சி மாறிய போதும் சரி, சிக்கல்களை எதிர்கொண்ட போதும் சரி, தனது தனித்துவமான உத்திகளால் அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். இம்முறையும் அதுபோல் மீண்டு வருவாரா? அல்லது அவரது உத்திகள் கைகொடுக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












