ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திடீரென மண்ணில் புதைந்த கிணறு: மோட்டார் அறையும் சாய்ந்தது விவசாயிகள் அச்சம்

well

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்னந்தோப்பில் இருந்த பாசனக் கிணறு திடீரென்று மண்ணுக்குள் புதைந்தது.

கிணற்றை உள்வாங்கியபடி மிகப்பெரிய பள்ளம் உருவாகிப் பெரிதாகி வருகிறது. இதனால், கிணற்றை ஒட்டி இருந்த மோட்டார் அறையின் ஒரு பகுதி அந்தப் பள்ளத்துக்குள் இடிந்து விழுந்துவிட்டது என்கிறார்கள் அந்த ஊர்வாசிகள்.

சேதுநாராயணபுரம் என்ற ஊரை ஒட்டிய தென்னந்தோப்பு கிணற்றுக்குத்தான் இப்படி நடந்துள்ளது. இந்தக் கிணறு வத்திராயிருப்பை சேர்ந்த முருகவனம் என்ற விவசாயிக்கு சொந்தமானது.

கிணற்றை உள்வாங்கிய அந்தப் பள்ளத்தை சுற்றியும் மண் சரிந்து வருவது அந்த ஊரில் இருந்து வெளியானதாக கருதப்படும் வீடியோவில் தெரிகிறது.

தற்போது மண்ணில் புதைந்துபோன கிணறு நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், கல்லால் கட்டப்பட்ட சுற்றுச்சுவருடன் 120 அடி ஆழத்தோடு அது இருந்ததாகவும் கூறுகிறார் அதன் உரிமையாளர் முருகவனம்.

எப்படி நடந்தது?

கிணற்றை ஒட்டி மின் மோட்டார் அறையும் காவலாளி தங்கும் அறையும் இருந்தன. கிணற்றில் மேல் மட்டம் வரை தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில் திடீரென பலத்த சத்தத்துடன் கிணறு இறங்கியது; அதைத் தொடர்ந்து மின்மோட்டார் அறையும் உள்ளே விழுந்தது என்கிறார் விவசாயி முருகவனம். அக்கம்பக்கத்தில் வேலை செய்த விவசாயிகள் அங்கு சென்று பார்த்த போது அனைத்தும் தரைமட்டமாகி பூமிக்குள் புதைந்து கிடந்தது. உடனே அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாதவாறு ஆங்காங்கே கம்புகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் தடுப்பு வைத்திருந்த பகுதியும் உள்ளே விழுந்து புதைந்தது. தற்போது வரை சிறிது சிறிதாக மண் அரிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பூமி உள்வாங்கிக் கொண்டே உள்ளது. மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கான அப்பகுதிக்கான மின் வயர்கள் துண்டிக்கப் பட்டன.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இன்று பகல் பொழுதில் இந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: