You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரபல ஆடை நிறுவனம் ஸாரா குறிப்பிட்ட மாடல்களுக்கு தடை விதித்தது ஏன்?
- எழுதியவர், சார்லோட் எட்வர்ட்ஸ்
- பதவி, வணிக செய்தியாளர், பிபிசி நியூஸ்
ஃபேஷன் பிராண்டான ஸாராவின் (Zara) இரண்டு விளம்பரங்கள், "ஆரோக்கியமற்ற மெலிந்த" தோற்றமுடைய மாடல்களைக் கொண்டிருந்ததற்காக தடை செய்யப்பட்டுள்ளன.
ஒரு மாடலின் நிழல்கள் மற்றும் பின்னால் கட்டப்பட்ட முடி அலங்காரம் அவரை "மிகவும் மெலிதாக காட்டியது" என்றும், மற்றொரு படத்தில் மாடலின் தோரணையும், சட்டையின் வடிவமைப்பும் அவரது "துருத்திய" கழுத்து எலும்புகளை வெளிப்படுத்தியதாகவும் விளம்பரத் தர நிர்ணய ஆணையம் (ASA) தெரிவித்தது.
இந்த "பொறுப்பற்ற" விளம்பரங்கள் அவற்றின் தற்போதைய வடிவில் மீண்டும் தோன்றக் கூடாது என்றும், தனது அனைத்து படங்களும் "பொறுப்புடன் தயாரிக்கப்படுவதை" ஸாரா உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த கண்காணிப்பு அமைப்பு உத்தரவிட்டது.
ஸாரா இந்த விளம்பரங்களை நீக்கியுள்ளதுடன் கேள்விக்குரிய இரு மாடல்களும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டபோது ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தனர் என்றும் தெரிவித்தது.
தடை செய்யப்பட்ட இரண்டு விளம்பரங்களும் முன்பு ஸாராவின் செயலி மற்றும் இணையதளத்தில், ஆடைகளை மாடல்கள் அணிந்த மற்றும் அணியாத நிலையில் காட்டும் படங்களின் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன.
ஒரு விளம்பரம் ஒரு குட்டையான உடைக்கானது, இதில் நிழல்களை பயன்படுத்தி மாடலின் கால்களை "கவனிக்கத்தக்க வகையில் மெலிந்ததாக காட்டியதாக" ஏஎஸ்ஏ உணர்ந்தது.
மேலும், அவரது மேல் கைகள் மற்றும் முழங்கை மூட்டுகளின் தோரணை அவரை "அளவுக்கதிகமாக மெலிதான" தோற்றத்தில் காட்டியதாகவும் கூறப்பட்டது.
'துருத்திய கழுத்து எலும்புகள்'
மற்றொரு தடை செய்யப்பட்ட விளம்பரம் ஒரு சட்டைக்கானது, இதில் மாடல் "துருத்திய" கழுத்து எலும்புகளை விளம்பரத்தின் "மைய அம்சமாக" காட்டும் தோரணையில் இருந்ததாகக் கூறப்பட்டது.
ஏஎஸ்ஏ மேலும் இரண்டு ஸாரா விளம்பரங்களைப் பற்றியும் விசாரித்தது, ஆனால் அவை தடை செய்யப்படவில்லை.
ஸாரா நிறுவனம் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து படங்களையும் நீக்க முடிவு செய்தது. ஆனால் எந்த நேரடி புகார்களையும் பெறவில்லை என்று கூறியது.
இந்தப் புகைப்படங்களில் "மிகச் சிறிய வெளிச்சம் மற்றும் வண்ணத் திருத்தங்களைத்" தவிர எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று ஸாரா ஏஎஸ்-விடம் தெரிவித்தது.
யுகே மாடல் ஹெல்த் இன்குவைரியால் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "Fashioning a Healthy Future" என்ற அறிக்கையின் பரிந்துரைகளைத் தாங்கள் பின்பற்றியதாகவும் ஸாரா கூறியது.
குறிப்பாக, மாடல்கள் "உணவுக் கோளாறுகளை அடையாளம் காணும் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களிடமிருந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும்" என்ற அந்த அறிக்கையின் மூன்றாவது பரிந்துரையை ஸாரா பின்பற்றுவதாகக் கூறியது.
முன்னதாக, இந்த ஆண்டு மாடல்கள் மிகவும் மெலிந்திருப்பதாகக் கருதப்பட்டு மற்ற சில்லறை விற்பனையாளர்களின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட நிலையில் இது நடந்துள்ளது.
ஜூலை மாதம், மாடல் "ஆரோக்கியமற்ற மெலிந்த" தோற்றத்தில் இருந்ததால், மார்க்ஸ் & ஸ்பென்சரின் ஒரு விளம்பரம் தடை செய்யப்பட்டது.
மாடலின் தோரணையும், "பெரிய கூர்மையான காலணிகள்" உட்பட ஆடைத் தேர்வும், அவரது கால்களின் "மெலிந்த தன்மையை" வலியுறுத்தியதால், அந்த விளம்பரம் "பொறுப்பற்றது" என்று ஏஎஸ்ஏ கூறியது.
இந்த ஆண்டு முற்பகுதியில், நெக்ஸ்ட் என்ற மற்றொரு சில்லறை விற்பனையாளரின் நீல ஸ்கின்னி ஜீன்ஸ் விளம்பரமும் தடை செய்யப்பட்டது.
கேமரா கோணங்கள் மூலம் மாடலின் கால்களின் மெலிந்த தன்மையை வெளிச்சமிட்டு காட்டியதால், அந்த விளம்பரம் "பொறுப்பற்றது" என்று ஏஎஸ்ஏ. தெரிவித்தது.
கண்காணிப்பு அமைப்பின் முடிவை ஏற்கவில்லை என்றும், மாடல் மெலிந்திருந்தாலும் "ஆரோக்கியமான மற்றும் உறுதியான உடலமைப்பு" கொண்டிருந்ததாகவும் நெக்ஸ்ட் கூறியது.
நெக்ஸ்ட் விளம்பரத்தின் மீதான தடை, ஆரோக்கியமற்ற உடல் பருமனுடன் இருக்கும் மாடல்களைக் கொண்ட விளம்பரங்கள் ஏன் தடை செய்யப்படவில்லையென்று பிபிசி வாசகர்களை கேள்வி எழுப்ப வைத்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு