You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தெய்வமாக பார்த்தார்கள், இப்போது தூக்கிப் போடுகிறார்கள்' - சென்னையில் போராடும் தூய்மை பணியாளர்கள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"கொரோனா தொற்று காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக வேலை பார்த்தோம். குடும்பத்தைக் கூட கவனிக்க முடியவில்லை. அப்போது எங்களைத் தெய்வமாக பார்த்தார்கள். இப்போது குப்பையைவிடக் கேவலமாக தூக்கிப் போடுவது நியாயமா?" எனக் கேள்வி எழுப்புகிறார், ரீட்டா.
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் இவர் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தூய்மைப் பணியை தனியார்வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்.
இவரைப் போல சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு நாட்களைக் கடந்து போராட்டம் நீடிப்பதால், நகரின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆனால், 'இவை விரைவில் சரிசெய்யப்படும்' என, மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதர நான்கு மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாதம் 22,950 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார், உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக தூய்மைப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
தனியார்வசம் தூய்மைப் பணிகளை ஒப்படைப்பதால், அங்கு 16,950 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட உள்ளதாகக் கூறுகிறார் கு.பாரதி.
தனியார்மய முடிவை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் நுழைவாயில் அருகில் கூடாரம் அமைத்து தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் அவர்களின் போராட்டம் ஆறு நாட்களைக் கடந்துவிட்டது.
'ஒரேநாளில் எல்லாம் மாறிவிட்டது'
"ஜூலை 31 ஆம் தேதி அன்று கையெழுத்து வாங்கிவிட்டு வேலை பார்க்க அனுமதித்தனர். மறுநாள் (ஆகஸ்ட் 1) கையெழுத்துப் போடுவதற்கு சென்றபோது, அனுமதி மறுக்கப்பட்டது. ஒரேநாளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது" எனக் கூறுகிறார், பெரம்பூரை சேர்ந்த ஜெனோவா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இனிவரும் நாட்களில் தனியாரிடம் சென்று வேலை பார்க்குமாறு அதிகாரிகள் கூறினர். மாநகராட்சியில் என்னுடைய 15 வருட உழைப்பு வீணாகிவிட்டது. இத்தனை ஆண்டுகாலம் வேலை செய்ததற்கு என்ன பலன்?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
"தனியாரிடம் வேலைக்குச் சென்றால், 'சாலையில் அடிபட்டால் கூட பணம் வரும்' என்கின்றனர். இதை இத்தனை ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் கூறவில்லை" என்கிறார், செங்குன்றம் பகுதியில் வசிக்கும் ஜரீனா சுல்தானா.
இவர் பெரம்பூரை உள்ளடக்கிய பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
"கஜா புயல், வர்தா புயல், கொரோனா தொற்று எனப் பேரிடர் காலங்களில் வேலை பார்த்தோம். குழந்தைகளைக் கூட கவனிக்கவில்லை. மக்களுக்காக உழைத்தோம். அப்போது எங்களை தெய்வமாக பார்த்தவர்கள், இப்போது குப்பையைவிடக் கேவலமாக தூக்கிப் போடுவது நியாயமா?" எனக் கேள்வி எழுப்புகிறார், தூய்மைப் பணியாளர் ரீட்டா.
'முதலமைச்சர் கைவிட்டுவிட்டார்'
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தது.
'இதனால் தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்' என, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். "தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தூய்மைப் பணியாளர்களுக்கு நல்ல காலம் ஏற்படும்" எனவும் அவர் பேசினார்.
இதை மேற்கோள் காட்டிப் பேசிய தூய்மைப் பணியாளர் ரீட்டா, "எங்களுக்காக ஸ்டாலின் குரல் கொடுத்தார். அவர் ஆட்சிக்கு வந்தால் எங்களைக் கைவிட மாட்டார் என நம்பி உழைத்தோம். ஆனால், கடந்த 31 ஆம் தேதியுடன் எங்களின் நம்பிக்கை வீண்போய்விட்டது" எனவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் அளித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் கூறுவது தொடர்பாக பதில் அளித்த மேயர் பிரியா ராஜன், "சிலர் தவறான கருத்துகளைப் பதிவிடுகின்றனர். அனைவரின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார்" என்றார்.
சம்பள சர்ச்சை
ஆனால், "மாநகராட்சியின் தனியார்மய முடிவால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்படும்" எனக் கூறுகிறார், தூய்மைப் பணியாளர் சுரேஷ்.
தனியார் நிறுவனங்கள், 16 ஆயிரம் ரூபாயை மட்டுமே சம்பளம் தருவதாகக் கூறிய அவர், " மாத வீட்டு வாடகையாக ஆறாயிரம் ரூபாய் கொடுத்து வருகிறேன். அதிகாரிகள் கூறுவதுபோல தனியாரிடம் வேலைக்குச் சென்றால் சுமார் ஐந்தாயிரம் ரூபாயை இழக்க நேரிடும்" என்கிறார்.
சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, அமைச்சர்கள் பங்கேற்கும் விழா என அனைத்து நிகழ்வுகளிலும் தங்களைப் பயன்படுத்திக் கொண்டாலும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சம்பளம் தொடர்பான சர்ச்சைக்குப் பதில் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய சுமார் 2 ஆயிரம் பேரை நிபந்தனையின்றி நாளொன்றுக்கு 750 ரூபாய் சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
"தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு" எனக் கூறியுள்ள குமரகுருபரன், "பி.எஃப், இ.எஸ்.ஐ, விபத்துக் காப்பீடு என பல சலுகைகள் உள்ளன. இதற்கான சம்பளம் பிடித்தம் காரணமாக குறைவான ஊதியமாக தெரிகிறது. எப்போது வந்தாலும் தனியார் நிறுவனத்தில் அவர்கள் சேர்ந்து கொள்ளலாம்" எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேங்கும் குப்பைகள்... கலங்கும் மக்கள்
தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகள் அதிகளவில் தேங்கத் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியில் தடைபட்டுவிட்டதால், சாலைகளின் ஓரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.
பிராட்வே, மண்ணடி, எழும்பூர், புதுப்பேட்டை உள்பட பல பகுதிகளில் மக்கள் சாலைகளைக் கடக்கவே தயக்கப்படும் அளவுக்கு துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
"வண்ணாரப்பேட்டை மிகவும் நெரிசலான பகுதி. குப்பைகளை எடுப்பதற்கு யாரும் வராததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்கள் கடந்துவிட்டால் பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் ஏற்படும்" என்கிறார், ஆர்.கே.நகர் பகுதியில் வசிக்கும் மா.கம்யூ கட்சியை சேர்ந்த லோகநாதன்.
"பேருந்துகள் செல்லும் சாலைகளைத் தவிர உள்புறச் சாலைகளில் அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க் கிழமையன்று (ஆகஸ்ட் 5) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வார்டுவாரியாக கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" எனக் கூறியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு அ.தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா,வெள்ளம், புயல் என இடர்களில் பணி செய்தவர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு