You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைட்டமின் 'டி' பெற சூரிய ஒளியில் எப்போது, எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்?
வைட்டமின் டி மனித உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. இது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, நோய் எதிர்ப்புச் சக்திக்கு ஆதாரமாக உள்ளது. இதுமட்டுமின்றி, மன அழுத்தத்தைக் குறைக்கவும், தசைநரம்பு மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வைட்டமின் D சூரிய ஒளி மூலம் உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் இருப்பது உடலுக்கு நல்லது? அதற்கான சரியான நேரம் என்ன?
ஆய்வில் வெளியான தகவல்
உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொதுச் சுகாதார இதழில், 'இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வைட்டமின் டி குறைபாட்டின் பரவல் மற்றும் காரணிகள்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியானது.
நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்கும் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் டெல்லி என்சிஆர் எனப்படும் தலைநகரப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ரத்தத்தில் 10 நானோ கிராமுக்கும் குறைவாக வைட்டமின் டி இருந்தால் அது தீவிர குறைபாடாகக் கருதப்படும். இந்த ஆய்வில் பங்கேற்ற நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 7.7 நானோகிராமாக உள்ளது.
கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 16.2 நானோ கிராமாக உள்ளது. ரத்தத்தில் 30 நானோ கிராமுக்கு மேல் வைட்டமின் டி இருப்பதுதான் போதுமான அளவாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?
தென்னிந்தியக் கர்ப்பிணிகள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சென்னையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 100 பெண்கள் பங்கேற்றனர். அதில், 62 % கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ்ஸில் வெளியான, 'Prevalence of vitamin D deficiency in urban south Indians with different grades of glucose tolerance' என்ற ஆய்வில் சென்னையை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
ஆய்வில் பங்கேற்ற 66% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. பங்கேற்பாளர்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை அல்லது Type 2 நீரிழிவு நோய் இருந்தாலும் சரி, வைட்டமின் டி குறைபாடு பரவலாக இருந்தது எனவும் ஆண்களை விடப் பெண்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது எனவும் கூறுகிறது இந்த ஆய்வு.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
"பரபரப்பான வாழ்க்கையால் இந்தியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வைட்டமின் டி குறைபாடு உடலின் அனைத்து பாகங்களையும் படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக வயதான காலத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது" என்கிறார் மருத்துவர் பீட்டர்.
வைட்டமின் டி குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக ஓர் அய்வு கூறுகிறது.
வைட்டமின் டி குறைபாட்டிற்கான காரணம் என்ன?
வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகப் பெறக்கூடியது.
இந்தியாவின் வட மாநிலங்களில் சில மாதங்களைத் தவிர பெரும்பாலான மாதங்களில் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும்.
அதே சமயம் தமிழகத்தில் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி கிடைக்கிறது. இருப்பினும் நகர்புற மக்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கான காரணம் என்ன?
இதற்கு பதிலளித்த சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் தட்சிணாமூர்த்தி, "உடலுக்குத் தேவையான பெரும்பாலான வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் வருகிறது. மனித தோலின் மேல் பகுதி இயற்கையாகவே 7-டிஹைட்ரோகொலஸ்ட்ரால் (7-dehydrocholesterol) என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். சூரிய ஒளியின் புறஊதா கதிர் தோலில் பட்டவுடன் அந்த மூலக்கூறு வைட்டமின் டி3 ஆக மாறும். பின்னர் கல்லீரலும், சிறுநீரகமும் அதை வைட்டமின் டி ஆக மாற்றி உடலுக்கு அனுப்பும்" என கூறினார்.
"நவீனமயமாக்கல் மற்றும் மாறிவரும் வேலை கலாசாரம் காரணமாக வீட்டிற்குள் செலவிடும் நேரமும், அலுவலகத்தில் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது. வெளியில் சென்றாலும் ஆடையால் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகமாக உள்ளதால், உடலில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது" என்கிறார் புதுவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பொது மருத்துவர் பீட்டர்.
எவ்வளவு நேர சூரிய ஒளி தேவை?
இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆண், போதிய அளவாக நிர்ணயிக்கப்பட்ட 30 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 2 மணி நேரத்துக்கு மேலாக முகம், கைகள், முன்கைகள் மீது சூரிய ஒளி படும் விதமாக நடக்க வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. குறைந்தபட்சம் 20 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 1 மணி நேரம் சூரிய ஒளியில் நடக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில் பெண்களின் நிலை குறித்துக் கணக்கிடப்படவில்லை.
வைட்டமின் டி குறைபாடு பெண்களில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், வீட்டு வேலை மற்றும் உட்புற நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடுவதால், பெண்கள் மீது சூரிய ஒளி படுவது குறைவாக இருக்கலாம். இதனால் வைட்டமின் டி குறைபாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது .
இருப்பினும், 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு, மாதவிடாய் நிறுத்தம் காரணமாக ஒரு சிக்கலான சூழ்நிலை உருவாகிறது. எனவே அவர்களுக்குத் தனிக் கவனம் தேவை.
"சூரிய ஒளியின் UVB கதிர்கள்தான் வைட்டமின் டி உருவாக உதவும். இந்த கதிர்கள் வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நன்றாக கிடைக்கும். அதிகாலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் UVA எனப்படும் புற ஊதா A கதிர்கள் இருக்கும். இது வைட்டமின் டி உருவாக உதவாது. அதிகாலையில் சூரியன் பளிச்சென்று தோன்றினாலும் அதில் நீங்கள் நின்றால் அதிக பலனில்லை" என்கிறார் மருத்துவர் தட்சணாமூர்த்தி.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சூரியன் 45 டிகிரிக்கு குறைவான கோணத்தில் இருப்பதால் UVB எனப்படும் புற ஊதா B கதிர்கள் பெரும்பாலும் பூமியை அடையவே முடியாமல் தடுக்கப்படுவதே இதற்கான அறிவியல் காரணமாக உள்ளது.
அதே சமயம் அமெரிக்க சுகாதாரத்துறையின் தேசிய சுகாதார நிறுவனம் தனது வழிகாட்டியில், வெயிலில் அதிகம் இருப்பதைத் தவிர்க்க 5 முதல் 30 நிமிடங்கள் வெயிலில் கை, கால், முகத்தை காண்பித்தால் போதும் எனப் பரிந்துரைக்கிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி இணையதளத்தில் வெளியான கட்டுரையில் அமெரிக்காவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உடலில் 10% பகுதியில் சூரிய ஒளி பட்டால் போதும் எனக் கூறுகிறது.
இந்த நேரம் நாட்டுக்கு நாடு சற்று மாறுபடும் நிலையில், பிரிட்டனில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் குறுகிய நேரம் வெயிலில் நிற்பதன் மூலம் வைட்டமின் டி -ஐ பெறலாம் என ஒரு வழிகாட்டி கூறுகிறது. கருமை நிற தோல் கொண்டவர்கள் அதிக நேரம் வெயிலில் நிற்கவேண்டியதிருக்கும் எனவும் இது கூறுகிறது.
"உணவு மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிப்பது சற்று கடினம். முட்டை, மீன், பால், வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவு போன்றவை உதவக்கூடும்" என்கிறார் மருத்துவர் பீட்டர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு