You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு காவல்துறை சந்தேக நபர்களை சுட்டுப்பிடிப்பது அதிகரித்துள்ளதா?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"சாதியை மையமாக வைத்துதான் என் தம்பியிடம் பிரச்னை செய்தனர். ஒரு சிறு வாக்குவாதம் கொலை செய்யும் அளவுக்குப் போகும் என நினைக்கவில்லை. முதலில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. போராட்டம் காரணமாகவே வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டன" எனக் கூறுகிறார், ராஜேஸ்வரி.
இவரது சகோதரரை கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திருச்சியில் உள்ள காவலர் குடியிருப்பில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது.
அவர்களில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் பிடித்துள்ளார். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை சந்தேக நபர்களை சுட்டுப்பிடிப்பது அதிகரித்துள்ளதா?
காவலர் குடியிருப்பில் கொலை
திருச்சி மாநகரில் வசித்து வந்த தாமரைச்செல்வம், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கும் சதீஷ்குமார் என்பவருக்கு முன்விரோதம் இருந்ததாக திருச்சி பாலக்கரை காவல்நிலையத்தில் தாமரைச் செல்வத்தின் தாயார் பார்வதி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 10-ஆம் தேதி காலை சுமார் 8.30 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் தாமரைச்செல்வம் சென்றுள்ளார். வீட்டில் இருந்து கிளம்பிய சற்று நேரத்தில் அவரது வாகனத்தை இடித்துக் கீழே தள்ளிவிட்டு சதீஷ்குமார் உள்பட நான்கு பேர் ஆயுதங்களுடன் விரட்டியதாக, பார்வதி அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய தாமரைச்செல்வம், மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஓடியுள்ளார். அங்கு சிறப்பு காவல் ஆய்வாளர் ஒருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் தாமரைச்செல்வத்தைக் கொலை செய்துள்ளனர்.
'சாதி மட்டுமே காரணம்'
"சாதியை வைத்து தான் என் தம்பியிடம் அவர்கள் பிரச்னை செய்தனர். தங்கள் சாதியில் யாரைக் கூப்பிட்டாலும் தனக்காக வருவார்கள் எனக் கூறி சதீஷ்குமார் மிரட்டியுள்ளார். என் அப்பாவும் இறந்துவிட்டார். தம்பியை நம்பித் தான் அம்மாவும் இரண்டு சகோதரிகளும் வாழ்ந்து வந்தோம்." எனக் கூறுகிறார், ராஜேஸ்வரி.
தாமரைச்செல்வம் கொலை தொடர்பாக பாலக்கரை காவல்நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில் லால்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் உள்பட நான்கு பேரை கைது செய்தனர்
'முதல் தகவல் அறிக்கையைத் திருத்தினர்'
இவர்கள் மீது கொலை வழக்கு உள்பட நான்கு பிரிவுகளில் பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், வழக்கின் பிரிவுகளை மாற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"கொலையின் பின்னணியில் சாதி பிரதான காரணமாக உள்ளது. ஆனால், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின்படி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. தொடர் போராட்டம் காரணமாக, முதல் தகவல் அறிக்கையைத் திருத்தினர்" எனக் கூறுகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின்.
இந்த வழக்கில் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களைப் பிடிப்பதற்கான பணியில் ஸ்ரீரங்கம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
'கொள்ளிடக்கரை, மேலூர் ரோடு அருகே கொலை வழக்கில் தேடப்படும் சதீஷ்குமார், கணேஷ், நந்தகுமார், பிரபாகரன் ஆகியோர் இருப்பதை அறிந்து காவலர்கள் சங்கர், ஜார்ஜ் வில்லியம், முதுநிலைக் காவலர் மாதவராஜன், சந்தோஷ் ஆகியோருடன் சென்றேன்' என, நவம்பர் 10 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் ஸ்ரீரங்கம் குற்றப் பிரிவு ஆய்வாளர் சிந்துநதியிடம் அளித்துள்ள புகார் மனுவில் காவல் ஆய்வாளர் திருவானந்தம் கூறியுள்ளார்.
'பயன்படுத்தாத எட்டு தோட்டாக்கள்'
அப்பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ்குமார் பெரிய வாள் ஒன்றை எடுத்து காவலர் ஜார்ஜ் வில்லியம்ஸை வெட்டியதாகவும் தடுக்க வந்த மாதவராஜை இடதுகையில் வெட்டியதாகவும் காவல் ஆய்வாளர் திருவானந்தம் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
'வாளை கீழே போடு' என எச்சரித்தும் போடாததால் 10 தோட்டாக்கள் நிரம்பிய பிஸ்டலை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதாகவும் அதனை பொருட்படுத்தாததால் தற்காத்துக் கொள்ளும் வகையில் சதீஷ்குமாரின் வலது முன்னங்காலில் சுட்டதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நான்கு பிரிவுகளில் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'சுட்டுப் பிடிப்பது' அதிகரிப்பது ஏன்?
அண்மைக்காலமாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினரால் சுட்டுப் பிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான பா.புகழேந்தி.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோவிலில் கடந்த நவம்பர் 10 அன்று இரவுநேர காவலர்களாக பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் பணிபுரிந்துள்ளனர்.
இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் உண்டியல் பணம், நகை ஆகியவற்றைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் காவலர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.
வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நாகராஜ் என்ற நபரை காவல்துறை காலில் சுட்டுப் பிடித்துள்ளது.
முன்னதாக, நவம்பர் 4 அன்று சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கல்குவாரி குட்டை ஒன்றில் இரண்டு மூதாட்டிகள் இறந்துகிடந்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அவர்களை அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்ற தொழிலாளி கொன்றுவிட்டதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரைக் கைது செய்ய முற்பட்டபோது கத்தியால் தாக்கியதால் அவரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் பிடித்துள்ளனர்.
இதே நவம்பர் 4 அன்று கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் கடந்த மார்ச் மாதம் குற்றப் பின்னணி உடைய அசோக் என்ற நபரைக் கைது செய்வதற்கு காவல்துறை முயன்றுள்ளது. ஆனால், அவர் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் இடதுகாலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
'சுடுவதன் மூலம் உடனடி தண்டனை'
"குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை உரிய காலத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டுவதில்லை. மாறாக, சுடுவதன் மூலம் உடனடி தண்டனை கொடுத்துவிடுகின்றனர்" என்கிறார் பா.புகழேந்தி.
"குற்றத்தில் ஈடுபடும் நபர்களை மிரட்டுவதற்காக இவ்வாறு சுட்டுப் பிடிக்கின்றனர். சிலரை இயல்பாக ரிமாண்ட் செய்கின்றனர். சிலர் தப்பிச் செல்லும்போது கை, கால்கள் உடைந்துவிட்டதாக கூறுகின்றனர். மாறாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தரும் வேலைகளில் தீவிரம் காட்டலாம்." என்கிறார்.
"ஆனால், குற்ற நிகழ்வு நடந்த இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் ஏன் வந்தது எனப் பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார், 'மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குற்றத்தில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகள் என்பது முற்றிலும் மாறிவிட்டன. தொழில்முறை குற்றத்தில் ஈடுபடும் நபர்களைப் பிடிப்பது என்பது காவல்துறைக்கு சவாலானதாக உள்ளது." என்கிறார்.
'நிரூபிக்க வேண்டியது கட்டாயம்'
தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சுட்டதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருப்பதாகவும் ஹென்றி திபேன் தெரிவித்தார்.
இதே கருத்தை முன்வைக்கும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "வழக்கின் தன்மையைப் பொறுத்து என்ன நோக்கத்துக்காக சுட்டுப் பிடிக்கின்றனர் என்பதைப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்." என்கிறார்.
குற்றம் செய்தவர்களைp பிடித்து தண்டனை பெற்றுத் தரும் வரையில் காவல்துறைக்கு ஏராளமான சவால்கள் உள்ளதாகக் கூறும் கருணாநிதி, "காவல்துறை, தடயவியல் துறை, நீதிமன்றம் என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றங்களை வெகுவாக குறைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு