IND vs ENG: கோலி வருகையால் ஸ்ரேயாஸ் நீக்கம்? - ஆடுகளம் யாருக்கு சாதகம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் இன்று பிற்பகல் தொடங்கும் 2வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி களமிறங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது, இந்த ஆட்டத்தில் வென்றால் ஒருநாள் தொடரை வெல்லும்.
ஒருநாள் தொடரை வெல்வது முக்கியமல்ல, இப்போதுள்ள நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு வீரர்களை எவ்வாறு தயாராக்குவது என்பதும், வாய்ப்புகளை வழங்கி பரிசோதிப்பதும்தான் முக்கியம் என இந்திய அணி கருதுகிறது.
அர்ஷ்தீப் சிங் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப்பின் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை, வருண் சக்ரவர்த்தியை ஒருநாள் போட்டிக்கு பந்துவீசிப் பார்க்கவில்லை, அப்படியிருக்கும்போது, புதிய வாய்ப்புகளை இந்திய அணி தேடுதல் அவசியமாகும்.
- இந்தியா VS இங்கிலாந்து: இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற மூவர் கூட்டணி
- கோலி, ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு - இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?
- அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம்
- ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?

காவுகொடுக்கப்படும் ஸ்ரேயாஸ்?
முழங்கால் காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்காமல் இருந்த விராட் கோலி, இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என துணைக் கேப்டன் சுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ப்ளேயிங் லெவனுக்குள் வந்தால், முதல் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவிய ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஜெய்ஸ்வால் அல்லது ரோஹித் சர்மா நீக்கப்படமாட்டார்கள். மாறாக ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தின் மீதுதான் கை வைக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏனென்றால் தொடக்க ஆட்டக்காரர்களில் இடது, வலது பேட்டர்கள் தேவை என்பதாலும், ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதாலும் அவருக்கான இடம் உறுதியாகும்.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஸர் படேல் கடந்த ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டனர். அக்ஸர் படேலுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் சிறப்பாக ஆடி அவரும் அரைசதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா என இரு பேட்டர்கள் இருப்பதால், பேட்டிங் வரிசை வலுவாகவே இருக்கிறது.
விராட் கோலி இன்னும் 94 ரன்கள் எடுத்தால், குறைந்த இன்னிங்ஸில் ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெயரெடுத்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார். ஆனால், கோலியின் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாகும்.

பட மூலாதாரம், Getty Images
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
பந்துவீச்சில் முகமது ஷமி முதல் ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். அடுத்த இரு போட்டிகளிலும் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அவரின் துல்லியத்தன்மை மேலும் கூராகும்.
ஹர்சித் ராணா அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட் வீழ்த்தினாலும், ரன்வழங்குவதை குறைக்கவில்லை.
ஆதலால், அடுத்த இரு போட்டிகளில் முகமது சிராஜ், அர்ஸ்தீப் சிங்கை களமிறக்கி பரிசோதிக்கலாம்.
நடுப்பகுதி ஓவர்களில் ஹர்திக் பாண்டியா துல்லியத்தன்மையோடும், லைன் அன்ட் லென்த்தில் அற்புதமாக முதல் போட்டியில் வீசினார். நடுப்பகுதி ஓவர்களில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு துருப்புச்சீட்டாக இருக்கும்.
சுழற்பந்துவீச்சில் அக்ஸர், ஜடேஜா பந்துவீச்சை ஆட இங்கிலாந்து பேட்டர்கள் முதல் ஆட்டத்தில் திணறினர்.
குல்தீப் யாதப் பந்துவீச்சைக் கூட எளிதாக ஆடிவிட்டனர். இன்னும் வருணுக்கு வாய்ப்பளித்து சோதிக்கவில்லை என்பதால் இந்த ஆட்டத்தில் வருணை அறிமுகம் செய்யலாம். சுழற்பந்துவீச்சு எனும் ஆயுதம் வருண் வருகையால் மேலும் வலுவடையும்.
இந்திய அணியைப் பொருத்தவரை கோலி, ரோஹித் ஃபார்ம் மட்டுமே கவலைக்குரிய அம்சமாகும். இருவரும் அடுத்துவரும் போட்டிகளில் தங்களின் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றவகையில் நடுவரிசை பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் முழுவலிமையுடன் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அதிரடித் தொடக்கம்
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை கடந்த ஆட்டத்தில் பில் சால்ட், டக்கெட் அதிரடியான தொடக்கத்தை, அச்சமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் சால்ட் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ஹேரி ப்ரூக் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கேப்டன் பட்லர், பெத்தெல் ஆட்டம் கடந்த போட்டியில் உயிர்கொடுக்கும் பகுதியாக இருந்தது. இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருந்தால் மோசமான ஸ்கோரை எடுத்திருப்பார்கள்.
லிவிங்ஸ்டன், கார்ஸ் இயல்பான ஆட்டத்தை ஆடினால் நிச்சமயாக பெரிய ஸ்கோருக்குச் செல்லும். இந்த ஆட்டத்தில் மெஹ்மூதுக்குப் பதிலாக, மார்க் உட்டுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இங்கிலாந்து அணியும் பலவழிகளில் பரிசோதித்து சிறந்த ப்ளேயிங் லெவனை தேர்வு செய்ய நினைக்கிறது. ஆனால், அந்த அணியின் பரிசோதனை முயற்சி தொடர்ந்துவருகிறது.

பட மூலாதாரம், Getty Images
கட்டாக் ஆடுகளம் எப்படி?
கட்டாக் பாரபட்டி மைதானம் பேட்டர்களுக்க சொர்க்கபுரி. இங்கு சுழற்பந்துவீச்சைவிட வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்த மைதானத்தில்தான் 2017ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 381 ரன்கள் குவித்தது. பதிலுக்கு இங்கிலாந்து 366 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
இந்த மைதானத்தில் 19 ஒருநாள் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 3 தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்த அணியினர் 7 ஆட்டங்களில் வென்றநிலையில், சேஸிங் செய்யும் அணி 12 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஈரப்பதம் ஆட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருக்கும். மாலை நேர கடற்கரை காற்றும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
உத்தேச அணி
இந்திய அணி(உத்தேசம்) ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மான் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா அல்லது, அர்ஷ்தீப், முகமது ஷமி
இங்கிலாந்து (உத்தேசம்)
ஜாஸ் பட்லர்(கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேக்கப் பெத்தெல், பிரைடன் கார்ஸ், ஜோப்ர ஆர்ச்சர், அதில் ரஷீத், சகிப் மெஹ்மூத் அல்லது மார்க்உட்
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












