You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்களை நான் காப்பாற்றினேன், ஆனால் நிர்வாகம் என் வீட்டை இடித்துவிட்டது"
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தர்காசியில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பங்கேற்ற ’ரேட் மைனர்’ எலி வளை சுரங்க தொழிலாளர் வகீல் ஹசனின் வீட்டை டெல்லி மேம்பாட்டு ஆணைய அமைப்பு (DDA) புல்டோசர் மூலம் இடித்திருக்கிறது.
டெல்லியின் கஜூரிகாஸ் பகுதியில் அவரது வீடு உள்ளது. அந்த வீட்டை இந்த வீடு கட்டப்பட்டிருந்த நிலம், அரசுக்கு சொந்தமான நிலம் என்று டிடிஏ கூறுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு முன் தனக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என்று வகீல் ஹசன் கூறுகிறார்.
பிபிசியின் செய்தியாளர் ஆசிப் அலியிடம் பேசிய வகீல் ஹசன், “டிடிஏ அதிகாரிகளும் போலீசாரும் புதன்கிழமை திடீரென புல்டோசருடன் வந்து என் வீட்டை இடிக்கத் தொடங்கினார்கள். உங்களிடம் நோட்டீஸ் இருக்கிறதா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எந்த நோட்டீஸையும் காட்டவில்லை,” என்று தெரிவித்தார்.
அரசு வேலைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம்சாட்டி, தன்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மணிக்கணக்கில் உட்கார வைத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"நடைபாதையில் அமர்ந்து இரவைக் கழித்தோம்"
தன் குடும்பத்தினர் அனைவரும் நடைபாதையில் அமர்ந்து இரவைக் கழித்ததாகவும், அக்கம் பக்கத்தினர் தங்களுக்கு உணவு அளித்ததாகவும் வகீல் ஹசன் கூறினார்.
“வீடு இடிக்கப்படும்போது என் மனைவி வீட்டில் இல்லை. என் பிள்ளைகள் மட்டும் அங்கு இருந்தனர். உத்தர்காசியில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை காப்பாற்றியவர் எங்கள் தந்தை. எங்கள் வீட்டை இடிக்காதீர்கள் என்று என் குழந்தைகள் அதிகாரிகளிடம் சொன்னார்கள்,” என்று வகீல் ஹசன் கூறினார்.
”சில மாதங்களுக்கு முன்பு சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை நாங்கள் மீட்டபோது ஒட்டுமொத்த நாடும் எங்களை ஹீரோக்களாக ஆக்கியது. ஆனால் இன்று, எனக்கு இந்த அநியாயம் நடந்துள்ளது,” என்றார் அவர்.
தனக்கு நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பகுதியில் இன்னும் பல வீடுகள் உள்ளன. ஆனால் டிடிஏ அதிகாரிகள் தன்னை மட்டுமே குறிவைத்து மீண்டும் மீண்டும் பணம் கேட்டதாகவும் அவர் கூறினார்.
“சில நாட்களுக்கு முன்பு எம்பி மனோஜ் திவாரியும், பாஜக மாநிலத் தலைவரும் இங்கு வந்திருந்தபோது இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி அவர்களிடம் கேட்டேன். உங்கள் வீட்டிற்கு எதுவும் ஆகாது என்று என்னிடம் அவர்கள் உறுதியளித்தனர். நான் இங்கு 14 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்,” என்று வகீல் ஹசன் குறிப்பிட்டார்.
அதிகாரிகளின் பதில்
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாஜக எம்பி மனோஜ் திவாரி, வகீல் ஹசனின் அறிக்கைக்கு பதிலளித்தார்.
"ஆமாம். நான் அவரை சந்தித்தேன். உங்கள் வீட்டிற்கு எதுவும் ஆகாது என்று அவரிடம் சொன்னேன். ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது உண்மையிலேயே நிலம் தொடர்பாக சில சிக்கல்கள் இருப்பதை பார்த்தோம். ஆனால் சட்டபூர்வ வழிமுறையில் பிரதமந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு வழங்குவோம். இதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
இந்த வீட்டை பகவதி என்ற பெண்ணிடமிருந்து 38 லட்சம் ரூபாய்க்கு தான் வாங்கியதாக வகீல் ஹசன் கூறினார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட டிடிஏ நிர்வாகம், "கஜூரி காஸ் பகுதியில் உள்ள டிடிஏ நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பை பிப்ரவரி 28 ஆம் தேதி அகற்றினோம். இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது,” என்று கூறியது.
இந்த நடவடிக்கையின் போது அந்தப்பகுதியில் பல சட்டவிரோதமான வீடுகள் இடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் வகீல் ஹசனின் வீட்டைத் தவிர அப்பகுதியில் வேறு எங்கும் புல்டோசர் நடவடிக்கை காணப்படவில்லை என்று அங்கு சென்று பார்த்த பிபிசி செய்தியாளர் சிராஜ் அலி தெரிவிக்கிறார்.
சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கை
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் போது, உத்தர்காசியின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கியபோது, ஆகர் இயந்திரங்களை பயன்படுத்தி தொழிலாளர்களை வெளியே கொண்டு வர முடியவில்லை. வகீல் ஹசன் போன்ற எலி வளை சுரங்க தொழிலாளர்கள் நம்பிக்கையின் கதிர்களை உருவாக்கினர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் மிகவும் கடினமான பகுதி கடைசி 10 முதல் 12 மீட்டர் வரை தோண்டுவது. 'எலி வளை சுரங்க தொழிலாளர்கள்’ இதில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த முழு நடவடிக்கையில் 10க்கும் மேற்பட்ட ரேட் மைனர்ஸ் ஈடுபட்டனர். வகீல் ஹசன் மற்றும் அவரது இதர கூட்டாளிகள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனர்.
இந்த எலி வளை சுரங்க தொழிலாளர்கள் கற்கள் நிறைந்த இடிபாடுகளை கைகளால் அகற்றினர். வகீல் ஹசன் உட்பட குழுவின் உறுப்பினர்கள் சுரங்கத்திற்குள் நுழையும் முயற்சியை மேற்கொண்டனர்.
அவர்கள் உளி மற்றும் சுத்தியலைப் பயன்படுத்தி கற்களை வெட்டி அந்த இடிபாடுகளை இரும்பு தட்டுகளில் நிரப்பி கயிறு மூலம் மேலே அனுப்பினார்கள்.
இந்த முறை மூலம் அந்த இடம் மிகவும் மெதுவாக தோண்டப்பட்டு பாதை உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)