'கஸ்டடி' விமர்சனம்: வெங்கட்பிரபு மேஜிக் எடுபட்டதா?

- எழுதியவர், பொன்மனச்செல்வன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவின் நேரடி தெலுகு திரைப்படம் ‘கஸ்டடி’. தெலுகு மட்டுமின்றி தமிழில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் இந்தப் படத்தில், நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், ப்ரியாமணி, பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
’மாநாடு’ எனும் மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு, தெலுகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நாக சைதன்யா நடிக்கும் படம் என்பதால், ஒருவித எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடத்தில் ஏற்பட்டு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று முன்னணி ஊடகங்கள் அனைத்தும் விமர்சித்துள்ளன.
அந்தவகையில், இது வெங்கட்பிரபு படம் தானா? எனும் கேள்வியுடன் கடுமையாக விமர்சித்து இருக்கிறது இந்து தமிழ் திசை.
"வெங்கட் பிரபு எப்போதும் ஒரே ஜானரில் படமெடுக்க விரும்பாதவர். அவரால் அஜித்தை வைத்து மாஸ் + கிளாஸான மங்காத்தாவையும் கொடுக்க முடியும், வைபவ், பிரேம்ஜி, ஜெய் ஆகியோரை வைத்து கலகலப்பான ‘கோவா’வையும் தர முடியும். முற்றிலும் தன் பாணியிலிருந்து விலகி டைம் லூப் கான்செப்ட்டில் ‘மாநாடு’ என்ற படத்தையும் எடுக்க முடியும். அப்படிப்பட்ட வெங்கட் பிரபு இயக்கிய படமா இது என்ற சந்தேகம் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே பார்ப்பவர்களுக்கு வந்துவிடுவதாக குறிப்பிட்டுள்ளது" இந்து தமிழ் திசை.
"படம் தொடங்கி அரை மணி நேரம் வரை கதைக்குள் நுழையாமல் இலக்கின்றி அலைகிறது. வில்லன் அரவிந்த் சாமியின் என்ட்ரிக்குப் பிறகு நிமிர்ந்து உட்கார வைக்கும் திரைக்கதை, யூகிக்க வைக்கும் அரதப் பழைய காட்சிகளால் சலிப்பை ஏற்படுத்துகின்றன. வில்லனை அழைத்துக் கொண்டு ஒரு பாதாள சுரங்கத்தில் ஓடும் நாயகனை, போலீஸ் உயரதிகாரியான சரத்குமார் சுற்றி வளைத்து விடுகிறார். அவர் கையில் துப்பாக்கி. தப்பிக்க வழியே இல்லை.
இந்த இடத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திலும் வைக்காத ஒரு காட்சியை இயக்குநர் வைக்கிறார். சரத்குமார் சுடுவதற்காக துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தும்போது துப்பாக்கியில் தோட்டா இல்லை. வந்திருப்பது வெங்கட் பிரபு படம் தானா என்று மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது" என எதிர்மறையான விமர்சனத்தை இந்து தமிழ் திசை பதிவு செய்திருக்கிறது.
"இதுவரை வந்த வெங்கட் பிரபு படங்களில் சூர்யாவை வைத்து அவர் எடுத்த ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ படம் தான் சுமாரான படம் என்று சொல்வார்கள். இப்போது அதனை பின்னுக்குத் தள்ளி அந்த பெருமையை ‘கஸ்டடி’ தட்டிச் செல்கிறது. படத்தில் பல ஆச்சரியங்கள் இருப்பதாக பல பேட்டிகளில் வெங்கட் பிரபு கூறியிருந்தார். படம் முழுக்க இருந்த ஒரே ஆச்சரியம் இது வெங்கட் பிரபு படம் தானா என்பதுதான்" என்கிறது அந்த விமர்சனம்.

சிறந்த முன்னுரையைக் கொண்டிருந்தாலும், பலவீனமான திரைக்கதையால் ‘கஸ்டடி’ திரைப்படம் கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இந்தியா டுடே படத்தை விமர்சித்து இருக்கிறது.
"படத்தின் முதல் பாதி நாயகன், அவரது குடும்பம், நாயகி ஆகியவற்றை நிலைநிறுத்த அதிக நேரம் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அது பார்வையாளர்களுக்கு படம் மீதான சலிப்பை ஏற்படுத்துகிறது. காதல் காட்சிகள், கதைக்கு சிறிதளவு பலம் சேர்க்கும் நேரத்தில், ஒரு இடைச்செருகலாக வரும் பாடல்கள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது. இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜவும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், பின்னணி இசையோ, பாடல்களோ எந்தவகையிலும் ரசிக்கும் வகையில் இல்லை" எனவும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படத்தில் இடம்பெற்று இருக்கும் ஆக்சன் காட்சிகள் மட்டுமே ஒரே ஆறுதல் எனத் தெரிவித்து இருக்கும் இந்தியா டுடே, படத்தின் வேகத்தால் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, வெங்கட் பிரபுவின் படங்களில் இடம்பெறும் திருப்பங்கள் எப்போதும் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும். அந்தவகையில், கஸ்டடி திரைப்படத்தில் வசீகரிக்கும் வகையிலான பல்வேறு தருணங்கள் இருந்தாலும், பலவீனமான எழுத்தும், திரைக்கதையும் ஆர்வத்தை குறைத்து விடுவதாக விமர்சித்துள்ளது.
கதாபாத்திரங்களையும், மையக் கதையையும் நிறுவ இயக்குநர் எடுத்துக் கொள்ளும் நேரம், படத்திற்கு எதிரியாக மாறுகிறது. இதனால், எப்போது படம் தொடங்கும் எனும் சலிப்பு ஆரம்பத்திலேயே வந்துவிடுகிறது. ஒருவழியாக அது தொடங்கும்போது இடம்பெறும் சண்டைக் காட்சிகளும், நீருக்கடியிலான காட்சிகளும் படத்திற்கு வேகத்தை கொடுத்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் மீண்டும் படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகின்றன என குறிப்பிட்டுள்ளது.
ரசிகர்களை காலி செய்திருக்கும் ‘கஸ்டடி’ என காட்டமான விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது தினமணி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுகு ரசிகர்களை பிரதானமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படம் தமிழிலும் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமா சந்தித்த அதே பழைய கதை. திரைப்படத்தின் தொடக்கத்தில் தெலுகு நடிகர்கள் பேசும் காட்சிகள், ‘டப்’ செய்யப்பட்டு இருப்பதால் உதட்டசைவுகள் பொருந்தவில்லை. ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு நேரடி தமிழ் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த உள்ளே, வெளியே விளையாட்டை இயக்குநர் தவிர்த்திருக்கலாம் எனவும் தினமணி விமர்சனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்களின் கதாபாத்திரங்களோ, திரைக்கதையோ எந்தவிதமான ஈர்ப்பையும் அளிக்கைவில்லை எனக் குறிப்பிட்டு விமர்சனத்தை பதிவு செய்திருக்கும் தினமணி, வழக்கமான கதையை ஏதேதோ செய்து பார்வையாளர்களை கஸ்டடியில் வைத்து, காலி செய்திருக்கிறது இந்த ‘கஸ்டடி’ எனவும் விமர்சனத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












