14 நாட்கள், 3500 கி.மீ. கடல் பயணம் - இரானில் இருந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள்
"இரானை சேர்ந்த படகுடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த நபர்கள் கேரள கடற்கரை எல்லையையொட்டி சுற்றி வளைக்கப்பட்டனர்" என்று கடந்த மே 6ஆம் தேதி இந்திய கடலோர காவல் படை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தது.
விசாரணையின்போது, ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்த நித்திய தயாளன், அருண் தயாளன், கலைதாஸ், வாலாந்தரவையை சேர்ந்த ராஜேந்திரன், பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த மரிய டெனில் ஆகிய 6 பேர் தான் இரானில் இருந்து தப்பி வந்தவர்கள் எனத் தெரிந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரான் நாட்டைச் சேர்ந்த செய்யது சவூத் ஜாஃப்ரி என்பவரால் மீன்பிடி வேலைக்காக தாங்கள் பணி அமர்த்தப்பட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.
இரானில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, ஒப்புக்கொண்ட மீன்பிடி பங்கு தொகையைக் கொடுக்கவில்லை என்பதால் 6 பேரும் இரான் நாட்டில் இருந்து தப்பி கடந்த ஏப்ரல் 22ஆம் ஜாஃப்ரியின் விசைப்படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்கு பயணத்தைத் தொடங்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 5ஆம் தேதி மீனவர்கள் இரான் நாட்டுப் படகுடன் டீசல் இல்லாமல் நடுக்கடலில் தத்தளித்து நின்று கொண்டிருப்பதைக் கண்ட இந்திய கடலோர காவல்படை மீனவர்களைப் படகுடன் மீட்டு கொச்சிக்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும் பாதுகாப்பாகத் தங்களைச் சொந்த ஊர் அனுப்பி வைக்க அரசு அதிகாரிகள் வழியாக உதவி கோருமாறு மீனவர்களின் உறவினர்கள் கூறியதையடுத்து குமரியில் உள்ள தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சிலிடம் தகவல் கொடுத்தனர்.
அருட்பணியாளர் சர்ச்சில் கொச்சின் கடலோர காவல் படை அலுவலகம் சென்று மீனவர்களை அங்கிருந்து மீட்டு மீனவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 7ஆம் தேதி மாலை சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.
செய்தியாளர்: பிரபு, பிபிசி தமிழுக்காக
படத்தொகுப்பு: நிஷாந்த்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



