You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காணாமல் போகும்' சீனாவின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் – ஷி ஜின்பிங்கின் பலவீனத்தை காட்டுகிறதா?
- எழுதியவர், டெஸ்ஸா வாங்
- பதவி, பிபிசி ஆசிய செய்தியாளர்
கடந்த சில மாதங்களாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் நம்பப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் காணாமல் போயிருக்கின்றனர். இது, ஜின்பிங் 'அரசியல் தூய்மைப்படுத்தலில்' ஈடுபடுகிறாரா, குறிப்பாக ராணுவத்துடன் தொடர்புடையவர்களைக் குறிவைக்கிறாரா என்ற தீவிர ஊகங்களைத் தூண்டியுள்ளது.
சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பு மந்திரி லி ஷாங்ஃபு என்று தெரிகிறது. இவர் கடந்த சில வாரங்களாக பொது வெளியில் காணப்படவில்லை.
முதலில் அவர் வெளியே காணப்படாதது சந்தேகத்தைக் கிளப்பவில்லை என்றாலும், உயர்மட்ட அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் அதைச் சுட்டிக்காட்டியபோது அது தீவிரமாகப் பேசப்பட்டது.
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கு (People's Liberation Army - PLA) ஆயுதக் கொள்வனவுகளை மேற்பார்வையிட்ட ஜெனரல் லி, ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பின்னர் தெரிவித்தது.
ராணுவ ஊழல் குறித்த ஆய்வுகள்
அணு ஆயுத ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தும் ராணுவப் பிரிவான ராக்கெட் படையில் இருந்த இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் ஒரு ராணுவ நீதிமன்ற நீதிபதி நீக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ஜெனரல் லி ‘காணாமல் போயிருக்கிறார்’.
ஆயுதப் படைகளைக் கட்டுப்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவக் குழுவில் உள்ள சிலரும் விசாரிக்கப்படுவதாக இப்போது புதிய வதந்திகள் பரவி வருகின்றன.
‘உடல்நலக் காரணங்கள்’ என்பதைத் தவிர, இந்த நீக்குதல்களுக்கு அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே இந்த வெற்றிடத்தில், ஊகங்கள் பரவி வருகின்றன.
இது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் உள்ள ஊழலை ஒழிக்கும் அதிகாரப்பூர்வமான முயற்சி என்பது முக்கிய ஊகமாக உள்ளது.
சீன ராணுவம் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது. ஜூலையில் அது வழக்கத்திற்கு மாறான ஓர் அழைப்பை விடுத்தது.
அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டது.
பிபிசி மானிட்டரிங் நடத்திய சோதனைகளின்படி, ஜின்பிங், ஏப்ரல் முதல் ஐந்து முறை நாடு முழுவதும் சுற்றி, ராணுவத் தளங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊழலைத் தடுப்பதில் உள்ள சிக்கல்கள்
கடந்த 1970களில் சீனா அதன் பொருளாதாரத்தை தாராளமயமாக்கத் தொடங்கியதில் இருந்து ராணுவத்தில் ஊழல் நீண்ட காலமாக ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது, என சீன கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of China - CCP) மற்றும் ராணுவத்திற்கு இடையிலான உறவை ஆய்வு செய்யும் சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிஞர் ஜேம்ஸ் சார் (James Char) குறிப்பிட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் சீனா ஒரு டிரில்லியன் யுவானை ராணுவத்திற்காகச் செலவிடுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாத இந்த நிலையை, சீனாவின் ஒற்றைக் கட்சி மையப்படுத்தப்பட்ட அமைப்பு மேலும் சிக்கலாக்குகிறது.
மற்ற நாடுகளின் ராணுவங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது போலல்லாமல், சீனாவின் ஆயுதப்படைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் பிரத்தியேகமாக மேற்பார்வை செய்யப்படுகின்றன, என முனைவர் சார் சுட்டிக்காட்டினார்.
ஆயுதப் படைகளுக்குள் ஊழலைத் தணிப்பதிலும், அதன் நற்பெயரை ஓரளவிற்கு மீட்டெடுப்பதிலும் ஜின்பிங் சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ‘ஊழலை வேரறுப்பது கடினமானது, ஆனால் சாத்தியமானது’, ஏனெனில் அதற்கு ‘முறையான மறுவடிவமைப்புகள் தேவைப்படும்’ என்கிறார் முனைவர் சார்.
"தனது அதிகாரத்திற்குக் கீழில்லாத ஒரு முறையான சட்ட அமைப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கும் வரை, இத்தகைய சம்பவங்கள் நிகழும்," என்கிறார் அவர்.
அமெரிக்க பெண்ணுடன் குழந்தை பெற்றுக்கொண்ட சீன அமைச்சர்
அதிகாரிகள் காணாமல் போவது, ஏற்கெனவே அமெரிக்காவுடன் சிக்கலான உறவைக் கொண்டிருக்கும் சீன அரசாங்கத்தில் மேலும் ஒரு ஆழமான சிக்கலை உருவாக்கலாம்.
ஜூலை மாதம், உளவு பார்ப்பதறகு எதிரான சட்டம் சீனாவில் நடைமுறைக்கு வந்தது. இது அதிகாரிகளுக்கு விசாரணைகளை நடத்துவதில் அதிகப்படியான அதிகாரத்தைக் கொடுத்தது. மேலும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் உளவு நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட உதவுமாறு குடிமக்களை பகிரங்கமாக ஊக்குவித்தது.
ஜெனரல் லி காணாமல் போனது வெளியுறவு அமைச்சர் கின் கேங் காணாமல் போனதை ஒத்திருக்கிறது. ஜூலையில் அவர் நீக்கப்பட்டதும் ஊகங்கள் அதிவேகமாகப் பரவின. இந்த வாரம், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், திரு கின், திருமணத்தை மீறிய உறவு சம்பந்தமாக விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்தது. இந்த உறவின் மூலம் அமெரிக்காவில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது.
சீன விவகாரங்கள் வல்லுநரான பில் பிஷப் கூற்றின்படி, திருமணத்தை மீறிய உறவு என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்டங்களில் குற்றமாகக் கருதப்படாது என்கிறார்.
“ஆனால் வெளிநாட்டு உளவுத்துறை உறவுகளை வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படக்கூடிய ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதும், சீனாவின் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளரின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஒரு குழந்தையை உருவாக்குவதும், தீவிரமாக விசாரிக்கப்படும்," என்கிறார் அவர்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்துடன் சீனா போராடி வருவதால், ஊழலை ஒழிக்கும் அழுத்தத்தின் கீழ் ஜின்பிங் செயல்படுகிறார் என்ற ஊகமும் உள்ளது.
சீனாவின் அரசியல் அமைப்பின் கீழ், ஜின்பிங் சீனாவின் அதிபர் மட்டுமல்ல, ராணுவத்தின் உயர்மட்டத் தலைவராகவும் உள்ளார்.
ஜின்பிங்கின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்
ஒரு வகையில், காணாமல் போனவர்கள், ஜின்பிங் தலைமையின் உறுதியற்ற தன்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்கள்.
அமைச்சர்கள் மட்டுமல்ல, மாநில கவுன்சிலர்களாகவும் உயர்ந்த பதவிகளை வகித்த ஜெனரல் லீ மற்றும் திரு கின் ஆகியோர் ஜின்பிங்குக்கு விருப்பமானவர்கள். எனவே அவர்களின் திடீர் வீழ்ச்சி, சீன அதிபர் அதிகாரிகளை சரியாகப் புரிந்து வைத்திருக்கவில்லை என்றும் பார்க்கப்படலாம்.
ஆனால் இது ஜின்பிங்கின் வலிமையாகவும் பார்க்கப்படலாம்.
காணாமல் போன சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரியின் மகனான ஜின்பிங், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். இது அவரது எதிரிகளை வேரறுக்கும் நோக்கில் அரசியல் சுத்திகரிப்புகளாகவும் செயல்படுகிறது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மாவோ சேதுங்கிற்கு பிறகு, ஜின்பிங் தான் இந்த ஒடுக்குமுறைகளை அதிகளவில் செயல்படுத்தியிருக்கிறார். 2013இல் அவர் பதவியேற்றதில் இருந்து கீழ்மட்ட மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைக் குறிவைத்து எடுக்கபட்ட நடவடிக்கைகளில், பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஜின்பிங் ஆயுதப்படைகளையும் குறிவைத்து 2017இல் 100க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளை நீக்கினார். அந்த நேரத்தில் மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவா ஒரு கட்டுரையில், இப்படியாக நீக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, “புதிய சீனாவை உருவாக்குவதற்காக போர்களில் கொல்லப்பட்ட தளபதிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது,” என்று கூறியது.
அரசியல் ஸ்திரத்தன்மையை பற்றிய கேள்விகள்
ஆனால் இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், சமீபத்தில் நடவடிக்கைகள் என்ன சமிக்ஞை அனுப்புகின்றன, மற்றும் அவற்றின் இறுதி தாக்கம் என்ன என்பது.
இது ராணுவத்திலும் அரசாங்கத்திலும் அச்சமான சூழலை உருவாக்கும் என அரசியல் கூர்நோக்கர்கள் கூறுகின்றனர். இது மனச்சோர்வையும் ஏற்படுத்தும்.
பல ஆண்டுகளாக, தனக்கு வேண்டாமல் போனவர்களை வேரறுத்து, தனக்கு நெருக்கமானவர்களுக்கு உயர் பதவிகளைக் கொடுத்ததால், ஜின்பிங்கை சூழ்ந்திருப்பவர்கள் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கின்றனர்.
குழு மனப்பான்மையே ஜின்பிங் தலைமையின் ‘உண்மையான ஸ்திரமற்றத் தன்மை’. ஏனெனில் இது சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்று முனைவர் சார் குறிப்பிடுகிறார்.
தைவான் ஜலசந்தியில் பதட்டமான சூழ்நிலை நிலவும் இந்தக் காலகட்டத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சமீப வாரங்களில் சீனா அதிக போர்க்கப்பல்களையும் ராணுவ ஜெட் விமானங்களையும் அங்கு அனுப்பியுள்ளது.
மற்றொரு சாரார், சீனாவின் ராணுவத் தலைமை, சில உயர்மட்ட அதிகாரிகளின் மாற்றங்களைத் தாங்கும் அளவுக்கு வலிமையானது என்று வாதிடுகின்றனர்.
மேலும் சிலர், சமீபத்திய சம்பவங்கள், ஜின்பிங் தலைமையின் ஸ்திரத்தன்மையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று நம்புகின்றனர். இதுவரை குறிவைக்கப்பட்ட அதிகாரிகள் எவரும் அவரது உள்வட்டத்தினர் இல்லை என்று ஆசிய சொசைட்டி பாலிசி இன்ஸ்டிட்யூட்டின் சீன நிபுணரான நீல் தாமஸ் கூறுகிறார்.
ஆனால் பெரும்பாலான உலக அரசியல் பார்வையாளர்கள் இந்தச் சம்பவங்கள் சீன அமைப்பின் மறைவான தன்மையை எடுத்துக்காட்டுகின்றன என்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்