COP28 கரிம உமிழ்வு இலக்கு: உலக நாடுகளை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்க முடியுமா?

பட மூலாதாரம், European Space Agency
- எழுதியவர், நவீன் சிங் கட்கா
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை
துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்கள் புதைபடிம எரிபொருள் தொழில்நுட்பங்களை படிப்படியாக வெளியேற்றுவது பற்றி வாதிடுவதால், வாக்குறுதிகளுக்கும் உண்மைக்கும் இடையே எப்போதும் இடைவெளி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறு, நாடுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? மேலும் உண்மையான நிலைமையை அளவிடுவதற்கு செயற்கைக்கோள்கள் நமக்கு உதவக்கூடுமா?
ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் (UNEP) 2016ஆம் கரிம உமிழ்வு அறிக்கை வெளியீட்டின்போது, செய்திகளில் வோக்ஸ்வேகன் உமிழ்வு ஊழல் இருந்தது.
அதன் பல வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை உணர்ந்து, சிறந்த மாசு அளவீடுகளுக்கு அவற்றின் நடத்தையை மாற்றக்கூடிய தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருப்பதால், ஜெர்மன் வாகன உற்பத்தியாளரான இந்த நிறுவனம் அமெரிக்காவில் உமிழ்வு சோதனையைக் கையாளுகிறது.
"ஒரு கார் உற்பத்தியாளர் உலகை ஏமாற்றினால், நாடுகளும் நிறுவனங்களும் தங்கள் உமிழ்வுகளை நேர்மையாகப் புகாரளிக்கின்றன என்பதை நாம் எப்படி உறுதிப்படுத்துவது?"
"நாங்கள் அதை வானத்திலிருந்து உறுதி செய்வோம்" என்று ஒரு ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார். "யார் என்ன செய்கிறார்கள் மற்றும் அவர்களின் கரிம உமிழ்வுகளின் நிலை பற்றி அவர்கள் சொல்வது சரிதானா என்பதை செயற்கைக்கோள்கள் நமக்குக் காண்பிக்கும்," என்று அவர் கூறினார்.
ஆனால், அது உண்மையில் சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
தற்போது, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுமார் 20 செயற்கைக்கோள்கள் உள்ளன. அவை பசுமைக்குடில் வாயுக்களை கண்காணிக்கப் பயன்படுகின்றன. ஆனால், முக்கிய விண்வெளி ஆய்வு நிலையங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தொழில்நுட்பங்கள் இன்னும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஒரு கண்டம் போன்ற பரந்த பரப்பளவில் கரிம வாயுவின் செறிவுகளை செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறிய முடியும். இருப்பினும், கரிம வாயுவின் உற்பத்தி எங்கு நிகழ்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய அவற்றால் முடியாது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சொந்தமான சென்டினெல்-5 ப்ரீகர்சர் என்ற செயற்கைக்கோள் தற்போது முற்றிலும் பசுமைக்குடில் வாயுக்களை கண்காணித்து வருகிறது. அந்த செயற்கைக்கோளை வைத்து, மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்ற பசுமைக்குடில் வாயுக்களின் உற்பத்தி இடங்களை அடையாளம் காணும் முயற்சியை மேற்கொண்டதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் யஸ்கா மெய்ஹெர் விளக்கினார்.
இருப்பினும், அந்த வாயுக்களின் உற்பத்தி இடங்களைத் துல்லியமாக அடையாளம் காணும் நிலையை "நாம் இன்னும் அடையவில்லை" என்றும் யஸ்கா மெய்ஹெர் தெரிவித்தார்.
ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் (JAXA) இதே நிலைதான். அவர்களுடைய நிபுணர்களில் ஒருவரான ஒசாமு ஒகியாய் என்னிடம் பேசியபோது, "நாம் ஒரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம். செயற்கைக்கோள்களில் ஒரே சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஆகவே, கரிம வாயுவின் மூலாதாரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கரிம வாயுவின் மூல ஆதாரத்தை கண்டறிவது ஏன் கடினம்?
கரிம வாயு ஏற்கெனவே மிகுதியாக இருப்பதுதான் முதன்மைப் பிரச்னை. வளிமண்டலத்தில் கரிம வாயு 1,000 ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்திருக்கக் கூடும். இந்நிலையில் இயற்கையாக ஏற்கெனவே வளிமண்டலத்தில் இருக்கும் கரிம வாயு, புதிதாகச் சேரும் கரிம வாயுவை தனித்து அடையாளப்படுத்துவதைக் கடினமாக்குகிறது.
புதைபடிம எரிபொருட்களை எரிப்பது, காடுகளை அழிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால்தான் 75% பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. ஆனால், "புதைபடிம எரிபொருளை எரித்து தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் அத்தகைய கரிம வாயு, ஏற்கெனவே வளிமண்டலத்தில் இருக்கும் பெரியளவிலான கரிம வாயுவுக்குள் புதைந்துவிடுகிறது," என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காபர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை மையத்தின் துணை-இயக்குநர் ரிச்சர்ட் எங்கெலென் கூறுகிறார்.
"நாங்கள் தொழிற்சாலைகள் வெளியிடும் கரிம வாயு சிறு சிறு அளவில் கசிவதைக் கண்டறிய முனைகிறோம். ஆனால், செயற்கைக்கோள்கள் சுற்றும் பகுதியில் கரிம வாயு முற்றிலுமாக இல்லாமல் இருந்தால் மட்டுமே அவற்றைக் கண்டறிய முடியும். இத்தகைய நிலை அரிதாகவே நிகழ்கிறது," என்று அவர் குறிப்பிடுகிறார்.
கரிம வாயுவைவிட மீத்தேன் போன அதிக சக்தி வாய்ந்த வாயுவை அடையாளம் காண்பது செயற்கைக்கோள்களுக்கு எளிது. ஏனெனில், அவை கரிம வாயுவைப் போல் பரவலாகப் பரவியிருக்கவில்லை.
உதாரணமாக, எண்ணெய்க் குழாய்களில் இருந்து கசியும் மீத்தேன் வாயுவை, அரசின் விண்வெளி ஆய்வு மையங்களும் செயற்கைக்கோள்களை இயக்கும் தனியார் நிறுவனங்களும் கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கின்றன.
நைட்ரஜன் வாயுவை தேடி கரிம வாயுவை கண்டுபிடிக்கும் முயற்சி

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய ஒன்றியம் 2026இல் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அவை இந்தச் சிக்கல்களைக் களையும் என்றும் நம்பப்படுகிறது.
"கரிம வாயுவின் கசிவுகளைக் காண, கார்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றின் உயர் வெப்பநிலை எரிப்பு செயல்முறையின்போது கரிம வாயுவுடன் உமிழப்படும் நைட்ரஜன் ஆக்சைட் வாயுவை அளவிடக்கூடிய ஒரு கருவியை நாங்கள் இப்போது செயல்படுத்தியுள்ளோம்," என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மெய்ஹெர் கூறுகிறார்.
"நைட்ரஜன் ஆக்சைட் வாயுவை பார்த்தால், அதற்கும் மேலே கரிம வாயு இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். எனவே அது கரிம வாயுக் கசிவுகளைக் கண்டறிய உதவுகிறது."

பட மூலாதாரம், European Space Agency
இதுமட்டுமின்றி, செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை அலசும் கணினி மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் கரிம வாயுவை அடையாளம் காணும் முயற்சியையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
"OCO2, OCO3 (நாசா செயற்கைக்கோள்கள்) போன்ற சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் கரிம ஆய்வகங்கள் கரிம வாயுவின் மூலாதாரங்களை நேரடியாக அளவிடுவதில்லை. ஆனால், செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தும் அதிநவீன கணினி அடிப்படையிலான தரவு உருவகப்படுத்துதல் மாதிரிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்," என்று 28வது காலநிலை உச்சிமாநாட்டின்போது தொடங்கப்பட்ட நாசாவின் பசுமைக்குடில் வாயு ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆர்கிரோ கவ்வாடா விளக்குகிறார்.
இருப்பினும், முடிவுகள் நம்பகமானதாக நிரூபிக்கப்படவில்லை. ஆகவே, கரிம உமிழ்வைக் கணக்கிடுவதற்கு, அரசுகள் கள அடிப்படையிலான ஆய்வகங்கள், தொழிற்சாலைகளின் அறிக்கைகள் ஆகியவற்றையே சார்ந்துள்ளன. இதில் சில சூழல்களில், இந்தத் தரவுகள் பழையனவாகவோ முழுமையடையாத ஒன்றாகவோ இருந்துவிடுகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டின் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில், உலக நாடுகள் பூமியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரியில் தக்க வைக்கும் முயற்சியில் கரிம வெளியீட்டைக் குறைக்க உறுதிபூண்டன. பூமி ஏற்கெனவே 1.1 டிகிரி வெப்பமாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கரிம உமிழ்வு இதே நிலையில் தொடர்ந்தால், 2040ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி வெப்பநிலையை அடைந்துவிடக்கூடும் என்று காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச இடை அரசுக் குழு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், உலக நாடுகள் ஐ.நா.வில் ஒப்புக்கொண்ட தங்கள் காலநிலை செயல்திட்டத்தின்படி செயல்படுகின்றனவா என்பதைக் கடுமையாகக் கண்காணிக்க எந்தவொரு செயல்முறைம் நம்மிடம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
விண்வெளியில் இருந்து பூமியை அவதானிப்பதை ஒருங்கிணைக்கும் சர்வதேச கூட்டமைப்பைச் சேர்ந்த பூமியை அவதானிக்கும் செயற்கைக்கோள்கள் குறித்த கமிட்டி, செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பத்தில் ஏற்படவுள்ள முன்னேற்றங்கள் இதற்கு உதவக்கூடும் என்று நம்புகிறது.
இந்த கமிட்டி, கள அடிப்படையிலான அறிக்கைகள் மற்றும் செயற்கைக்கோள் ஆய்வுகள் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து வெளிப்படையான கண்காணிப்பு மற்றும் உறுதிப்படுத்தல் செயல்முறை உருவாகும் என்றும் அது அரசுகள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் என்றும் நம்புகின்றது.
ஆனாலும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த யஸ்கா மெய்ஹெர் என்னிடம் கூறியது போல்: "நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












