தேர்தல் பத்திரம்: பட்டியலை வெளியிட தயாராகிறதா காங்கிரஸ்? பிபிசிக்கு ப.சிதம்பரம் பேட்டி

ப.சிதம்பரம்

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
    • எழுதியவர், ஜுகல் புரோஹித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமையன்று மாலை தனது இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டது.

இந்தத் தரவுகள் மார்ச் 12 அன்று பாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட எண்கள் குறித்த தகவலை வங்கி இன்னும் வழங்கவில்லை.

இந்தத் தகவலைத் தெரிவிக்க எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் மார்ச் 17 வரை அவகாசம் அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியானதையடுத்து, அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம், தேர்தல் பத்திரங்கள் பாஜகவுக்கு நியாயமற்ற பலன்களை அளித்துள்ளதாக நம்புகிறார். மறுபுறம், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியலில் இருந்து கறுப்புப் பணத்தின் பங்கை அகற்றுவதற்காக தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்தப் பத்திரத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிப்பதற்குப் பதிலாக உச்சநீதிமன்றம் அதைச் சீர்திருத்த முயல வேண்டும் எனவும் கூறினார்.

தேர்தல் பத்திரங்கள், இப்போது ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில், பாஜகவின் தேர்தல் பிரசாரத்திற்கு அவை சிறப்பாக நிதியளிக்க முடியும் என்பதால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சாதகமான சூழலை அது அளித்துள்ளது என்கிறார் முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம்.

ப.சிதம்பரம்

பட மூலாதாரம், SHAHNAWAZ AHMAD/BBC

படக்குறிப்பு, "பங்களிப்புகளை அநாமதேயமாக வைத்துக்கொள்ளும் இந்த வஞ்சகமான திட்டத்தை அரசாங்கம் ஏன் வகுத்தது என்ற கேள்வி எழுகிறது"

அரசுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள்

புதுடெல்லியில் பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித்திடம் பிரத்யேகமாகப் பேசிய அவர் தேர்தல் பத்திரங்கள் குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தினார்.

“தேர்தல் பத்திர விவரங்கள் வெளிப்படுத்திய தகவல்களால் நான் ஆச்சரியப்படவில்லை. தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கிய நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. சுரங்க நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், நீர்மின் கட்டுமான நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசுடனும் சில நேரங்களில் மாநில அரசுகளுடனும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன,” என்று கூறினார் ப. சிதம்பரம்.

பங்களிப்புகளை அநாமதேயமாக வைத்துக்கொள்ளும் இந்த வஞ்சகமான திட்டத்தை அரசாங்கம் ஏன் வகுத்தது என்ற கேள்வி எழுவதாகக் கூறும் அவர், “பங்களிப்புகள் காசோலை அல்லது வரைவோலை அல்லது ஒரு நிறுவனத்திடம் இருந்து அரசுக்கு ஊதிய உத்தரவின் மூலம் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் இருப்புநிலைக் குறிப்பில் அரசியல் கட்சி, பங்களிப்பாளர் என இருவராலும் வெளிப்படுத்தப்பட வேண்டும்,” என்றார்.

ப.சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "யார் வேண்டுமானாலும் வெளிப்படையாக நன்கொடை வழங்கலாம் என்ற நிலை நிலவ வேண்டும்”

'பாஜகவுக்கு பலனளித்துள்ள பத்திரங்கள்'

தேர்தல் பத்திரங்களுக்கு முன் நடைமுறையில் இருந்த கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், “முன்னதாக கார்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையாக நன்கொடை அளித்தன. ஆனால், அவற்றின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டுமே நன்கொடையாக அளிக்க முடியும். நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தால் அரசியல் நன்கொடை அளிக்க முடியாது.

தற்போது நாம் மீண்டும் அதே செயல்முறைக்குத் திரும்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் வெளிப்படையாக நன்கொடை வழங்கலாம் என்ற நிலை நிலவ வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்தப் பத்திரங்கள் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவுக்கு நியாயமற்ற பலனை அளித்துள்ளதா என்று கேட்டபோது, “பத்திரங்களின் மொத்த தொகையில் 57 சதவீதத்தை ஏன் பாஜக பெற்றது? மற்ற அனைத்து தரப்பினரும் ஏன் மிகக் குறைவாகப் பெற்றுள்ளனர் என்ற கேள்விகள் எழுப்பப்படும்,” என்று கூறினார்.

மேலும், “அதற்கு மாற்றாக ஏதாவது செய்து கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அரசால் எடுக்கப்பட்ட சில முடிவுகளுடன் நிதி பங்களிப்புத் தேதிகளை தொடர்புபடுத்தினால் இது புரியும். அதன்மூலம் அப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ஒருவர் ஊகிக்கலாம்.

கடந்த 5-6 ஆண்டுகளில் பாஜக ஒரு பெரிய போர் கேடயத்தை உருவாக்கியுள்ளது. இது அவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெரும் பலனை அடைந்துள்ளனர். இது நியாயமற்ற தன்மை,” என்று கூறினார்.

அதோடு தேர்தல்களுக்கு நிதியளிப்பதில் சமநிலை இல்லை எனக் கூறிய ப. சிதம்பரம், தேர்தலில் வேட்பாளர்களுக்கு நிதியளிப்பதில் மற்றவர்களைவிட பாஜக பலமாக உள்ளது என்றார்.

ப.சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "தேர்தல் ஆணையம் விரும்பினால் நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை காங்கிரஸ் வெளியிடும்"

தேர்தல் பத்திரம் - பட்டியலை வெளியிட தயாராகிறதா காங்கிரஸ்?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை காங்கிரஸ் தானாக முன்வந்து பகிரங்கப்படுத்துமா என்று பிபிசி கேட்டது.

அதற்கு பதிலளித்த சிதம்பரம், “உச்சநீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையம் விரும்பினால், நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டும்” என்றார்.

இந்த விஷயத்தில் என்ன செய்யலாம் எனக் கேட்டதற்கு அவர் அதிகம் பேசவில்லை. “அதை நீங்கள் கைப்பற்ற முடியாது. அதுவொன்றும் கருப்புப் பணம் இல்லை,” என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)