சிவாஜி தந்திரமாக அஃப்சல் கானை வரவழைத்து புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

1659-ம் ஆண்டு சிவாஜி பயன்படுத்திய சிறிய ஆயுதம், லண்டனில் இருந்து இந்தியாவுக்கு நவம்பர் மாதம் கொண்டுவரப்படும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இரும்பினால் செய்யப்பட்ட வாக்-நாக், புலியின் கூர்மையான நகங்கள் கொண்ட பாதத்தின் வடிவம் கொண்டது. பீஜப்பூர் சுல்தானின் ராணுவ ஜெனரல் அஃப்சல் கானைக் கொல்ல சிவாஜி இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.

இந்த ஆயுதம் தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டபிறகு இது ​​மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

இந்த ஆயுதம் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி ஜேம்ஸ் கிராண்ட் டஃப் என்பவருக்கு சொந்தமானது என்றும், இது மராட்டிய பேஷ்வாவின் பிரதமரால் அவருக்கு பரிசளிக்கப்பட்டது என்றும் விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

அஃப்சல் கானின் உண்மையான பெயர் அப்துல்லா படாரி. அவர் நல்ல உயரமானவர் மற்றும் பல பெரிய போர்களை நடத்திய அனுபவம் பெற்றவர்.

1656 ஆம் ஆண்டிற்குப் பிறகு பீஜப்பூர் மீது ஒளரங்கசீப்பின் படைகள் நடத்திய தாக்குதல்களை முறியடிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது, அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

பீஜப்பூரின் புதிய நவாப், அலி ஆதில் ஷாவும், தலைமை ராணி பேகம் படி சாஹிபாவும் எல்லா முக்கிய வேலைகளின் பொறுப்பையும் அஃப்சல் கானிடமே ஒப்படைத்தனர்.

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகக் கூறி அஃப்சல்கான், சிராவின் மன்னர் கஸ்தூரி ரங்காவை தனது முகாமுக்கு அழைத்து வந்து கொலை செய்ததைப் பற்றி, முகமது ஆதில்ஷாவின் ஆட்சியைப் பற்றி எழுதப்பட்ட 'முகமது நாமா' என்ற புத்தகத்தில், குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜதுநாத் சர்கார் தனது 'சிவாஜி அண்ட் ஹிஸ் டைம்ஸ்' என்ற புத்தகத்தில், "முகமது ஆதில் ஷாவின் மரணத்திற்குப் பிறகு பீஜப்பூர் சாம்ராஜ்ஜியத்தில் அதிகாரப் போட்டி நிலவியபோது, படி பேகம் சாஹிபாவின் கட்டளைப்படி மூன்று மூத்த தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர்," என்று எழுதியுள்ளார். அவர்களில் ஒருவரான ஷக்ஸ் கான் முகமதின் கொலையில் உறுதியாக அஃப்சல் கானின் பங்கு இருந்தது.

சிவாஜியை பிடிக்கும் பொறுப்பை அஃப்சல் கான் ஏற்றுக்கொண்டார்

அஃப்சல் கானுக்கு ஏற்கனவே சிவாஜியின் குடும்பத்தின் மீது பகை இருந்தது.

ஆரம்பத்தில் சிவாஜியின் தந்தை ஷாஹாஜி ராஜே போஸ்லேயும், அஃப்சல் கானும் பீஜாப்பூர் சுல்தானகத்தில் பணிபுரிந்தனர்.

பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1648 இல் அஃப்சல் கான், சிவாஜியின் தந்தை ஷாஹாஜி மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி அவரை சங்கிலியால் கட்டி பீஜப்பூருக்கு கொண்டுவந்தார்.

1654 இல் சிவாஜியின் மூத்த சகோதரர் சாம்பாஜி கொல்லப்பட்ட சமபவத்திலும் அஃப்சல் கானின் பங்கு இருந்ததாக சிவாஜியும் அவரது தாயார் ஜீஜிபாயும் நம்பினர்.

தனது தந்தையை மோசமாக நடத்திய மற்றும் சகோதரரின் கொலையிலும் பங்கு இருக்கும் ஒருவராக அஃப்சல் கானின் உருவம் சிவாஜியின் மனதில் பதிந்துபோனது.

நட்பு நாடகம்

பீஜப்பூரில் சிவாஜியின் செயல்பாடுகள் அதிகரித்தபோது, ​​படி பேகம் சாஹிபா தனது அரசவையில் ’சிவாஜியை நசுக்கும் திறன் உள்ளவர் யாராவது இருக்கிறார்களா’ என்று கேட்டார். இந்த செயலை செய்துமுடிப்பதாக ஒப்புக்கொண்டார் அஃப்சல் கான்.

டென்னிஸ் கின்கெய்ட் தனது 'சிவாஜி தி கிராண்ட் ரெபெல்' புத்தகத்தில்,"தனது குதிரையில் இருந்து இறங்காமலேயே சிவாஜியை பிடித்து கைதியாகக் கொண்டு வருவதாகவும், இங்குள்ள மக்கள் அவரை ஏளனம் செய்யும் வகையில் எலியைப் போல அவரை கூண்டில் அடைத்து வைக்கப் போவதாகவும் அஃப்சல்கான் அரசவையில் அறிவித்தார்,” என்று எழுதியுள்ளார்.

"தனிப்பட்ட முறையில் சிவாஜியை பிடிக்க முடியும் என்று அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இருக்கவில்லை. படி பேகம் சாஹிபாவிடம் அவர் கலந்தாலோசித்த போது, ​​சிவாஜியுடன் நட்பு நாடகம் போட்டு அவரைப் பிடிக்க முயற்சிக்குமாறு அவர் ஆலோசனை கூறினார்."

அஃப்சல் கானின் அடக்குமுறை

1659 ஆம் ஆண்டு சிவாஜியை சிறைபிடிக்கும் முயற்சியை அஃப்rல் கான் தொடங்கினார்.

அவர் தன்னுடன் பத்தாயிரம் வீரர்களை அழைத்துச் சென்றார். முதலில் தான் சில காலம் ஆட்சி செய்த ’வாயி’ என்ற பகுதியை நோக்கி அவர் சென்றார்.

வழியில் பண்டர்பூரில் பல கோவில்களை அவர் சேதப்படுத்தினார். பிரதி மாதம் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் படைச்செலவை ஏற்கும்படி அங்குள்ள வணிகர்கள், புரோகிதர்கள் மற்றும் விவசாயிகளிடம் சொல்லப்பட்டது.

"சிவாஜியின் உறவினரான தேஷ்முக் பஜாஜி நாயக் நிம்பல்கர் இரண்டு லட்சம் ரூபாய் கப்பம் கட்டாவிட்டால் அவர் யானையைக் கொண்டு நசுக்கப்படுவார் என்று அஃப்சல் கான் மிரட்டினார்," என்று ஜதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.

"இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து நிம்பல்கர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். அஃப்ஸல்கானின் இந்த ஆத்திரமூட்டும் செயல்களின் நோக்கம், தன்னை வெளியில் கொண்டு வருவதுதான் என்பதை சிவாஜி அறிந்திருந்தார். ஆனால் அவர் அஃப்சல்கானின் வலையில் சிக்கவில்லை."

அஃப்ஸல் கான் உருவாக்கிய இரும்புக் கூண்டு

ஆரம்பத்தில் அஃப்சல்கான் வடக்கே பூனாவுக்குச் சென்று சிவாஜியின் வலுக்கோட்டையைத் தாக்க விரும்பினார். ஆனால் அந்த இடம் போருக்கு ஏற்றதல்ல என்பதால் இந்தச் செய்தி கிடைத்தவுடனேயே சிவாஜி பூனாவிலிருந்து வெளியேறினார். ஜாவ்லி பிராந்தியத்தை தனது தளமாக்கினார்.

இதற்கிடையில் அஃப்சல் கான் ஒரு இரும்புக் கூண்டை உருவாக்கத் தொடங்கினார். அதில் சிவாஜியை அடைத்து பீஜப்பூருக்கு கொண்டுசெல்ல அவர் திட்டமிட்டார்.

இங்கிருந்து இரண்டு போட்டியாளர்களிடையே புத்திசாலித்தனமான ராஜ தந்திரத்தின் விளையாட்டு தொடங்கியது.

"ஆரம்பத்தில் சிவாஜியை உருட்டி மிரட்டிய அஃப்சல் கான் திடீரென்று அவர் மீது கருணை காட்டத் தொடங்கினார். தன்னை காட்டிலும் சக்திவாய்ந்த அஃப்சல் கானை எதிர்கொள்ள பயப்படுவதைப் போன்ற தோற்றத்தை சிவாஜியும் கொடுத்தார்," என்று சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றான 'சிவாஜி இண்டியாஸ் கிரேட் வாரியர் கிங்' என்ற புத்தகத்தில் வைபவ் புரந்தரே எழுதியுள்ளார்.

அஃப்சல் கானுக்கும் சிவாஜிக்கும் இடையே கடிதப் பரிமாற்றம்

சில நாட்களுக்குப் பிறகு அஃப்சல் கான் தனது தூதர்களில் ஒருவரான கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி மூலம் சிவாஜிக்கு ஒரு செய்தியை அனுப்பினார்.

"உன் தந்தை என்னுடைய மிகவும் நல்ல நண்பர். எனவே நீ எனக்கு அந்நியன் அல்ல. தெற்கு கொங்கனில் உன்னிடம் இருக்கும் நிலம் மற்றும் சொத்தை உனக்கே அளிக்குமாறு மன்னர் ஆதில் ஷாவிடம் சொல்வேன். நீ பிடித்த கோட்டைகளையும் உன்னிடமே ஒப்படைப்பேன். நீ மன்னரை சந்திக்க விரும்பினால் அதற்கும் ஏற்பாடு செய்கிறேன். நீ அங்கு செல்ல விரும்பவில்லை என்றால் அங்கே உன் இருப்பைப் பதிவு செய்வதிலிருந்து விலக்கும் பெறலாம்." என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

சிவாஜி அஃப்சலின் தூதருக்கு உரிய மரியாதை அளித்தார். இரவில் அவரது முகாமுக்குச் சென்று அவரை ரகசியமாகச் சந்தித்து அஃப்சல் கானின் உண்மையான நோக்கம் என்ன என்று கேட்டார்.

அஃப்சல் தனக்கு எதிராக ஒரு ஆழமான சதித்திட்டத்தை தீட்டுகிறார் என்பதை குல்கர்னியிடமிருந்து தெரிந்துகொள்வதில் அவர் வெற்றி பெற்றார்.

சிவாஜி இந்தக் கடிதத்திற்கு அஃப்சல்கானின் தூதுவர் மூலமாக அல்லாமல் தனது தூதுவர் பாந்தாஜி கோபிநாத் மூலம் பதில் அனுப்பினார்.

"நீங்கள் தென்பகுதி (Carnatic region) அரசர்களையெல்லாம் வென்றுவிட்டீர்கள். என் மீது நீங்கள் காட்டிய கருணை பெரிய விஷயம். நீங்கள் இந்த உலகத்தின் விலை மதிப்பற்ற ரத்தினம். இதில் ஒரு துளி கூட மோசடி இல்லை" என்று சிவாஜி எழுதினார்.

"இந்த வனத்தின் சிறப்பை நீங்கள் காண விரும்பினால் ஜாவ்லிக்கு வந்து உங்கள் கண்ணால் பாருங்கள். உங்கள் மீது என் மனதில் உள்ள எல்லா சந்தேகங்களும் நீங்கிவிடும். என் மதிப்பும் அதிகரிக்கும். நீங்கள் இங்கு வந்தால் நானே என் வாளை உங்களிடம் ஒப்படைப்பேன்,” என்றும் அதில் சிவாஜி குறிப்பிட்டிருந்தார்.

சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையிலான சந்திப்பு நிச்சயிக்கப்பட்டது.

அஃப்சல் கான் ஜாவ்லிக்கு செல்ல ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், பிரதாப்கர் கோட்டைக்கு கீழே உள்ள மலையில் சிவாஜியை சந்திக்க ஒப்புக்கொள்ளும் அளவிற்கு சிவாஜியின் ராஜ தந்திரம் நிறைந்த இந்தக் கடிதம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

'இந்த அழைப்பு உங்களுக்கானது மட்டுமல்ல, உங்கள் முழு படைக்கும் இந்த அழைப்பை விடுக்கிறேன்' என்பதுதான் சிவாஜி அஃப்சல்கானுக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வாக்கியம். இந்த வாக்கியம் அஃப்சல்கானுக்கு நம்பிக்கை தந்தது.

"அஃப்சல் கானின் வீரர்களை தனது பகுதிக்குள் தடையின்றி நுழைய அனுமதிக்குமாறு சிவாஜி தனது மக்களுக்கு அறிவுறுத்தினார். 1659 நவம்பர் 10 ஆம் தேதி மதியம் அஃப்சல் கான் சிவாஜியை சந்திப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. அவர் ஒரு பல்லக்கில் ஆயுதங்களுடன் பிரதாப்கர் கோட்டைக்கு கீழே போடப்பட்ட கூடாரத்தில் இறங்குவார். இரண்டு அல்லது மூன்று வீரர்களை அவர் தன்னுடன் அழைத்து வரலாம். சிவாஜியும் தனது ஆயுதங்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான வீரர்களை அழைத்துவர அனுமதிக்கப்பட்டார். அஃப்சல்கான் அங்கு வந்தவுடன் சிவாஜி கோட்டையிலிருந்து இறங்கி வந்து அன்பளிப்புகளுடன் அவரை வரவேற்பார் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது,” என்று ஜதுநாத் சர்க்கார் எழுதியுள்ளார்.

காட்டில் வீரர்களை மறைத்துவைத்த சிவாஜி

சந்திப்பிற்கு ஒரு நாள் முன்பு சிவாஜி தனது படை ஜெனரல்களை அழைத்து, வீரர்களை காட்டில் நிலைநிறுத்தி அவர்களை உஷார் நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அஃப்சல்கானின் குழுவில் ஏராளமான பொற்கொல்லர்கள் இருந்ததையும், வழியில் வியாபாரம் செய்வதற்காக தங்களுடைய பொருட்களை அவர்கள் உடன் கொண்டு வந்திருப்பதையும் சிவாஜி தனது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டார்.

அவர்களிடமிருந்து நகைகளை வாங்கி பீஜப்பூர் அரசுக்கு பரிசாக கொடுக்க ஏதுவாக அந்த பொற்கொல்லர்களை பிரதாப்கருக்கு அனுப்புமாறு அஃப்சல் கானிடம் சிவாஜி வேண்டுகோள் விடுத்தார்.

அஃப்சல் உடனடியாக அந்த பொற்கொல்லர்களை சிவாஜியிடம் அனுப்பினார். தனது எண்ணம் தூய்மையானது என்று காட்டுவதற்காக சிவாஜி அவர்களிடமிருந்து நிறைய நகைகளை வாங்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களை தனது கோட்டையில் விருந்தினர்களாக தங்கவைத்து உபசரித்தார். அஃப்சல்கானுடனான சந்திப்புக்கு முன்பாக சிவாஜி தனது மூத்த அதிகாரிகளின் கூட்டத்தை அழைத்தார்.

"அந்த சந்திப்பிலிருந்து தான் உயிருடன் திரும்பவில்லை என்றால் எவ்வாறு நாட்டை நிர்வாகம் செய்யவேண்டும் என்பதை அவர்களிடம் எடுத்துரைத்தார். அஃப்சல் கான் தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்கினால் பீரங்கியால் சுட உத்தரவு அளிப்பேன் என்றும் இந்த ஒலியைக் கேட்டவுடனேயே நமது வீரர்கள் அஃப்சல்கானின் வீரர்களைத் தாக்குவார்கள் என்றும் சிவாஜி கூறினார்,” என்று ஜதுநாத் சர்க்கார் எழுதுகிறார்,

659 நவம்பர் 10 ஆம் தேதி காலை பிரதாப்கர் கோட்டையின் முற்றத்தில் ஒரு கூடாரம் போடப்பட்டது.

அதன் மேற்கூரை நன்றாக அலங்கரிக்கப்பட்டு, விலையுயர்ந்த தரை விரிப்புகள் தரையில் விரிக்கப்பட்டன.

சிவாஜி - அஃப்சல் சந்திப்புக்கு ஆயத்தம்

"சிவாஜி சூரியக் கடவுளை வணங்கி, பவானி தேவியை வணங்கி, இந்தச் சந்திப்பிற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். காலை உணவுக்குப் பிறகு, அவர் ஒரு வெள்ளை ஆடை அணிந்தார். அதனுள் அவர் இரும்புக் கவசத்தை அணிந்துகொண்டார். தன் தலையைப் பாதுகாக்க இரும்புத் தொப்பிக்கு மேலே எம்பிராய்டரி செய்யப்பட்ட தலைப்பாகை அணிந்தார். உடையின் வலது கையின் உள்பக்கத்தில் குறுவாளை வைத்துக்கொண்டார். எதிரில் இருப்பவரின் கண்களில் படாதவிதமாக தனது இடது கையில் புலியின் கூர் நகங்கள் கொண்ட பாதம் போன்ற இரும்பு புலி-நகத்தை வைத்திருந்தார்,” என்று வைபவ் புரந்தரே எழுதுகிறார்.

" இரண்டு நம்பகமான கூட்டாளிகளான ஜீவா மஹாலா மற்றும் சாம்பாஜி காவ்ஜி ஆகியோர் அவருடன் இருந்தனர். ஜீவா வாள் வீச்சில் நிபுணத்துவம் பெற்றவர். இருவரிடமும் ’பட்டா’ (வளையாத வாள்) மற்றும் ஃபிரங் (வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாள் மற்றும் கேடயம்) இருந்தது."

"அஃப்சல் சிவாஜியை சந்திக்கச் சென்றபோது அவருடன் சுமார் ஆயிரம் வீரர்கள் இருந்தனர். சிவாஜியின் தூதர் பந்தாஜி கோபிநாத் அஃப்சல்கானிடம் சென்று இவ்வளவு வீரர்களை அழைத்துச் செல்வது முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளை மீறுவதாகும் என்று கூறினார்," என்று மராத்தியில் எழுதப்பட்ட சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றான 'சபாசத் பக்கர்' இல் சிவாஜியின் அரசவைத் தலைவர் கிருஷ்ணாஜி ஆனந்த் சபாசத் எழுதியுள்ளார்.

"இவ்வளவு வீரர்களைப் பார்த்தால் சிவாஜி கோட்டைக்கு திரும்பிச் சென்றுவிடக் கூடும். இந்த சந்திப்பு நடக்காமல் போகலாம் என்று அவர் சொன்னார். இதைக் கேட்ட அஃப்சல் தனது வீரர்களைத் தடுத்து நிறுத்தினார். அவர் 10 நம்பகமான வீரர்களை மட்டுமே தன்னுடன் அழைத்துச் சென்றார். சந்திப்பு இடத்திற்கு சிறிது தூரம் தள்ளி அவர்களை நிறுத்தினார். கூட்டாளிகள் மூவரை மட்டுமே தன்னுடன் அழைத்துச்சென்றார்."

சிவாஜியின் கழுத்தை அஃப்சல்கான் சுற்றிவளைத்தார்

அஃப்சல்கான் கூடாரத்தை அடைந்த செய்தி சிவாஜிக்கு எட்டியதும், சிவாஜி கோட்டையிலிருந்து இறங்கத் தொடங்கினார்.

சிவாஜி கூடாரத்திற்குள் நுழைந்தபோது, ​​அங்கு கட்டப்பட்டிருந்த மேடையில் அஃப்சல்கான் நின்று கொண்டிருந்தார்.

"சிவாஜியைப் பார்த்தவுடனே அஃப்சல்கான், ஒரு சாதாரண ஜமீன்தாரின் மகன் இளவரசர்களைப் போல தனது கூடாரத்தை எப்படி அலங்கரிக்கலாம் என்று கத்த ஆரம்பித்தார். இந்த மெத்தைகளும் தரைவிரிப்புகளும் தனது சொந்த வசதிக்காக அங்கு போடப்படவில்லை, மாறாக, அவை பீஜப்பூர் அரசுப் பிரதிநிதியை வரவேற்க விரிக்கப்பட்டுள்ளன என்றும் அவை பீஜப்பூருக்கு அனுப்பப்படும் என்றும் சிவாஜி கூறினார். இந்த வார்த்தைகள் அஃப்சல் கானுக்கு மிகவும் பிடித்துப்போயின. அவர் சிரித்துக் கொண்டே சிவாஜியைத் தழுவ கைகளை விரித்தார்," என்று டென்னிஸ் கின்கெய்ட் எழுதுகிறார்.

அஃப்சல்கானை ஒப்பிடும்போது சிவாஜியின் உயரம் மிகவும் குறைவு. அவரது தோள்கள் வரை மட்டுமே சிவாஜி வந்தார்.

இருவரும் கட்டிப்பிடித்த போது ​​சிவாஜி சங்கடமாக உணர்ந்தார். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அஃப்சல் கான் தனது இடது கையால் சிவாஜியின் கழுத்தை சுற்றி வளைத்தார்.

இது ஒரு மல்யுத்த வீரரின் பிடியாக இருந்தது. பின்னர் அவர் வலது கையால் சிவாஜியை கத்தியால் தாக்கினார்.

சிவாஜி ஆடைக்கு உள்ளே இரும்பு கவசத்தை அணிந்திருந்ததால் அது அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

"சிவாஜி அஃப்சல் கானின் பிடியில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவர் சிவாஜியின் கழுத்தை மேலும் இறுக்கினார். அப்போது சிவாஜி ஒரு பாம்பு போலத்திரும்பி, முதலில் தனது கையை விடுவித்துக் கொண்டார். தனது இடது உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த புலி நகத்தால் அஃப்சலின் முதுகில் குத்தினார். பின்னர் தனது வலது கையால் குத்துவாள் கொண்டு அஃப்சலின் வயிற்றை தாக்கினார். அஃப்சல் கான் வலியில் துடித்தபடி, ’துரோகம்! துரோகம்! என்னைத் தாக்கிவிட்டார். உடனே இவரைக் கொல்லுங்கள்’ என்று கூக்குரலிட்டார்,” என்று டென்னிஸ் கின்கெய்ட் குறிப்பிட்டுள்ளார்.

அப்சல் கான் மற்றும் அவரது கூட்டாளிகளின் மரணம்

இதைக் கேட்டு தூரத்தில் நின்றிருந்த அஃப்சல்கான் மற்றும் சிவாஜியின் வீரர்கள் அவர்களை நோக்கி ஓடினர்.

சையத் பந்தா தனது வாளால் சிவாஜியின் தலையைத் தாக்கினார். ஆனால் அவரது தலைப்பாகைக்குள் இருந்த இரும்புத் தொப்பி சிவாஜியை காப்பாற்றியது.

அப்போது ஜீவா மஹாலா தனது வாளால் சையத்தின் வலது கையை தாக்கி அவரை செயலிழக்கச் செய்தார்.

"காயமடைந்த அஃப்சல்கானை கூடாரத்தில் இருந்து வெளியே எடுத்து பல்லக்கில் உட்கார வைப்பதில் அவரது மெய்க்காப்பாளர்கள் வெற்றி பெற்றனர். சிவாஜியின் ஆட்கள் அவர்களை துரத்தினார்கள். ஷம்புஜி காவ்ஜி, பல்லக்கு ஏந்தியவர்களின் கால்களைத் தாக்கினார்," என்று வைபவ் புரந்தரே எழுதுகிறார்.

"பல்லக்கு கீழே விழுந்த பிறகு அவர் அஃப்சல் கானின் தலையை துண்டித்தார். அதை அவர் சிவாஜியிடம் எடுத்துச்சென்றார். மராட்டிய வீரர்கள் ஒவ்வொருவராக அப்சலின் மருமகன்களான ரஹீம் கான், அப்துல் சயீத் மற்றும் அவரது மராட்டிய இந்துகளான பெலாஜி, ஷங்கராஜி மோஹிதே மற்றும் குல்கர்னி ஆகியோரைக் கொன்றனர். அபிசீனிய முஸ்லிமான இப்ராஹிம் சித்தி, சிவாஜியின் தோழர்களில் ஒருவராகவும் இருந்தார்."

தாக்குதல் நடத்திய சிவாஜியின் வீரர்கள்

சிறிது நேரத்தில் கோட்டையில் இருந்து போர் முழக்கம் கேட்டது. இதைக் கேட்டதும் காட்டில் மறைந்திருந்த சிவாஜியின் வீரர்கள் வெளியே வந்து அஃப்சல்கானின் வீரர்களை நாலாபுறத்தில் இருந்தும் தாக்கினர்.

இந்தத் தாக்குதலை அஃப்சல் கானின் வீரர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சில வீரர்கள் களத்தை விட்டு ஓடிவிட்டனர். இருப்பினும் சில வீரர்கள் சிவாஜியின் வீரர்களுடன் சண்டையிட்டனர். ஆனால் அவர்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களுக்கு அனுபவம் இல்லாத ஒரு இடத்தில் அவர்கள் சண்டையிட்ட வேண்டியிருந்தது.

இந்த சண்டையில் சுமார் 3,000 வீரர்கள் கொல்லப்பட்டதாக சில நாட்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ராஜாபூர் தொழிற்சாலைக்கு வந்த அறிக்கை கூறியது.

"இந்தப் போருக்குப் பிறகு சிவாஜியின் வீரர்களுக்கு நிறைய பணமும் பொருட்களும் கிடைத்தன. 4,000 குதிரைகள், 1,200 ஒட்டகங்கள், 65 யானைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை அஃப்சல் கானின் வீரர்களிடமிருந்து அவர்கள் பறித்தனர். ஆயுதங்களைக் கீழே போட விரும்புவோர் தங்கள் பற்களால் புல்லைக் கடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் உயிருடன் விடப்பட்டனர்," என்று ஜதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.

சிவாஜி, போரில் இறந்த வீரர்களின் மனைவிகளுக்கு ஓய்வூதியத்தை அறிவித்தார்.

அஃப்சல் கான் தோல்வியடைந்த செய்தி பீஜப்பூரை எட்டியதும் நாடு சோகத்தில் மூழ்கியது. படி பேகம் சாஹிபா ஒரு அறைக்குள்ளே தன்னை பூட்டிக்கொண்டு உணவு உண்பதை நிறுத்திவிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: