தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 128 யானைகள், 466 மனிதர்கள் பலி: பிரச்னையை தீர்க்க 'காடு கடத்தப்படும்' யானைகள்

    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வாழ்விட பாதிப்புகளால் காட்டை விட்டு வெளியேறிய 128 யானைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலிகளில் சிக்குவது, ரயிலில் அடிபடுவது எனப் பல செயற்கை காரணங்களால் இறந்துள்ளன.

அதேபோல, யானை – மனித எதிர்கொள்ளல் காரணமாக, 466 மனிதர்கள் இறந்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் மனித – யானை எதிர்கொள்ளலைத் தடுக்க கடந்த 10 ஆண்டுகளில், 15க்கும் மேற்பட்ட யானைகள் ‘காடு கடத்தப்பட்டு’ உள்ளது எனக் கூறும் சூழலியல் ஆர்வலர்கள் இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

காட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும், காட்டுயிர்களுக்கான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காப்பதிலும் அளப்பரிய பணியை யானைகள் செய்கின்றன.

வனத்தில் உணவு, நீர் தேடி நடக்கும் போதெல்லாம் மற்ற காட்டுயிர்களுக்கு வழியை உருவாக்கியும், தான் வெளியிடும் எச்சத்தில் நடக்கும் திசையெல்லாம் விதைகளைப் பரப்பியும் காட்டின் காவலர்களாக, இயற்கையின் பாதுகாவலர்களாக காட்டு யானைகள் உள்ளன.

ஆனால், இயற்கையின் காவலர்களான யானைகள், தங்கள் வலசைப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது, வாழ்விடப் பறிப்பு, வறட்சியால் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை எனப் பல காரணங்களால் காட்டை விட்டு வெளியேறி கடும் பாதிப்பைச் சந்தித்து மரணிப்பதும், மக்கள் உயிரிழப்பதும் தமிழகத்தில் தீர்க்க முடியாத பிரச்னையாகவே உள்ளது.

ஐந்து சரணாலயங்கள் 2,961 யானைகள்...

தமிழ்நாட்டின் யானைகளைக் காக்க, 2022இல் அறிவிக்கப்பட்ட அகஸ்திய மலை யானைகள் சரணாலயம் உள்பட தமிழகத்தில் மொத்தம், 5 யானைகள் சரணாலயங்கள் உள்ளன.

தமிழக வனத்துறை இந்தாண்டு தொடக்கத்தில், இந்த சரணாலயங்களில் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் உள்ள காப்புக்காடுகளில் நடத்திய கணக்கெடுப்பில் மாநிலத்தில், 2,961 காட்டு யானைகள் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பயிர்கள், குடியிருப்புகளைக் காக்க விவசாயிகள் அமைக்கும் சட்டவிரோத மின்வேலி, அவுட்டுக்காய் அல்லது பன்றிக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றால் பாதித்து, காட்டு யானைகள் மரணிப்பது அதிகரித்துள்ளது. அத்துடன், மனித – யானை எதிர்கொள்ளலால் மனிதர்கள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

யானைகள், மனிதர்கள் என இருதரப்பிலும் பலி எண்ணிக்கை உயரும் நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தற்காலிக தீர்வாக வனத்துறையினர் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை காடு கடத்துவதுடன் அவற்றை கும்கிகளாக மாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இந்த நடவடிக்கையை சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

பத்து ஆண்டுகளில் 1,166 யானைகள் பலி

தமிழக வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி கடந்த 10 ஆண்டுகளில் (2014 ஏப்ரல் – 2023 ஏப்ரல் வரை), எல்லை மற்றும் இனப்பெருக்கத்துக்கான சண்டை, வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு, உணவுப் பற்றாக்குறை என, இயற்கை காரணங்களால் மட்டுமே, 1,166 யானைகள் மரணித்துள்ளன.

காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள்ளும், விளை நிலங்களுக்குள்ளும் புகுந்து, சட்ட விரோத மின் வேலிகளில் சிக்குவது, நாட்டு வெடிகளில் சிக்கிக் காயமடைவது, ரயில்களில் மோதுவது என செயற்கை காரணங்களால் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில், 128 யானைகள் மரணித்துள்ளன.

யானைகள் காட்டை விட்டு வெளியேறியதால் ஏற்பட்ட, யானை – மனித எதிர்கொள்ளல் சம்பவங்களில் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில், 466 மனிதர்கள் மரணித்துள்ளனர்.

வனத்துறையின் தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 10க்கும் மேற்பட்ட யானைகள் செயற்கை காரணங்களால் மரணிப்பதும், யானைகள் – மனித மோதலால் சராசரியாக ஆண்டுக்கு 45 மனிதர்கள் மரணிப்பதும் தெரிய வருகிறது.

சமீபத்திய சம்பவங்கள் என்ன?

கடந்த ஓராண்டில் மட்டுமே, குறிப்பாக தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளான கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் சுற்றுப்பகுதிகள், கர்நாடகா மாநிலத்தை ஒட்டியுள்ள காவேரி தெற்கு சரணாயலத்துக்கு உட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில், அதிக அளவு காட்டு யானைகள் வெளியேறிய சம்பவங்களும், யானைகள் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பரில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி இறந்த குட்டியானையை அந்த விளைநிலத்தின் உரிமையாளரே புதைத்த சம்பவம் நடந்தது.

அதன்பின், இந்த ஆண்டு மார்ச் மாதம் தருமபுரி மாரண்டஹள்ளியில், சட்ட விரோத மின் வேலியில் சிக்கி ஒரே கூட்டத்தைச் சேர்ந்த, மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக மரணித்தன.

அதன்பிறகு, தருமபுரி காரிமலங்கலம் அருகே ஏரியின் அருகே, மின்வாரியத்தின் மின்கம்பத்தில் உரசி ஒரு யானை இறந்தது. கடந்த மாதம், தருமபுரியில் பிடிக்கப்பட்ட பயிர்களை மேய்ந்து பழகிய யானை, கோவை அடுத்த வால்பாறைக்கு காடு கடத்தப்பட்டுள்ளது.

யானைகளும் மனிதர்களும் மரணிக்கும் இத்தகைய சம்பவங்கள், யானைகள் காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் வருவது தொடர்கதையாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

யானைகள் ஏன் காட்டைவிட்டு வெளியேறுகின்றன?

யானைகள் ஏன் காட்டை விட்டு வெளியேறுகிறது என்பது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய கோவை ஓசை சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், ‘‘பல நூறு ஆண்டுகளாக யானைகள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை மனிதர்கள் கடந்த 100 ஆண்டுகளில் தங்களின் தேவைக்காக விளைநிலங்களாக, குடியிருப்புப் பகுதிகளாக மாற்றியுள்ளனர்.

வாழ்விட பாதிப்பு மற்றும் உணவு, நீர் பற்றாக்குறையால் மட்டுமே தன்னுடைய உயிரை பாதுகாத்துக்கொள்ள, யானைகள் காட்டை விட்டு வெளியேறுகின்றன.

கோவை, திருப்பூர், நீலகிரி வனப்பகுதிகள் செங்குத்தானவை. செங்குத்தான பகுதிகளில் யானைகளால் நீண்டதூரம் பயணிக்க முடியாது. அவை சமவெளிப் பகுதிளில் மட்டுமே உணவு, நீர் தேடி நடந்து வெளியேறும்.

ஆனால், துரதிருஷ்டவசமாக இங்கு சமவெளிப் பகுதிகளில் விளைநிலங்களும், குடியிருப்புகளும்தான் உள்ளன. இதனால்தான் தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மண்டலத்தில் அதிக யானைகள் வெளியேறுகின்றன,’’ என்றார்.

வெளியேறிய யானைகளின் நிலை என்னாகிறது?

‘‘எந்த யானையும் மனிதர்களுக்குத் தொந்தரவு கொடுக்காத வரையில் விவசாயிகளும், மக்களும் யானைகளைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரிக்கையை முன்வைப்பதில்லை.

பயிரும், உயிரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது தான், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் யானைகளைப் பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்."

அப்படி இந்த 10 ஆண்டுகளில் கோவை, நீலகிரி சுற்றுப்பகுதிகளில், 7 யானைகளும், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் தலா 1, திருவண்ணாமலையில் 6 யானைகள் என, 15 யானைகளுக்கு மேல் பிடிக்கப்பட்டுள்ளன.

இதில், சின்னத்தம்பி, அரிசி ராஜா என்ற முத்து, கல்பனா சாவ்ளா ஆகிய யானைகளை வனத்துறையினர் முகாமில் மரக்கூண்டில் அடைத்து பயிற்சி கொடுத்து கும்கிளாக மாற்றியுள்ளனர். "மற்ற யானைகளை ஒரு காட்டில் இருந்து மற்றொரு காட்டுக்கு 'காடு கடத்தி’ உள்ளனர்," என்றார் காளிதாசன்.

யானைகளை காடு கடத்துவது தீர்வாகுமா?

யானைகளை வனத்துறை காடு கடத்துவது எந்த வகையிலும் தீர்வாகாது, என்றும் விளக்குகிறார் காளிதாசன்.

மேலும், ‘‘யானை காட்டை விட்டு வெளியேறி விளைநிலங்களில் பயிர்களை மேய்ந்தோ, குடியிருப்புகளில் அரிசி, பருப்பு உட்கொண்டோ பழகிவிட்டால், அது பயிர் மேய்ந்து பழகிய (Habitual Crop Raider) யானை என அழைக்கப்படுகிறது. இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டினாலும் திரும்பத் திரும்ப வெளியேறும்.

இப்படியான யானைகளை காடு கடத்துவதன் மூலம், வனத்துறையினர் ஓரிடத்தில் இருக்கும் பிரச்னையை மற்றோர் இடத்துக்குக் கடத்துகிறார்களே தவிர பிரச்னைக்குத் தீர்வு ஏற்படப் போவதில்லை.

கோவையில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் முத்து யானையை, 70 – 110 கி.மீ. தொலைவுக்கு மேலுள்ள வால்பாறை, டாப்சிலிப் பகுதிக்கு வனத்துறையினர் காடு கடத்தினர்.

ஆனால், பயிர் மேய்ந்து பழகிய இந்த இரண்டு யானைகளும் அந்தக் காட்டைவிட்டு வெளியேறி, 100 கி.மீட்டர்களுக்கு மேல் பயணித்து விளைநிலங்கள், குடியிருப்புகளுக்கு வந்த சம்பவமே இதற்கு சாட்சி,’’ என்றார்.

அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும்

அரசு எதில் கவனம் செலுத்த வேண்டும் என பிபிசி தமிழிடம் பேசிய, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) ஆசிய யானைகள் சிறப்புக்குழுவின் உறுப்பினர் முனைவர் ராமகிருஷ்ணன், அரசு அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

அதுகுறித்து விளக்கியபோது, ‘‘அரசு முதலில் இருக்கின்ற யானைகள் குறித்த தகவல்கள், தரவுகள் எல்லாவற்றையும், நீண்ட கால முறையில் சேகரித்து டிஜிட்டல் முறையில் பராமரிக்க வேண்டும்.

மற்ற நாடுகளைப் போல யானைகளை முழுமையாக Drone Mapping செய்வதுடன், களைச்செடிகளை அகற்றி, வலசைப்பாதையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். யானைகள் பாதுகாப்புக்கான நிதியை பட்ஜெட்டில் அதிகரிக்க வேண்டும்.

ட்ரோன் மேப்பிங், யானைக் கூட்டத்தை புகைப்பட மேப்பிங், டிஜிட்டல் வகையில் தரவுகள் என, அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு முற்றிலும் மாறினால் மட்டுமே எதிர்காலத்தில் இந்த பிரச்னைகளைக் களைய முடியும். இவற்றைச் செய்யாத வரையில், யானைகள் காட்டை விட்டு வெளியேறுவது தொடர்கதையாகவே இருக்கும்,’’ என்றார் ராமகிருஷ்ணன்.

யானைகளை காக்க தமிழக அரசு என்ன செய்கிறது?

யானைகள் காடு கடத்தப்படுவது, காட்டைவிட்டு வெளியேறி யானைகள் இறப்பதைத் தடுக்க தமிழக அரசு என்னென்ன செய்துள்ளது என்ற கேள்விகளை முன்வைத்தபோது, தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு பிபிசி தமிழிடம் விளக்கமளித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய சுப்ரியா சாஹு, ‘‘தமிழகத்தில் யானைகளால் பயிர்கள் சேதமடைவது அதிகரித்துள்ளதே தவிர, கடந்த சில ஆண்டுகளாக யானைகள் உட்பட காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் அதிகரிக்காமல் நிலையாக உள்ளது. யானைகள் வெளியேறுவதைத் தடுக்க வனத்துறை மேற்கொண்ட, சோலார் மின் வேலி, அகழி வெட்டுவது உள்ளிட்ட பல முயற்சிகள், யானைகள் காட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்துள்ளது.

தற்போது, ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் யானைகளை ரேடியோ காலரிங் பொருத்தி கண்காணிக்கிறோம். யானைக் கூட்டத்தை டிரோன் வாயிலாக கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்,’’ என்றார்.

மேலும், தொடர்ந்த அவர், ’’முதற்கட்டமாக கோவை மதுக்கரை அருகே ரயில்வே துறையுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 12 டவர் கேமராக்கள் பொருத்தியுள்ளோம். இந்த கேமராக்கள் இரவிலும் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, ரயில்வே தண்டவாளம் அருகே வந்ததும் எச்சரிக்கும்.

அதிக யானைகள் நடமாட்டம் உள்ள தமிழகத்தின் ஐந்து பகுதிகளில், மக்களுக்குத் தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

மின் வேலியில் சிக்கி மரணிக்கும் யானைகளைத் தடுப்பதற்கு அரசு என்ன செய்துள்ளது எனக் கேள்வி எழுப்பியபோது, பதிலளித்த சுப்ரியா சாஹு, நாங்கள் சட்டவிரோத மின்வேலிகள் குறித்து ஆய்வு செய்து, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: