You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காயத்ரி ரகுராமின் சர்ச்சை புகாருக்கு நேரடி பதில் தராமல் தவிர்த்த அண்ணாமலை - என்ன நடந்தது?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருள் ஆகியுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சென்னை விருகம்பாக்கத்தில் கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலரிடம் திமுகவினர் தவறாக நடந்துள்ளனர். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாஜக போன்ற கட்சிகள் இதுகுறித்து பேசியதை தொடர்ந்து தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு காவல்துறை மீது திமுக அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்தார்களா என்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக ஒரே கிராமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இறையூர் கிராமத்தில் இரட்டை குவளை, கோவில்களில் தலித்கள் அனுமதி இல்லை, தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் என பல்வேறு பிரச்சனைகள் நடந்துள்ளன. ஜாதி இல்லாத தமிழகத்தை உருவாக்குகிறோம் என்று திமுக கூறிவரும் நிலையில், அது என்ன நிலைமையில் உள்ளது என்பதற்கு புதுக்கோட்டை இறையூர் கிராமமே சாட்சி என்றும் குற்றம் சாட்டினார்.
பாஜகவில் இருந்து நேற்று விலகிய காயத்ரி ரகுராம் , `மாநில தலைவர் அண்ணாமலையால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை` என்ற குற்றச்சாட்டையும் பொதுவெளியில் வைத்தார். அண்ணாமலை வார் ரூமில்' இருந்து என்னை மிக மோசமாக ட்விட்டரில் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். கட்சிக்குள்ளிருந்து இதுபோல தாக்குதல் நடத்தும்போது அதைப் பற்றி அண்ணாமலை எதையுமே பேசவில்லை.
"ஒரு பெண்ணை இப்படி குறிவைக்காதீர்கள்" என்று கூட சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டையும் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியின்போது காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.
காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டுகள் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதுதான் எனது வாடிக்கை. எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும். அதே நேரத்தில் கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. பாஜகவில் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மகளிர் உள்ளனர்.
தமிழகத்திலும் லட்சக்கணக்கில் மகளிரணியினர் உள்ளனர். மகளிர் அதிகமாக பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் பிடிக்காமல் கட்சியை விட்டு சென்றால் அதை நினைத்து நான் வருத்தப்படவில்லை என்று அண்ணாமலை பதிலளித்தார்.
மேலும், தன் மீது குற்றச்சாட்டுகளை வைக்காதவர்களே இல்லை என்றும் ஒரு சில ஊடகங்களின் பெயரை சொல்லி அவை தன்னை வைத்துதான் கவர் ஸ்டோரி செய்வதாகவும் அண்ணாமலை கூறினார்.
எந்த பத்திரிகை தன்னை பற்றி கருத்து கூறினாலும் தனது பதில் மௌனம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜகவில் வார் ரூம் இருப்பதாக காயத்ரி ரகுராம் கூறியது தொடர்பான கேள்விக்கு, பாஜகவில் வார் ரூம் உள்ளது, விமானப்படை உள்ளது, கடற்படை உள்ளது தேவையான நேரத்தில் பயன்படுத்துவோம் என்றும் அவர் பேசினார்.
செய்தியாளர்களுடன் வாக்குவாதம்
சுப்பிரமணியன் சுவாமி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அண்ணாமலை போய் சிலர் காலில் விழுந்தால், என்னை பாராட்டிப் பேசுவார்கள். 30, 40 ஆண்டுகளாக இந்த கட்சியை தாங்கி இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அவர்கள் காலில் என்னால் போய் விழ முடியாது. சுப்பிரமணியன் சுவாமிக்கும் இது பொருந்தும்," என்றார்.
தனது பேச்சின்போது, ஊடகங்கள் ஒரு கட்சிக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுவதாக அண்ணாமலை கூறினார். இதைத்தொடர்ந்து சில செய்தியாளர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல், செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம் , ` உங்கள் ரஃபேல் வாட்சில் ஆடியோ, வீடியோ ஆகியவற்றை பதிவு செய்யும் வசதி உள்ளதாக கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், தனது வாட்சை கழற்றி செய்தியாளரிடம் கொடுத்துவிட்டு, 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன். இதில் ரெக்கார்டு செய்யும் வசதி உள்ளதா என்பதை சோதித்து பாருங்கள் என்றார்.
கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் ஒரு கட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
இதையடுத்து ஒவ்வொரு செய்தியாளரிடமும் அவர் எந்த ஊடகத்தை சேர்ந்தவர் என்று கேட்டு தனது விமர்சனத்தை அண்ணாமலை வைத்தார்.
காயத்ரி ரகுராம் கருத்து
இதற்கிடையே, அண்ணாமலையின் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அதில், ` காயத்ரி ரகுராம் குறித்தும், துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் குறித்தும் எந்தவித பதிலையும் அண்ணாமலை கூறவில்லை. திமுக நபருடன் எனக்கு தொடர்ப்பு இருப்பதாக மீண்டும் அவர் கூறுகிறார். அண்ணாமலை அதை நிரூபிக்க வேண்டும்` என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்