வாரிசு அப்டேட்: சம்பந்தமே இல்லாத சமந்தாவை விஜய் ரசிகர்கள் நச்சரித்தது ஏன்?

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பொங்கலுக்கு வெளியாகும் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரெய்லர் எப்போது? என்று கேட்டு நடிகை சமந்தாவிடம் விஜய் ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சமந்தாவும் பதில் அளித்துள்ள சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது. 

வரும் பொங்கலுக்கு வாரிசு - துணிவு ஆகிய இரு படங்களும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதுமே விஜய், அஜித் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வழக்கம் போல் நீயா, நானா போட்டி தொடங்கிவிட்டது. பாடல்கள், கதாபாத்திரங்கள் அறிமுகம் என்று அடுத்தடுத்து இரு படங்கள் குறித்தும் வெளியான அப்டேட்களை இருவரின் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர்.

நடிகர் அஜித் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்பதால் துணிவு படத்திற்கென தனியாக விழா எதுவும் இல்லை. ஆனால், நடிகர் விஜயோ, வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு அவர்களை பரவசப்படுத்தினார். 

அடுத்தபடியாக வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களின் டிரெய்லரும் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று தகவல் வெளியானது. இருவரின் ரசிகர்களும் அதனை எதிர்பார்த்திருந்த வேளையில், துணிவு படத்தின் டிரெய்லர் மட்டுமே வெளியானது. இதனால், உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் டிரெய்லரை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி மகிழ்ந்தனர். 

விஜய் ரசிகர்களோ, வாரிசு படத்தின் டிரெய்லர் மட்டுமல்ல, அதுகுறித்த அப்டேட் கூட வெளியிடப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில்தான், வாரிசு படத்தை தயாரிக்கும் தெலுங்கு படத் தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது மற்றொரு தயாரிப்பான சாகுதலம் என்ற படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. 

மகாகவி காளிதாசர் எழுதிய சாகுந்தலம் புராண கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சாகுந்தலை பாத்திரத்தை நடிகை சமந்தா ஏற்றுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பிப்ரவரி 17-ம் தேதி ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

சாகுந்தலம் திரைப்பட வெளியீடு குறித்த இந்த ட்வீட்டை நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். வாரிசு பட டிரெய்லர் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து ஏமாந்திருந்த விஜய் ரசிகர்கள், நடிகை சமந்தாவின் ட்விட்டர் பதிவில் அதுகுறித்த கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். 

ஒரு கட்டத்தில் #varisutrailerupdate என்ற ஹேஷ்டேக்கில் வாரிசு பட அப்டேட் கேட்டு ட்விட்டரில் டிரெண்டாக்கத் தொடங்கினர். இதையடுத்து, தனது படம் குறித்த அறிவிப்பில், வாரிசு பட அப்டேட் கேட்டு நச்சரித்த விஜய் ரசிகர்களுக்கு, "விரைவில் வரும்" என்று நடிகை சமந்தா பதிலளித்தார். 

சமந்தாவின் பதிலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் பலரும், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவரது பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். விஜயும், சமந்தாவும் ஜோடியாக நடித்த கத்தி, தெறி, மெர்சல் ஆகிய 3 படங்களுமே சூப்பர் ஹிட்டாயின என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, வாரிசு பட டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, சமூக வலைதளங்களில் சந்தேகத்திற்கிடமின்றி நடிகர் விஜய் எப்போதும் ஆதிக்கம் செலுத்தியே வந்திருக்கிறார். அவரது படப் பாடல்கள், டீசர், டிரெய்லர் என்று எது வெளியானாலும் அவை பழைய சாதனைகளை உடைத்து, புதிய சாதனைகளை படைத்தே வந்திருக்கின்றன. 

யூ டியுப் தளத்தில் தமிழ் சினிமா டிரெய்லர்களில் முதலிரண்டு இடங்களில் விஜயின் பீஸ்ட், பிகில் ஆகிய திரைப்படங்களே உள்ளன. பீஸ்ட் திரைப்படம் 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான துணிவு பட டிரெய்லர் நடிகர் அஜித்தின் முந்தைய படங்களைத் தாண்டி, அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் திரைப்படங்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. 

துணிவு படம் தொடர்ந்து அதிகமான பார்வைகளை பெற்று வரும் நிலையில், அந்த அலையை முறியடித்து, பீஸ்ட் படத்தின் சாதனையையும் விஞ்சி வாரிசு பட டிரெய்லர் புதிய சாதனை படைக்கச் செய்ய விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: