You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி எதிர்ப்பு, பாலத்தீன ஆதரவு பதிவுகளை 'லைக்' செய்ததால் பள்ளி முதல்வர் பணிநீக்கமா?
- எழுதியவர், பாக்யஸ்ரீ ரௌத்
- பதவி, பிபிசி மராத்திக்காக
சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவினை 'லைக்' செய்ததற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பிபிசியிடம் பேசிய பணிநீக்கம் செய்யப்பட்ட அந்தப் பள்ளி முதல்வர் பர்வீன் ஷேக், இது 'அரசியல் ரீதியாக' உந்தப்பட்ட முடிவு என்றார்.
மும்பையிலிருக்கும் சோமையா வித்யாவிஹார் பள்ளியின் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் அவர், தான் கடந்த 12 வருடங்களாக பள்ளியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதாக பிபிசியிடம் கூறினார்.
"ஆனால், என் மீது தொடுக்கப்பட்ட அவதூறு பிரசாரத்தை எதிர்கொள்ள பள்ளி நிர்வாகம் எனக்கு ஆதரவாக நிற்காமல், அதற்குப் பலியானதால் நான் ஏமாற்றமடைந்தேன். இந்தக் கடுமையான மற்றும் தேவையற்ற நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது," என்றார்.
சோமையா வித்யாவிஹார் பள்ளியில் பர்வீன் ஷேக் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அவர் பள்ளியின் முதல்வராகப் பணியமர்த்தப்பட்டார்.
தற்போது, அவர் பாலத்தீனத்திற்கு ஆதரவான, பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிரான சில சமூக வலைதளப் பதிவுகளை `லைக்` செய்ததாகக் கூறப்பட்டதையடுத்து அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அப்பள்ளி நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
என்ன நடந்தது?
பர்வீன் ஷேக் வெளியிட்ட ஒரு அறிக்கையில், Opindia இணையதளம் மற்றும் அதன் ஆசிரியர் நூபுர் ஷர்மா தனக்கு எதிராக அவதூறான பொய்களை பரப்பியுள்ளதாகக் கூறினார்.
இந்த இணையதளத்தின் அறிக்கை என்ன சொல்கிறது?
பர்வீன் ஷேக் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் சுறுசுறுப்பாக உள்ளார். தனது பணி குறித்துப் பதிவிட்டு வருகிறார்.
ஆனால் Opindia என்ற இணையதளம், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "பர்வீன் ஷேக் தனது எக்ஸ் கணக்கிலிருந்து பாலத்தீனத்திற்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் இடப்பட்ட ட்வீட்கள், இந்து விரோத ட்வீட்களை, பிரதமர் மோதியைப் பற்றித் அவதூறாகப் பதிவிட்ட ட்வீட்களையும் 'லைக்' செய்திருக்கிறார்" என்று தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை வெளியானதும், பள்ளி நிர்வாகம் பர்வீன் ஷேக்கை அழைத்து அவரை பள்ளி முதல்வர் பதவியில் இருந்து விலகச் சொன்னது. தன்னை பதவி விலகக் கட்டாயப்படுத்துவது தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று கூறி அவர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.
இதனையடுத்து சோமையா பள்ளி நிர்வாகம் கடந்த மே 4-ஆம் தேதி இந்தச் சம்பவத்தைக் குறித்து பர்வீன் ஷேக்கிடம் எழுத்துப்பூர்வ பதிலைக் கோரியது. மூன்று நாட்களுக்குப் பிறகு சோமையா பள்ளி ஒரு அறிக்கையை வெளியிட்டு பர்வீன் ஷேக் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
பர்வீன் ஷேக்கின் கூற்றுப்படி Opindia இணையதளத்தின் ஆசிரியரான நூபுர் ஷர்மா தன்னைப் பற்றி வெளியிட்ட பொய்ச் செய்திதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்றார்.
இதற்கு பதிலளித்த நூபுர் ஷர்மா, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பர்வீன் ஷேக்கிற்குச் சவால் விடுத்தார். "ஆம். நான் தான் இதைச் செய்தேன். வா பார்க்கலாம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் உனது கருத்துகளை பிரசுரம் செய்ததற்காக என்மீது வழக்கு தொடு. நீதிமன்றத்தில் சந்திக்கலாம்," என்று நூபுர் ஷர்மா பதிவிட்டிருந்தார்.
பள்ளி நிர்வாகம் கூறுவது என்ன?
இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி சோமையா பள்ளியில் தலைமைப் பதவி வகிக்கும் திருமதி பர்வீன் ஷேக்கின் தனிப்பட்ட சமூக ஊடகச் செயல்பாடுகள், நாம் போற்றும் விழுமியங்களுடன் பொருந்திப் போகவில்லை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம், இருப்பினும் அது கட்டுப்பாடுகளற்றது அல்ல என்பதையும், மற்றவர்கள் மீது பொறுப்புடனும் மரியாதையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். இதன் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, கவனமாகப் பரிசீலித்த பிறகு, நிர்வாகம் பர்வீன் ஷேக்கை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. இது நமது ஒற்றுமை மற்றும் உள்ளடக்கிய நெறிமுறைகளை சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யும்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், இந்த முடிவு பள்ளியின் மாணவர்களின் 'மனதைப் பாதுகாக்க' மிகவும் முக்கியமானது என்று பள்ளி நிர்வாகம் நம்புவதாகவும், மாணவர்கள் 'ஒருமைப்பாடு மற்றும் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தும் சூழலில் வளர்க்கப்படுவதை உறுதிசெய்கிறோம்' என்றும் அந்த அறிக்கை கூறியது.
பர்வீன் ஷேக் என்ன சொல்கிறார்?
பர்வீன், பள்ளி நிர்வாகத்திடமிருந்து பணிநீக்கம் குறித்த அறிவிப்பைப் பெறுவதற்கு முன்பே தான் சமூக ஊடகங்களில் அதைப்பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். "பணிநீக்க அறிவிப்பு முற்றிலும் சட்டவிரோதமானது.'OpIndia' இணையதளம் மற்றும் நூபுர் ஷர்மா எனக்கு எதிராக பரப்பிய அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டது. பள்ளி முதல்வராக எனது சிறப்பானது. இத்தகைய காரணத்திற்காக என்னைப் பணிநீக்கம் செய்வது மற்றிலும் நியாயமற்றது," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "என்னுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் 12 ஆண்டுகளாக பள்ளியின் வளர்ச்சிக்கு எனது நேர்மையான பங்களிப்பு அனைத்தும் இருந்தும், நிர்வாகம் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பதில் நான் ஏமாற்றமடைகிறேன். இந்த மோசமான அவதூறு பிரசாரம் எனக்கு எதிராக நடத்தப்பட்டது. அதற்கு பலியாகி, இந்தக் கடுமையான, தேவையற்ற நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. நமது சட்ட அமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. தற்போது சட்ட வழிமுறைகளைப் பரிசீலித்து வருகிறேன்," என்றார்.
சமூக வலைதளப் பதிவை 'லைக்' செய்ததற்காக ஒருவரை பணிநீக்கம் செய்ய முடியுமா?
சோமையா பள்ளி 'தங்கள் விழுமியங்களுக்குப் பொருந்தாத' செயல்களுக்காக பர்வீன் ஷேக்கைப் பணிநீக்கம் செய்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பள்ளிப் பணியாளர்கள் சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது பற்றியோ அல்லது தங்கள் அரசியல் எதிர்வினைகளை வெளிப்படுத்துவது பற்றியோ பள்ளி எந்தக் விதிமுறையையும் பின்பற்றுவதில்லை இல்லை என்று பர்வீன் கூறுகிறார்.
அப்படியானால், சமூக ஊடகங்களில் ஒரு பதிவை 'லைக்' செய்ததற்காக ஒரு பணியாளரை நீக்க முடியுமா? சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர்பாக ஏதேனும் சட்டம் உள்ளநவா?
வழக்கறிஞர் மகேஷ் லிமாயே கூறுகையில், "தற்போது சமூக ஊடகங்களுக்கு அப்படிப்பட்ட சட்டம் இல்லை" என்றார்.
அவர் இதுகுறித்து பிபிசி மராத்தியிடம் மேலும் பேசும்போது, "முன்னதாக, சமூக வலைதளங்களில் பதிவுகளை விரும்புவதற்கோ (லைக் செய்வதற்கோ) அல்லது கருத்து தெரிவிப்பதற்கோ தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு '66-A'-வின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், 2015-க்குப் பிறகு அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே, சமூக ஊடகங்களில் யாரேனும் ஒருவர் ஒரு பதிவை 'லைக்' செய்தால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை," என்றார்.
மேலும், "பள்ளி நிர்வாகம் அவர்களின் மதிப்புகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தால், அதனைத் தீர்மானிக்க நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது," என்றார் அவர்.
யார் இந்த பர்வீன் ஷேக்?
பர்வீன் ஷேக் கடந்த 12 ஆண்டுகளாக சோமையா பள்ளியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அப்பள்ளியின் முதல்வராகப் பதவி உயர்வு பெற்றார்.
அவரது பணிக் காலத்தில் பள்ளி பல்வேறு விருதுகளைப் பெற்றது.
"கடந்த இரண்டு ஆண்டுகளாக, அப்பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மும்பையில் முதலிடம் பெற்றிருந்தனர். பள்ளி 100% தேர்ச்சி பெற்றது" என்கிறார் பர்வீன்.
சோமையா பள்ளி இணையதளத்தின்படி, பர்வீன் ஷேக் கல்வியியலில் பி.எட்., எம்.எட்., முடித்திருக்கிறார். மனித வளர்ச்சித் துறையில் டிப்ளமோ பட்டமும் மற்றும் கல்வி மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கூடுதலாக, அவர் தேசிய தகுதித் தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றுள்ளார்.
கருத்துகளுக்காக ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள்
தமிழ்நாடு:
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி, செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் கணினி ஆசிரியையாக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தப் பணியிடை நீக்கம் குறித்து அப்போது அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆசிரியை தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் அவரை பணியிடை நீக்கம் செய்ததாக, தமிழ்நாடு அரசு மீது விமர்சனம் எழுந்தது.
கர்நாடகா:
கடந்த ஆண்டு, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அம்மாநில முதல்வர் சித்தராமையாவை விமர்சித்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தனு மூர்த்தி என்பவர் கர்நாடக அரசு அறிவித்துள்ள இலவசங்கள் மாநிலத்திற்குச் சுமையாக இருப்பதாகப் பதிவிட்டிருந்தார். சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் கடன் அதிகரித்ததாக அவர் கூறியிருந்தார். அவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்த உடனேயே அவருக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு கிடைத்தது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது.
உத்தரப் பிரதேசம்:
கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் வான்வழித் தாக்குதல் தொடர்பாக அரசியல் கருத்துகளை வெளியிட்டதற்காக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏழு அரசு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சில ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் தெரிவித்திருந்தனர். அவர்கள் 'சேவை உத்தரவுகளை' மீறியதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தைப் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் அப்போது செய்தி வெளியிட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)