You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் பாஜகவை சாடும் தாயார் - பிபிசி பேட்டியில் கூறியது என்ன?
- எழுதியவர், வி. சங்கர்
- பதவி, பிபிசி தெலுங்கு
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா, தற்கொலை செய்து கொண்டார். அவர் `தலித்’ என்ற காரணத்தால் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ரோஹித் வெமுலா வழக்கு தலைப்பு செய்திகள் ஆகிவிட்டது. காரணம், தெலங்கானா காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த இறுதி விசாரணை அறிக்கையில், ரோஹித் வெமுலா `தலித்’ அல்ல என்றும், அவரது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், விசாரணை அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே, தெலங்கானா அரசு தலையிட வேண்டியதாயிற்று. அதுமட்டுமின்றி, இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தெலுங்கானா டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, காவல்துறையின் விசாரணை செயல்முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதெல்லாம் ஒரு சதி என்று குறிப்பிடுகிறார்.
ராதிகா வெமுலா, பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது மகனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை தனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
ராதிகா வெமுலாவிடம் பிபிசி முன்வைத்த கேள்விகளும், அவரின் பதில்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன..
பிபிசி: ரோஹித் இறந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. இந்த காலகட்டத்தை எப்படி கடந்தீர்கள்?
ராதிகா வெமுலா : ரோஹித் இல்லாத நாட்கள் மிகவும் மோசமான நாட்கள். காவல்துறையின் சமீபத்திய அறிக்கை என் கவலையை மேலும் அதிகரித்தது. இந்த வழக்கை முடித்து விட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இது எனக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. இதனால், மாணவர்களும் கவலை அடைந்துள்ளனர். எனவே சற்றும் தாமதிக்காமல், உடனடியாக தெலங்கானா முதல்வரைச் சந்தித்தோம்.
அவர் நியாயமாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று அவர் சாதகமாக கூறினார். ரோஹித்துக்காக போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யக் கோரினேன். இது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
பிபிசி : ரோஹித் பட்டியல் சாதியை சேர்ந்தவர் அல்ல என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
ராதிகா வெமுலா: இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். காவல்துறையால் ஒருவரின் சாதியை எப்படி தீர்மானிக்க முடியும்? சாதிச் சான்றிதழை சரிபார்ப்பில் காவல்துறையின் பங்கு என்ன? 2017-18ம் ஆண்டிலேயே ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தோம். 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா சூழலால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. முழுமையாக விசாரணையை முடிக்காமல் எப்படி இறுதி அறிக்கை தயாராகும்? இவை அனைத்தும் பாஜகவின் சதியால் நடக்கிறது.
எம்எஸ்சி நுழைவுத் தேர்வில் ரோஹித் தேசிய அளவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஜே.ஆர்.எஃப்-ல் இரண்டு முறை தேர்ச்சி பெற்று, உதவித்தொகைக்கு தகுதி பெற்றார். அவரது சான்றிதழ்கள் போலியானவை அல்ல. அனைத்தையும் மக்கள் பார்வைக்கு பகிர்வேன். மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவரை தலித் இல்லை என்று சொல்வது அரசியல் சதி. நாங்கள் உண்மையான தலித்துகள். எங்கள் மீது எந்த தவறும் இல்லை.
'இவை அனைத்தும் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி'
பிபிசி: தான் பட்டியல் சாதி அல்ல என்பது தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் கூறுகிறதே?
ராதிகா வெமுலா: ரோஹித் எஸ்சி இல்லை என்றால், அவர் எப்படி பல்கலைக் கழகத்தில் அனுமதி பெற்றார்? சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் முயற்சி. ரோஹித் ஒரு தலித்தாக தான் இறந்தார். அவர் தலித் என்பதால் தான் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இறந்த பிறகு சாதியை குறித்து குறை கூறுவது மிகவும் தவறு.
பிபிசி: ரோஹித்தின் சாதி குறித்து குண்டூர் ஆட்சியர் மற்றும் குர்ஜாலா தாசில்தார் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அவர் வத்தேரா சாதியைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறுகிறார்களே?
ராதிகா வெமுலா: அதை எப்படி முடிவு செய்தார்கள்? அவர்கள் என் வாதத்தை கேட்க வேண்டாமா? காச்சிபௌலி போலீஸார் என்னிடம் விசாரணை நடத்தவில்லை. ரோஹித்தின் மரணத்திற்குப் பிறகு, குண்டூர் ஆட்சியராக காந்திலால் தண்டே அறிவிக்கப்பட்டார், அந்த சமயத்தில் ரோஹித் தலித் என்று கருதப்பட்டார். ஆனால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரோஹித் தலித் இல்லை என்று ஆட்சியர் பொய்ப் பிரசாரம் செய்கிறார்.
பிபிசி: ரோஹித் வழக்கில் நீதி கேட்டு போராடினீர்கள். இப்போது நீங்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லையா?
ராதிகா வெமுலா: தேர்தல் நேரத்தில் சதி நடக்கிறது. ஆட்சிக்கு வந்தால் நியாயம் செய்வேன் என்றார் ராகுல் காந்தி. எனவே இப்போது இந்த முயற்சி அவர்களை ஓரங்கட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
பிபிசி: வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது, இம்முறை ரோஹித்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?
ராதிகா வெமுலா: இந்த முறை நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். பாஜக, பிஆர்எஸ் ஆகிய இரு கட்சிகளின் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தினால் முழுமையான நீதி கிடைக்கும்.
பிபிசி: நீங்கள் எதிர்பார்க்கும் நீதி?
ராதிகா வெமுலா: ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதன் மூலம், தலித் மாணவர்களை தாக்க நினைப்பவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட வேண்டும்.
"ஒரு நாள் 'ரோஹித் வெமுலா சட்டம்’ இயற்றப்படும்"
பிபிசி: ரோஹித் தற்கொலைக்கு பிறகும் ஐஐடி போன்ற இடங்களில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?
ராதிகா வெமுலா: ரோஹித்துக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக தான் நான் போராடுகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களையும் நான் ரோஹித் போல தான் பார்க்கிறேன். நான் என் ஒரு குழந்தையை இழந்துவிட்டேன். மீண்டும் இப்படி நடக்க கூடாது. நாம் வேறு யாரையும் இழக்க மாட்டோம் என்று நம்புகிறேன்.
பிபிசி: உங்கள் குடும்ப சூழ்நிலை என்ன?
ராதிகா வெமுலா: நான் தையல் வேலை செய்கிறேன். என் இளைய மகன் ராஜா சில காலம் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினார் ஆனால் அது குடும்ப பொருளாதாரத்தில் பெரிதாக உதவவில்லை. தற்போது வேறு வேலை செய்து வருகிறார். இப்படியே நாட்கள் கழிகின்றன.
பிபிசி: ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே உங்கள் தரப்பு கோரிக்கை. அதன் பலன் என்ன?
ராதிகா வெமுலா: இதன் மூலம் தலித் குழந்தைகளுக்கு எதிரான அநீதி தடுக்கப்படும். அதனால்தான் இந்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் இந்த சட்டம் இயற்றப்படும் என்று நம்புகிறேன்.
ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு பின்னணி
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், ஜனவரி 17, 2016 அன்று, ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். அவர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், ரோஹித் வெமுலா மற்றும் அவரது நான்கு நண்பர்கள் பல்கலைக் கழகத்தால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர், இந்த மாணவர்களால் தான் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். பல்கலைக் கழகத்தின் முதல் விசாரணையில் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு ரோஹித் மற்றும் அவரது மற்ற மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் வந்ததும் அதில் மாற்றம் ஏற்பட்டது. அவரது பதவிக் காலத்தில் எந்த ஒரு உறுதியான காரணமும் கூறாமல் பழைய முடிவு திரும்பப் பெறப்பட்டது. மீண்டும் ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் பல்கலைக்கழக விடுதி மற்றும் பிற பொது இடங்களில் தடை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், செகந்திராபாத் பாஜக எம்.பி. பண்டாரு தத்தாத்ரேயா (தற்போது ஹரியானா ஆளுநர்) அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதினார். அவர் பல்கலைக் கழகத்தை 'நம்பிக்கை துரோகி' என்று அழைத்தார் மற்றும் அங்கு நடந்த சம்பவங்களில் தலையீடு கோரினார்.
தத்தாத்ரேயாவின் கடிதத்தைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு குழுவை அமைக்க பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. இது ரோஹித் வெமுலா மற்றும் பிற மாணவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது.
இந்த கடிதத்தை மேற்கோள் காட்டி, அம்பேத்கர் மாணவர் சங்கம், தத்தாத்ரேயாவின் கடிதத்திற்கு பிறகு, பல்கலைக் கழகத்தில் பிரச்னைகள் தொடங்கியதாகவும், அதன் பிறகு மேலும் சில தலித் மாணவர்கள் சமூக பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கில் பண்டாரு தத்தாத்ரேயா மீது தற்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தத்தாத்ரேயா, குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கும் அவர் எழுதிய கடிதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தால் அல்லது அப்படி வேறு யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால், இந்தியாவில் உள்ள `the Aasra’ இணையதளம் அல்லது உலகளாவிய BFriends மூலம் ஆலோசனை பெறலாம் .
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)