You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை: நாய்களால் தாக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு விரைவில் 'பிளாஸ்டிக் சர்ஜரி' - உடல்நிலை எப்படி இருக்கிறது?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்துவரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அந்தச் சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
வளர்ப்பு நாய்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் என்ன சொல்கின்றன?
பூங்காவில் என்ன நடந்தது?
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளிக்கூடச் சாலையில் இருக்கும் பூங்காவின் காவலாளியாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சோனியா, குழந்தை சுதக்ஷா ஆகியோருடன், பூங்காவில் உள்ள ஒரு அறையிலேயே வசித்துவருகிறார்.
தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அதற்காக விழப்புரம் சென்றிருக்கிறார் ரகு. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) இரவு 9 மணியளவில், அந்தப் பூங்காவுக்கு எதிரில் வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது இரண்டு ராட்வய்லர் ரக நாய்களுடன் அந்தப் பூங்காவிற்கு வந்திருக்கிறார். அப்போது அந்தப் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சுதக்ஷாவை நாய்கள் தாக்க ஆரம்பித்துள்ளன. அந்த நாய்களை புகழேந்தியால் கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கே வந்த குழந்தையின் தாய் சோனியாவையும் நாய்கள் தாக்கியுள்ளன.
இந்தத் தாக்குதலில், நாய்கள் குழந்தையின் தலைப் பகுதியில் உள்ள தோலைக் கடித்து குதறின. இதனால் தலையில் 11 அங்குலம் அளவுக்கு தோல் பிய்ந்து வந்துவிட்டது. இதற்குப் பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து நாயை விரட்டி, குழந்தையை மீட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தை, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. அதன்பிறகு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. நாயை வளர்த்த புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
புகழேந்தி மீது ஐ.பி.சி 289-வது பிரிவு (மிருகங்கள் தொடர்பாக அலட்சியமான நடத்தை) ஐ.பி.சி 336 (பிறரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாய்கள் இரண்டும் அவரது வீட்டிற்குள்ளேயே இன்னும் இருக்கின்றன.
தற்போது குழந்தை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகர ஆணையர் சொன்னது என்ன?
இதற்கிடையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "ராட்வய்லர் வகை நாய்களை வளர்க்கத் தடை இல்லையென்றாலும், அதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்," என்றார். இச்சம்பவத்தில் அந்த உரிமத்தை நாயை வளர்ப்பவர் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, இந்தச் சம்பவம் நடந்த பூங்காவைப் பார்வையிட்ட அவர், "கடித்த நாயின் உரிமையாளர்கள் இப்போது இங்கே இல்லை. ஆகவே ஏதாவது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் நாயை அப்புறப்படுத்த யோசித்து வருகிறோம். ஒன்றிரண்டு நாட்களில் இது குறித்து முடிவு செய்வோம். தவிர, இதுபோன்ற நாய்களை வளர்ப்பதற்கு `கென்னல் கிளப் ஆஃப் இந்தியா` அமைப்பிடம் உரிமம் பெற்றிருந்தாலும் கூட மாநகராட்சியின் உரிமத்தையும் பெற வேண்டும்," என்றார்.
மேலும், "இதுபோன்ற நாய்களை வெளிநாடுகளில் சண்டைக்காக வளர்ப்பார்கள். அப்படி ஒரு நாயை, அதனைக் கட்டுப்படுத்தும் கயிறுகூட இல்லாமல் இவ்வளவு வீடுகள் இருக்கும் இடத்தில் அவிழ்த்து விடுவதாக இப்பகுதியினர் கூறுகிறார்கள். ஏற்கனவே இங்கிருக்கக் கூடிய கோழி ஒன்றை இந்த நாய்கள் கடித்துக் குதறியிருக்கின்றன. குழந்தைக்கு தலையில் மட்டுமல்லாமல் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்படும்," என்று தெரிவித்தார்.
இந்தியாவில் நாய் பிரச்னை
இந்தியாவில் நாய்கள் தொடர்பாக இருவிதமான பிரச்னைகள் உள்ளன.
ஒன்று தெரு நாய்கள் தொடர்பான பிரச்னை. இரண்டாவதாக, வளர்ப்பு நாய்கள் - அதாவது ஆக்ரோஷமான வளர்ப்பு நாய்கள் - தொடர்பான பிரச்னை.
தெரு நாய்களைப் பொருத்தவரை, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உள்ளூராட்சி அமைப்புகள் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகின்றன.
மற்றொரு பக்கம், தனிநபர்கள் ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பது இந்தியாவின் பல நகரங்களில் பிரச்சனையாகவே நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
மீன் வளம், மிருக நலன், பால்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரான ஓ.பி.சௌத்ரி ஒரு சுற்றறிக்கையை எல்லா மாநில தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், "மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாய் இனங்களை வைத்திருக்கவோ, வளர்க்கவோ, இனப்பெருக்கம் செய்விக்கவோ அனுமதியோ, உரிமமோ அளிக்க வேண்டாம்" எனக் கூறியிருந்தார்.
பல மாநிலங்களிலும் நாய் கடித்ததால் ஏற்பட்ட மரணங்களை அடுத்து இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சுற்றறிக்கையில் பிட்புல் டெர்ரியர், டோஸா இனு, அமெரிக்கன் ஸ்டஃப்போர்ட்ஷயர் டெர்ரியர், டோகோ அர்ஜென்டைனோ, அமெரிக்கன் புல்டாக், ராட்வய்லர் உள்ளிட்ட நாய் ரகங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன.
இதுபோன்ற நாய்களை வைத்திருப்பவர்கள் அவற்றுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சுற்றறிக்கை கூறியது.
ஆனால், இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து சில நாய் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தியாவில் உள்ள இரண்டு உயர் நீதிமன்றங்கள் இதற்குத் தடை விதித்தன. மேற்கு வங்கத்தில் தன்மய் தத்தா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்தியாவில் எந்தச் சட்டம் நாய் வளர்ப்பைத் தடை செய்கிறது என தனது மனுவில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுற்றறிக்கையின் ஒரு பகுதிக்குத் தடை விதித்தது. இந்த நாய்களை இறக்குமதி செய்யவும் விற்கவுமான தடையை ஏற்றுக்கொண்டது.
அதேபோல, மார்ச் 19-ஆம் தேதி ராட்வய்லர் நாயை வளர்க்கும் ஒருவர் இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நாய்கள் தொடர்பான பல தரப்பினரையும் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த முடிவுகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டனவோ, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, இந்த சுற்றறிக்கைக்குத் தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.
நாய் வளர்ப்பதற்கான உரிமம்
சென்னையைப் பொருத்தவரை, வளர்ப்புப் பிராணிகளை வளர்க்க சென்னை மாநகராட்சியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஆன்லைனிலும் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் இந்த உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
இந்த உரிமம், வளர்ப்புப் பிராணிகளின் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியை பதிவு செய்யாமல் இருந்தால், பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வரை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
உயர் ரக நாய்களை வளர்ப்பவர்கள் கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்கின்றனர்.
"கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவைப் பொருத்தவரை, நாய்களின் இனத் தூய்மை குறித்து மட்டுமே பதிவுசெய்கிறோம். ஒரு உயர் ரக நாய் இருந்தால், அதன் தாய்-தந்தை யார் என்பதை ஆராய்ந்து சான்றிதழ் அளிக்கிறோம். நாய்களை வளர்ப்பதற்கான உரிமம் எதையும் நாங்கள் தருவதில்லை," என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த சி.வி.சுதர்ஸன்.
தமிழ்நாட்டில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசு கொள்கை ஒன்றை உருவாக்கிவருகிறது. இந்தக் கொள்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)