கால்பந்து மூலமாக தண்ணீர் பிரச்னையை தீர்க்க முயலும் இளைஞர்கள்
நைரோபியின் கிபெரா பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வீரர்கள், தங்கள் சமூகத்தின் தண்ணீர் மற்றும் சுகாதாரப் பிரச்னையை சமாளிக்க கால்பந்தைப் பயன்படுத்துகிறார்கள்.
முன்னாள் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து வீரரின் உதவியுடன் தங்கள் சமூகத்தை உயர்த்தப் பாடுபடுகிறார்கள் இந்த பள்ளிச் சிறுமிகள் மற்றும் கால்பந்து வீரர்கள். இது சர்வதேச திட்டத்தின் ஒரு பகுதி. மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் மற்றும் ஒரு நீர் தொழில்நுட்ப நிறுவனம் இதை வழிநடத்துகிறது.
“இங்கு மிகப்பெரிய விழிப்புணர்வு உள்ளது. ஒரு பிரச்னையை நோக்கி மக்களின் கவனத்தை திருப்ப கால்பந்திற்கு சக்தி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் முன்னாள் கால்பந்து வீரர் ஜோலியோன் லெஸ்காட்.
“தண்ணீர் சுகாதாரம், சுத்தம் பேணுவது, தண்ணீரை சேமிப்பது எப்படி, அதை சுத்திகரிப்பது எப்படி ஆகியவை தொடர்பான தகவல்களை அவர்களுக்கு அளிக்கிறோம். எங்கள் தினசரி பணிகளின் போது, இதன் சில பயன்களைப் பார்க்கிறோம். நீரை வீணாக்காமல் இருக்க மக்கள் முயற்சிக்கிறார்கள், கிருமிகளை அழிக்க நீரை கொதிக்க வைக்கிறார்கள், தூய்மையான நீருக்காக இதைச் செய்கிறார்கள்.
பல பெண்கள், தாங்கள் சுத்தமாக உணர்வதாக சொல்கிறார்கள். காரணம் அவர்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இளைஞர் தலைவர் பாலின் அக்கினை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



