You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாண்டவர்களுக்கு வெற்றி' - அதிமுக வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி தலைவர்கள் கூறுவது என்ன?
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து இந்த தீர்ப்பு யாருக்கு சாதகம், ஓபிஎஸ் தரப்பினரின் எதிர்காலம் என பல கேள்விகள் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
"அதிமுகவுக்கு ஓபிஎஸ்-க்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது" என மதுரையில் நடந்த திருமண விழாவின் போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
”நேற்றில் இருந்து கலங்கி போய் இருந்தேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை, தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன்,” என அவர் தெரிவித்தார்.
மதுரையில் உள்ள அம்மா கோயிலுக்கு சென்று வழிபட்டேன். எம்.ஜி.ஆர், ஜெயலிலாதாவின் அருளால் நல்ல தீர்ப்பு வேண்டும் என்று கேட்டேன். இந்த தீர்ப்பு சக்தி மிக்க தலைவர்கள் தெய்வங்களாக மாறி கொடுத்த வரப்பிரசாதம். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களை காக்கின்ற தீர்ப்பாக இன்றைய தீர்ப்பு வந்திருக்கிறது என்று கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "அதிமுக இந்த தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறது. இந்த தீர்ப்பு அதிமுகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பின் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக மூன்றாம் தலைமுறை தலைவராக எடப்பாடி பழனிசாமியின் தேர்வு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது."
அதே போல ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நீக்கமும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த தீர்ப்பின் வெளிப்பாடாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில் இனி ஓபிஎஸ்-இன் எதிர்காலம் ஜீரோதான். கௌரவர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் வரலாற்றில் அவர்கள் வெற்றி பெற முடியாது, பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் எப்போதும் இடமில்லை. அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று பேசினார்.
ஓபிஎஸ் தரப்பு என்ன சொல்கிறது?
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசிய போது, "நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது. பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அதனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடுப்போம்."
"மேலும் சிவில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கையும் இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
"உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி வரவேற்கிறோம். இப்போது பொதுக் குழு செல்லும் என்று மட்டும்தான் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது" என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் கட்சித் தலைமை யாருக்கு என்பது குறித்து ஏற்கெனவே சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. அதை சிவில் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தது."
"அதனால் முழு தீர்ப்பையும் படித்த பின்பு கருத்து தெரிவிக்கிறேன்" என்று புகழேந்தி பேசினார்.
"அதிமுக இன்னும் பலவீனம் அடையும்"
"உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை கொடுக்கப்பட்டால் அதிமுக இன்னும் பலவீனமடையும்," என்று அமமுகவின் பொது செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் இருப்பது உண்மையான அதிமுக அல்ல. ஆட்சி அதிகாரத்தாலும், பண பலத்தாலும் அந்த கட்சி நடந்து கொண்டு இருக்கிறது.
வருங்காலத்தில் அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும்.
ஓ.பி.எஸ் தரப்புக்கு வாய்ப்பு இருக்கிறதா?
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அடுத்தகட்டமாக உள்ள வாய்ப்புகள் குறித்து பேசிய பத்திரிகையாளர் கார்த்திகேயன், "உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது," என்றார்.
இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தன்வசமாக்குவது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.
ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையத்தை நாடுவார். தேர்தல் ஆணையத்தின் கோப்புகளில் இப்போது வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருக்கிறது. கட்சி யாருக்கு என்பது குறித்து சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தை நாடி அடுத்த கட்ட நகர்வுகளை எடுப்பார்கள்.
உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவை செல்லும் என அறிவித்த உத்தரவை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தை பார்க்கும் போது பாஜகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பை அங்கீரிப்பதாக தெரிகிறது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வேறு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.
நிலுவையில் உள்ள சிவில் வழக்கின் தீர்ப்பும், சிவசேனா வழக்கின் தீர்ப்பை ஒட்டியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவசேனா வழக்கில் கட்சி நிர்வாகிகளிடம் அதிக ஆதரவை பெற்ற ஏக்னாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வந்தது. இது அதிமுகவுக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்கிறேன்.
கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்து பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இந்த தீர்ப்பு அமையும், என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.
"அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக உறுதிசெய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள். ஆனால் இவ்வாய்ப்பு பாஜகவை சுமக்க பயன்பட்டால் யாவும் பாழே" என டிவிட்டரில் தனது வாழ்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு பாமக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். அந்த வாழ்த்து இப்போதும் செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்