'என் மனைவியையும் குழந்தைகளையும் ஹமாஸ் பிடித்துச் சென்றுவிட்டனர்’

ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) தாக்குதல் நடத்தி சுமார் 100 மக்களைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றிருக்கும் நிலையில், அவர்களில் தங்கள் அன்புக்குரியவர்களும் இருக்கலாம் என்பதை அறிந்து குடும்பங்கள் பெரும் பீதி அடைந்திருக்கின்றனர்.

வெளிநாட்டு பிரஜைகள் உட்பட பல டஜன் மக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

அவர்களின் சில கதைகள் இங்கே.

‘அந்த வீடியோவில் என் குடும்பத்தினர் இருந்தனர்’

யோனி ஆஷர், தனது மனைவியின் கைபேசியை டிராக் செய்ததன் மூலம் அவரது குடும்பத்தினர் காஸாவில் இருப்பதைக் கண்டறிந்தார்.

ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியபோது அவரது மனைவி டோரன் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ராஸ் (5) மற்றும் அவிவ் (3) காசா எல்லைக்கு அருகில் உறவினர்களுடன் தங்கியிருந்தனர்.

யோனி பிபிசியிடம் பேசுகையில், "சனிக்கிழமை, காலை 10:30 மணியளவில், நான் என் மனைவியுடன் கடைசியாகத் தொலைபேசியில் பேசினேன். ஹமாஸ் குழுவினர் வீட்டிற்குள் நுழைந்ததாக அவர் என்னிடம் கூறினார்,” என்றார்.

"அவர்கள் பாதுகாப்பான ஒரு அறையில் இருந்தனர். பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின், நான் அவரது மொபைல் ஃபோன் இருந்த இடத்தை டிராக் செய்தேன். அது காசாவிற்குள் இருந்தது," என்றார்.

அதே நாளின் பிற்பகுதியில் வெளியான ஒரு வீடியோவில், ஹமாஸ் குழுவினர் ஒரு டிரக்கில் ஆட்களை ஏற்றிச் செல்லும் காட்சிகளில், அவரது குடும்பத்தினரும் இருந்ததை அவர் அடையாளம் கண்டபோது, அவர் பயந்த விஷயம் உறுதிப்படுத்தப்பட்டது.

"அந்த வீடியோவில் என் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், எனது இரண்டு குழந்தைகளை நான் அடையாளம் கண்டேன்," என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அவர்கள் எந்த நிபந்தனையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது,” என்றார்.

இப்போதைக்கு, யோனி செய்யக்கூடியது நம்பிக்கையை இழக்காமல் இருப்பது மட்டுமே. "நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். இராஜதந்திரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அல்லது ஏதாவது தொடர்பு இருப்பதாக நான் நம்ப விரும்புகிறேன். ஆனால் எங்களுக்கு எதுவும் தெரியாது, அதுதான் கஷ்டமான விஷயம்," என்கிறார்.

‘அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புகிறோம்’

இடோ டான், சனிக்கிழமை நடந்த பயங்கரமான நிகழ்வுகளை தனது குடும்பத்தின் வாட்ஸப் குழுவில் நேரடியாக அறிந்துகொண்டார்.

"வாட்ஸப் குழுவில் அவள் ‘குட்பை’ மெசேஜ் அனுப்பினாள். அவள் ஒரு இதயத்தின் எமோஜியை அனுப்பினாள். 'ஐ லவ் யூ. நான் இதிலிருந்து தப்பிப் பிழைப்பேனா என்று தெரியவில்லை’ என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்," என்று இடோ கூறுகிறார். அந்த வாட்ஸப் குறுஞ்செய்திகளைத் திரும்பிப் பார்த்தபடி அழுகிறார்.

காசாவிற்கு அடுத்துள்ள ஒரு சிறு காலனியான ‘நிர் ஓஸ்’ அனும் பகுதியில் வசிக்கும் அவரது அத்தை மகள் ஹடாஸ், விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்தபடி, அங்கு நடப்பவற்றைத் தனது குடும்பத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

ராக்கெட் அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததும் அவர் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார். அதிகாலையில், துப்பாக்கி ஏந்திய நபர்கள் அரபி மொழியில் சத்தம் போடுவது கேட்பதாகச் சொல்லியிருந்தார்.

‘இங்கே நடப்பவற்றைப் பார்த்தால் பயமாக இருக்கிறது,’ என்று அவர் குடும்ப வாட்ஸப் குழுவில் கூறினார். “அவர்கள் அனைவரையும் கொல்வதாக அவள் கூறினாள்,” என்று இடோ கூறுகிறார். "பின்னர் 09:00 மணிக்கு அவளது இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவளுடைய கைப்பேசியின் பேட்டரி தீர்ந்துவிட்டது," என்றார்.

அந்தத் தாக்குதலின்போது, தனது மறைவிடத்தில் ஒளிந்துகொண்டு ஹடாஸ் உயிர்தப்பினார். ஆனால், அன்றிரவு அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதை அறிந்தார். அவரது இரண்டு குழந்தைகள், அவரது முன்னாள் கணவர், அவரது சகோதரியின் மகள், மற்றும் அவரது 80 வயது தாயார்.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், ஹடாஸின் 12 வயது மகன் எரெஸ், துப்பாக்கி ஏந்தியவர்களால் காசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதுபோன்ற காட்சிகளைக் கொண்டிருந்தது.

டெல் அவிவ் அருகே வசிக்கும் இடோ, "அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறோம்,” என்கிறார். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருக்கிறார். "என் அத்தையின் மருந்துகள் தீர்ந்துவிட்டன. குழந்தைகள் எப்படிக் கழிவறைக்குச் செல்கிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது," என்கிறார்.

இடோ தனது குடும்பத்தினர் பற்றிய தகவலைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு இஸ்ரேலிய அதிகாரிகளால் பெரிதாக உதவமுடியவில்லை. "நான் யாரையும் குறை கூறவில்லை, ஏனெனில் இது உண்மையில் ஒரு சிக்கலான சூழ்நிலை" என்கிறார் இடோ.

இடோ ஹமாஸுக்கு ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறார்: "குழந்தைகளையும், வயதானவர்களையும் விடுவியுங்கள். இந்த மோதல் அவர்களுக்கானது அல்ல. போரில்கூட விதிகளும் நெறிமுறைகளும் உள்ளன." 

‘ஒரு திகில் படம் போல இருந்தது'

காசாவின் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள தனது 74 வயதான தனது தாயாரின் அடா சாகியின் வீட்டிற்கு முன்பாக இருந்து பாலத்தீனிய ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பத் தொடங்கியபோது தனது இதயம் நொறுங்கிப் போனதாகக் கூறினார் நோம் சாகி.

சனிக்கிழமை பிற்பகல், இஸ்ரேலிய ராணுவம் அடா சாகியின் வீட்டுக்குள் நுழைந்த போது ரத்தக் கறைகளைக் கண்டது. ஆனால் அந்த வயதான பெண் அங்கு இல்லை என்று அவர் கூறுகிறார்.

பிபிசி ரேடியோ 4-இடம் லண்டனில் வசிக்கும் சாகி பேசினார். கடத்தப்பட்டவர்களில் அரபு மொழி கற்பிக்கும் அவரது தாயும் ஒருவர் என்பது அவரது அனுமானம் என்றார்.

“74 வயதான என் தாயார் ஒரு பாதுகாப்பான அறைக்குள் சென்றார். இப்போது, அவர் அங்கு இல்லை," என்றார் அவர்.

"இறந்தவர்களின் பட்டியலில் அவர் இல்லை, காயமடைந்தவர்களின் பட்டியலிலும் இல்லை. அது ஒரு சிறிய சமூகம். அதிகபட்சம் 350 பேர் தான். அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்கிறார் அவர்.

முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன. சாகியின் கூற்றுப்படி, அவரது தாயார் எங்கிருக்கிறார் என்பது குறித்து முறையான அல்லது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.

"இது ஒரு திகில் படம் போல இருக்கிறது," என்கிறார் சாகி. மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் தனது தாயை நினத்துக் கவலைப்படுவதாக அவர் கூறுகிறார்.

தனது தாயை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையோடு இருக்கும் சாகி, அவரது 75-ஆவது பிறந்த நாளுக்காக அடுத்த வாரம் லண்டனில் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறினார்.

'இப்போது அங்கு எதுவும் மிச்சமில்லை'

லண்டனில் வசிக்கும் ஷரோன் லிஃப்ஷிட்ஸ், தனது வயதான பெற்றோர் காசாவிற்கு அருகில் உள்ள அடா சாகி வசித்த அதே பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறுகிறார்.

ஹமாஸ் குழுவினர் மக்களை பயமுறுத்துவதற்காக வீடுகளை எரித்ததாகவும் அவர் கூறுகிறார். “மக்கள் ஒரு பாதுகாப்பான அறையில் தஞ்சம் அடைய முயன்றனர்,” என்கிறார்.

"அந்த இடம் மொத்தமாக அழிந்து போயிருக்கிறது. எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை," என்கிறார்.

அடா சாகியைப் போலவே, லிஃப்ஷிட்ஸின் தந்தையும் அரபு மொழி பேசுபவர். தனது ஓய்வு நேரத்தில், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீனியர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்.

"அவர் மனிதநேயத்தை நம்பினார். எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதை நம்பினார்," என்கிறார்.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பிளவு இருப்பதை உறுதிப்படுத்த ‘நிறைய சக்திகள்’ முயற்சிப்பதாகவும், மற்றவரும் மனிதர்கள் தான் என்பதை இரு தரப்பினரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் லிஃப்ஷிட்ஸ் கூறுகிறார்.

‘வீடியோவில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருந்தார்’

ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷானி லூக், காசா எல்லைக்கு அருகே நடந்த இசைத் திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது ஹமாஸ் போராளிகள் அப்பகுதியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பயந்த மக்கள் பாலைவனத்தின் வழியாக ஓடினர்.

ஷானி சிறைபிடிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்த்ததாக அவரது தாயார் ரிக்கார்டா கூறுகிறார்.

"எங்களுக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டது. அதில் பாலத்தீனர்களுடன் ஒரு காரில் எங்கள் மகள் சுயநினைவின்றி இருப்பதையும், அந்தல் கார் காசா பகுதியில் பயணம் செய்வதையும் நான் பார்த்தேன்," என்று அவர் கூறினார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பலர், ஹமாஸ் போராளிகளால் தாக்கப்பட்ட காசா எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் பணிபுரியும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

தாய்லாந்தின் 11 குடிமக்களைக் காணவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)