மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம் - அறிவியல் உலகில் புதிய சாதனை

பட மூலாதாரம், 20TH CENTURY STUDIOS
அவதார் போன்ற திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக பயன்படுத்தபட்ட மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைக் (Motion Capture Technology) கொண்டு மனித உடல்களின் இயக்கத்தைப் பாதிக்கும் நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளையும் உதவிகளையும் நம்மால் மேற்கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில் தற்போது மனித உடல்களில் உள்ள அசைவுகளைக் கண்காணிப்பதற்காக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
லண்டனை சேர்ந்த வல்லுநர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டபோது, "மரபணு சார்ந்த இரண்டு தீவிரமான கோளாறுகளைக் கண்டறிவதற்குச் சிறந்த மருத்துவர்கள் எவ்வளவு நேரம் எடுத்து கொள்வார்களோ அதைவிட இரண்டு மடங்கு விரைவான நேரத்திலேயே இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிய முடிகிறது" எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, "நேரத்தைப் பாதியாகக் குறைப்பதோடு மட்டுமன்றி மருத்துவ சோதனைகளின்போது ஏற்படும் செலவுகளையும் வெகுவாகக் குறைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது" என்று குறிப்பிடுகின்றனர்.
‘நேச்சர் மெடிசன்` (Nature Medicine) என்ற மருத்துவ ஆய்விதழில் இந்த ஆராய்ச்சி குறித்த தகவலகள் வெளியாகியுள்ளன.
கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் இன்ஸ்டிடியூட் ஃபார் சைல்டு ஹெல்த்தை (Great Ormond Street Institute for Child Health ) சேர்ந்த மருத்துவர் வலேரியா ரிகோடி பிபிசியிடம் கூறும்போது, "இந்த ஆராய்ச்சியின் முடிவுகளால் தான் அசந்துபோய்விட்டதாக" தெரிவித்துள்ளார்.
புதிய நோய்களைக் கண்டறிவதிலும், பல்வேறு விதமான மருந்துகளை ஆராய்ச்சி செய்வதிலும் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி செய்த பல்வேறு ஆராய்ச்சியாளர்களில் ரிகோடியும் ஒருவர். கிட்டதட்ட 10 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், GREAT ORMAND STREET HOSPITAL
ஃப்ரெட்ரீச்சின் அட்டாக்ஸியா ( Friedreich's ataxia - FA) என்னும் நரம்பியல் நோயாலும் டுச்சேன் தசைநார் சிதைவு (Duchenne Muscular Dystrophy- DMD) எனப்படும் மரபியல் நோயாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் தனித்தனியே இதுகுறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தச் சோதனைகளின்போது இதயம், நரம்பியல் மண்டலம், மூளை, தசைகள், எலும்புகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் போன்ற மற்ற பாதிப்புகளில் இருந்தும் அவர்கள் மீண்டு வருவதை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் தங்களால் கணிக்க முடிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவதார் போன்ற திரைப்படங்களில் ஏலியன் உருவகங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர்களின் அசைவுகள் பயன்படுத்தபடுகின்றன.
அதேபோல் மருத்துவ உலகில் இது நோயாளிகளின் உடலுக்குள் இருக்கும் நோய்களின் மாற்றங்களைக் கண்காணிப்பதற்கு உதவுகிறது.
சில நோய்களுடைய தீவிரத்தையும் அது தொடர்ச்சியாக அதிகரிக்கும் வீரியத்தையும் கண்டறிவதற்கு மருத்துவ உலகம் எத்தனையோ ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தொழில்நுட்பம் அதை எளிதாக்கி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவத்துறையில் இந்தத் தொழில்நுட்பத்தை உபயோகிக்கலாம் என்று யோசித்த மருத்துவர்களில் பேராசியர் அல்டோ ஃபைசல் என்பவரும் ஒருவர். தற்போது இந்தச் சோதனை முறையில் வியத்தகு மாற்றங்கள் நடந்திருப்பதாக அவர் கூறுகிறார். சில நேரங்களில் நோயாளிகளின் உடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை மனிதர்களால் கணிக்க முடியாது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் அதைச் சரியாகக் கண்டுபிடித்து விடுகிறது என்கிறார் அல்டோ ஃபைசல்.

பட மூலாதாரம், THMOAS ANGUS/IMPERIAL COLLEGE
ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்களில் 50,000 பேர்களில் ஒருவருக்கு ஃப்ரெட்ரீச்சின் அட்டாக்ஸியா ( FA) என்னும் நரம்பியல் நோய் ஏற்படுகிறது. அதேபோல் 20,000 குழந்தைகளில் ஒருவருக்கு டுச்சேன் தசைநார் சிதைவு நோய் (DMD) ஏற்படுகிறது. ஆனால் இந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கு இதுவரை எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
லண்டனை சேர்ந்த இம்பிரியல் காலேஜ் மருத்துவர்கள் ஃப்ரெட்ரீச்சின் அட்டாக்ஸியா (FA) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியபோது அவர்களின் உடலில் அடுத்த பன்னிரண்டு மாதங்களில் அந்த நோய் ஏற்படுத்தவிருக்கும் தீவிரத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததாகக் கூறுகின்றனர்.
மருத்துவ நிபுணர்கள் நோய்களின் தீவிரத்தைக் கண்டறிய எடுத்துகொள்ளும் நேரத்தைவிட பாதியளவே இந்தத் தொழில்நுட்பம் எடுத்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
அதேபோல் DMD நோயால் பாதிக்கப்பட்ட 21 நோயாளிகளிடம் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தபட்டபோது அவர்களுக்கு அடுத்த 6 மாத காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகளை மிகவும் நுட்பமாகக் கணிப்பதற்கு இத்தொழில்நுட்பம் உதவியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பத்தின் கணிப்பு மருத்துவர்களின் கணிப்பை விட மிகத் தெளிவாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் புதிய தொழில்நுட்ப முறை இனி வரும் காலங்களில் மருத்துவ சோதனைகளை விரைந்து மேற்கொள்வதற்கும் அதற்கான செலவுகளை வெகுவாகக் குறைப்பதற்கும் உதவியாக இருக்குமென நம்பப்படுகிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டண் மருத்துவமனையில் உள்ள அடாக்ஸியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பவோலா கியுண்டி பிபிசியிடம் பேசும்போது, "குறைந்த செலவில் குறைந்த அளவிலான நோயாளிகளைக் கொண்டு இனி நாம் அதிகமான மருந்துகளை சோதனை செய்ய முடியும்" எனக் கூறியுள்ளார்.
டுச்சேன் தசைநார் சிதைவு நோய் (DMD) ஆராய்ச்சியை பொறுத்தவரையில் ஒரு மருந்தை 100 நோயாளிகளிடம் செலுத்தி 18 மாத காலத்தில் மேற்கொள்ளப்படும் சோதனையை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் 15 நோயாளிகளைப் பயன்படுத்தி வெறும் 6 மாத காலத்தில் செய்து முடிக்க முடியும் என அதன் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் 6000 வகையான அரிய மரபணு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 17 நபர்களில் ஒருவருக்கு இத்தகைய நோய்கள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மொத்தமாகக் கணக்கெடுத்தால் சில நூறுகளில் மட்டுமே இத்தகைய அரிய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருக்கும். இந்த நிலையில் இந்த நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட பிரிட்டனின் மருந்து நிறுவனங்களுக்கு இத்தொழில்நுட்பம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

பட மூலாதாரம், THOMAS ANGUS/IMPERIAL COLLEGE
மருத்துவ உலகின் புதிய மைல்கல்
லண்டன் மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசியர் ரிச்சர்ட் ஃபெச்டென்ச்டீன் பிபிசியிடம் கூறும்போது, "மருந்து கண்டுபிடிப்புத் துறையில் நிலவி வரும் பொருளாதார சூழலையே மாற்றுவதற்கான சக்தி இந்தத் தொழில்நுட்பத்திற்கு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
அரிய நோய்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மருந்து நிறுவனங்களை முதலீடு செய்ய வைப்பதில் இந்தத் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கப் போகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நோயாளிகளுக்கு மிகப்பெரும் அளவில் பலன் கிடைக்கும் எனவும் விரைவிலேயே பல்வேறு நோய்களுக்கான புதிய சிகிச்சை முறைகளை இந்தத் தொழில்நுட்பம் கொண்டு வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஃப்ரெட்ரீச்சின் அட்டாக்ஸியா ( FA) மற்றும் டுச்சேன் தசைநார் சிதைவு (DMD) ஆகிய நோய்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்துகளை பரிசோதனை செய்வதற்கு அனுமதியளிக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் விண்ணபித்துள்ளனர்.
அது வெற்றிபெறும்பட்சத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது நடைமுறைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது. அதேபோல் பார்கின்சன்ஸ் (Parkinson) எனப்படும் நரம்பியல் பாதிப்பு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple Sclerosis) எனப்படும் மூளை பாதிப்பு மற்றும் அல்சைமர் போன்ற நோய்களையும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி செய்வதற்கு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












