தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமாந ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்பட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடையாறில் உள்ள வீடு, தியாகராய நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல், ஆழ்வார்கள் ஆய்வு மையம், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை, ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள ஒரு இடம், ஜெகத்ரட்சகனுக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2020ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக புகார் எழுந்ததால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் வெளிநாட்டில் சட்ட விரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

வருமான வரிச் சோதனையின் பின்னணி என்ன?

2019ஆம் ஆண்டில் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 3.85 பில்லியன் டாலர்களை முதலீடு செய்த சிங்கப்பூர் நிறுவனத்தில், ஜெகத்ரட்சகனுக்கு நெருங்கிய உறவினர்கள் பெருமளவு பங்குகளை வைத்திருந்ததாக செய்திகள் வெளியாயின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பாக, 2012ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெகத்ரட்சகன் இயக்குநராக இருந்த நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஜெகத்ரட்சகன் மறுத்தார்.

விழுப்புரம் மாவட்டம் கலிங்கமலையில் பிறந்த ஜெகத்ரட்சகன், 1980களில் இருந்தே தீவிர அரசியலில் இருந்துவருகிறார். 1980ல் உத்திரமேரூரில் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1984ல் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 1999ல் தி.மு.கவின் சார்பில் மக்களவைக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதற்குப் பிறகு 2004ல் வீர வன்னியர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, அதனை ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியாக மாற்றினார். இந்தக் கட்சி 2009ல் தி.மு.கவுடன் இணைந்தது.

அப்போது நடந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராகவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2019ல் மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள் தவிர, சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோதனைகள் நடந்துவருகின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)