ஒரு புதிய இடத்திற்கு செல்லும் போது பயணம் நீண்டதாகவும், திரும்புகையில் குறுகியதாகவும் தோன்றுவது ஏன்?

அறிவியல் செய்திகள், பயணம், நீண்ட பயணம், நெடுநேர பயணம்,
    • எழுதியவர், லக்கோஜோ ஶ்ரீநிவாஸ்

"நான் அலுவலக பணிக்காக எங்காவது செல்லும் போது, அந்த பயணம் நீண்டதாக இருக்கும். ஆனால் அந்த பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது, மிகவும் விரைவாக வீடு திரும்புவது போலத் தோன்றும். திரும்பி வரும் பயணமானது மிகவும் சௌகரியமானதாகவும் இருக்கும்," என்றார் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஶ்ரீ லட்சுமி தேவல்லா.

நீங்கள் எங்காவது செல்லும் போது, நீங்கள் நீண்ட தூரத்தை பயணித்து கடந்தது போலத் தோன்றும். ஆனால் திரும்பி வரும் போது விரைவாக திரும்பியது போல் இருக்கும். இந்த தாக்கத்திற்கு 'ரிட்டர்ன் ட்ரிப் எஃபெக்ட்' (return trip effect) என்று பெயர்.

நம்முடைய மூளையும் மனதும் ஒரு பயணத்தை எப்படி அணுகுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த உணர்வு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

"புது இடங்களுக்குச் செல்லும் போது இத்தகைய உணர்வானது மிகவும் வெளிப்படையாக இருக்கும். நமக்கு நன்கு பரிச்சயமான இடங்களான அலுவலங்களுக்கு செல்லும் போதும் கூட இத்தகைய உணர்வு ஏற்படும். நாம் தினமும் செல்லும் இடம் என்பதால் அதிக கவனம் செலுத்தியிருக்க மாட்டோம்," என்று கூறுகிறார் அப்பாஜி ராய். அவர் அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இது ஒன்றும் கற்பனை அல்ல

ஶ்ரீ லட்சுமி விசாகப்பட்டினத்தில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வேலையின் ஒரு பகுதியாக அவர் தினமும் பல இடங்களுக்கு பயணிக்கிறார்.

'ரிட்டர்ன் ட்ரிப் எஃபெக்ட்' பற்றிப் பேசும் போது, "நான் வேலைக்குக் கிளம்பும் போது நீண்ட நேரம் ஆவதைப் போன்று இருக்கிறது. திரும்பி வரும் போது சௌகரியமாகவும், விரைவில் திரும்பியது போன்றும் இருக்கும்," என்று கூறுகிறார்.

இது அவர் மட்டும் உணர்வதில்லை. நான் இந்த கட்டுரையை எழுதும் போது எனக்கும், பயணம் மேற்கொள்ளும் பலருக்கும் தோன்றும் உணர்வாகும்.

நரம்பியல் மருத்துவர்கள், "இத்தகைய உணர்ச்சி எழுவது ஒன்றும் கற்பனையானது அல்ல, இது மூளையில் நடைபெறும் செயல்பாடுகளின் விளைவாகும்" என்று கூறுகின்றனர்.

விசாகப்பட்டினத்தில் அமைந்திருக்கும் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் மனநலப்பிரிவில் பேராசிரியராக இருக்கும் எம்.வி.ஆர். ராஜூ பிபிசியிடம் இது குறித்து பேசினார்.

அப்போது, "நாம் எங்காவது செல்லும் போது, அந்த இடம் புதிதாக இருப்பதால் நம்மைச் சுற்றி நடப்பவற்றை அதிகம் கவனிப்போம். அதனை நினைவில் வைக்க விரும்புவோம். புதிய விசயங்களை உள்வாங்குவோம். அதனால் தான் இது நீண்ட நேரம் பயணித்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் திரும்பி வரும் போது அத்தகைய உணர்வு ஏற்படாது. ஏனென்றால் நாம் திரும்பி வரும் போது நமக்கு வழி தெரியும். அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்," என்று கூறுகிறார்.

அறிவியல் செய்திகள், பயணம், நீண்ட பயணம், நெடுநேர பயணம்,
படக்குறிப்பு, நரம்பியல் மருத்துவர் ராஜேஷ் வெங்கட் இந்தலா

விசாகப்பட்டினத்தில் பணியாற்றும் நரம்பியல் மருத்துவர் ராஜேஷ் வெங்கட் இந்தலாவும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு விளக்கத்தை 'ரிட்டர்ன் ட்ரிப்' தாக்கத்திற்கு பதிலாக தருகிறார்.

"நாம் பயணிக்கும் போது, நம்முடைய மூளை புதிய விசயங்களை பார்க்கிறது. புதிய நினைவுகளை உருவாக்குகிறது. ஆனால் திரும்பி வரும் பயணத்தின் போது, ஏற்கனவே அனைத்தையும் பார்த்து பழகிவிட்ட காரணத்தால் மூளைக்கான வேலை குறைந்து போகும். அதனால் தான் திரும்பி வரும் பயணமானது சௌகரியமானதாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

எங்காவது செல்லும் போது, அதில் நிறைய சுவாரஸ்யங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். ஆனால் திரும்பி வரும் பயணத்தின் போது அத்தகைய அம்சங்கள் ஏதும் இருக்காது.

"மகிழ்ச்சியை ஏற்படுத்தும் டோபமைன் அளவானது அப்போது மூளையில் அதிகரிக்கும். அதனால் தான் திரும்பி வரும் பயணமானது, நாம் குறுக்கு வழியில் திரும்பி வந்தது போன்று, குறைவான நேரத்தில் முடிந்ததைப் போன்று தோன்றும்," என்று கூறுகிறார் மருத்துவர் அப்பாஜி ராய்.

அறிவியல் செய்திகள், பயணம், நீண்ட பயணம், நெடுநேர பயணம்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு இடத்திற்கு பயணிக்கும் போது அது ஏன் நெடுநேரம் பயணிக்கும் உணர்வைத் தருகிறது?

'ரிட்டர்ன் ட்ரிப்' தாக்கத்தின் மீது நடத்தப்படும் ஆராய்ச்சி

டச்சு ஆராய்ச்சியாளர்களான என். வான் டே வென், எஸ். ரிஜ்ஸ்விஜ்க், மற்றும் பி. ராய், அறிவாற்றல் தொடர்பான ஆராய்ச்சி ஒன்றை 2011-ஆம் ஆண்டு நடத்தினார்கள். ஒன்றை பார்ப்பதன் மூலம் நினைவில் வைத்துக் கொள்வது தொடர்பான அந்த ஆராய்ச்சி, 'ரிட்டர்ன் ட்ரிப் தாக்கத்தை' அறிய நடத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் ஒரு அங்கமாக, சிலரை பேருந்திலும், சைக்கிளிலும் அழைத்துச் சென்றனர். ஒரு சிலர் நடைபயணம் மேற்கொண்டனர். ஆராய்ச்சியின் முடிவில், இதில் பங்கேற்ற அனைவரும் ஏறக்குறைய திரும்பி வரும் பயணமானது குறுகிய காலமே எடுத்துக் கொண்டதாக உணர்ந்துள்ளனர்.

புதிய இடத்திற்கு பயணிக்கும் போது புதிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், சுற்றிலும் நடக்கும் நிகழ்வு போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டு நினைவில் வைத்துக் கொள்ள மூளை அதிகப்படியான செயல்பாட்டை உணர்கிறது. பிறகு இந்த பகுதி வழக்கமான ஒன்றாக மாறும் போது, திரும்பி வரும் பயணமானது மூளையின் செயல்பாட்டுப் பளுவைக் குறைக்கிறது.

இருப்பினும் இது தொடர்பாக புதிய கோட்பாடு ஒன்று 2023-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, ரிட்டர்ன் ட்ரிப் தாக்கமானது நரம்பியல், மன நலம் ஆகியவற்றை மட்டும் சார்ந்ததல்ல. அது உடல் திறன் சார்ந்ததும் கூட என்பது தான் அந்த கோட்பாடு.

தி சர்ச் ஃபார் எ ஃபிசிக்கல் அஸ்பெக்ட் இன் தி ரிட்டர்ன் டிரிப் எஃபெக்ட் (The Search for a Physical Aspect in the Return Trip Effect) என்று தலைப்பிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றில் ஆராய்ச்சியாளர் கோஸிர்கோ, நாம் புறப்படும் இடத்தில் இருந்து நம் உடல் மின்காந்த இணைப்பு ஒன்றை உருவாக்குகிறது என்று கூறுகிறார்.

இந்த சூழலில், பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் போது தூரம் அதிகமாக தெரியலாம். திரும்பி வரும் போது, ஏற்கனவே நன்கு பழகிய சூழலுக்குள் திரும்பி வருவதால் தூரம் குறைவாக இருப்பது போன்று தோன்றும்.

"நான் விசாகப்பட்டினத்தில் இருந்து என்னுடைய சொந்த ஊரான பத்ராச்சலத்திற்கு செல்லும் போது நீண்ட தூரமாக இருப்பது போன்று தோன்றும். ஆனால் விசாகப்பட்டினம் திரும்பி வரும் போது அந்த பயணம் விரைவில் முடிந்துவிடுவதைப் போன்று இருக்கும்" என்று ஶ்ரீ லட்சுமி கூறுகிறார்.

இது பயண அனுபவம் மட்டுமல்ல. இது நம் மூளையின் மதிப்பாய்வு, நாம் நேரத்தை எப்படியாக அணுகுகிறோம், நம்முடைய மனநிலை, நரம்பு மண்டலத்தில் உள்ள ரசாயனங்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த ரிட்டர்ன் ட்ரிப் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அறிவியல் செய்திகள், பயணம், நீண்ட பயணம், நெடுநேர பயணம்,
படக்குறிப்பு, மருத்துவர் அப்பாஜி ராய்

நரம்பியல் இரசாயனங்களின் தாக்கம்

மூளையில் செயல்படும் நரம்பியல் இரசாயனங்களின் தாக்கமும் இந்த 'ரிட்டர்ன் ட்ரிப்' தாக்கத்திற்கு காரணமாக அமையும்.

"நாம் புது இடத்திற்கு பயணிக்கும் போது, புதியதைக் கற்றுக் கொள்ளும் போது, டோபமைன் என்ற ரசாயனம் மூளையில் உற்பத்தியாகிறது. நாம் ஒரு செயலை விரைவில் முடித்தாலோ அல்லது ஒரு வெற்றியை அடைந்தாலோ இந்த அளவு அதிகரிக்கிறது. இப்படியான டோபமைன் அதிகமாக சுரக்கும் சூழலின் போது பயணங்கள் குறைவான நேரத்தை எடுத்துக் கொள்வதைப் போன்று தோன்றும்," என்று கூறுகிறார் மருத்துவர் அப்பாஜி ராய்.

அதே நேரத்தில் டோபமைனின் அளவு குறைவாக இருக்கும் போது, எவ்வளவு நேரம் பயணித்திருந்தாலும் நாம் இன்னும் திரும்பவில்லை என்ற உணர்வே ஏற்படும் என்று மருத்துவர் ராஜேஷ் வெங்கட் இந்தலா கூறுகிறார். மூளையில் உள்ள ஹார்மோன்களின் அளவு மற்றும் நாம் பார்க்கும் பணி ஆகியவையும் 'ரிட்டர்ன் ட்ரிப்' தாக்கத்தை பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.

"நமக்கு விருப்பமான நண்பர்களின் வீட்டிற்கோ, உறவினர்களின் வீட்டிற்கோ, அல்லது விருப்பமான இடத்திற்குச் செல்லும் போதோ, எவ்வளவு தூரம் பயணிக்கின்றோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளமாட்டோம். டோபமைனின் தாக்கமே இதற்கு காரணம்," என்று மருத்துவர் ராஜேஷ் வெங்கட் கூறுகிறார்.

மன அழுத்தம் போன்றவையும் நம்முடைய பயணங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அப்பாஜி ராய்.

"பேருந்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால், மன அழுத்தத்திற்கு ஆளாகி கார்டிசால் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். அதேநேரத்தில் செரோடோனின் சரியான அளவு சுரக்கவில்லை என்றால், தூக்கமின்மை மற்றும் மன உளைச்சலுக்கு வழிவகை செய்யும்," என்றும் அவர் தெரிவிக்கிறார்.

"கார்டிசால் மற்றும் செரோடோனின் போன்ற ரசாயனங்கள் நம்முடைய பயணங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் நம்முடைய ரிட்டர்ன் ட்ரிப் தாக்கத்தை பாதிக்கின்றன," என்றும் அவர் விளக்குகிறார்.

முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள், அறிவியல் செய்திகள், பயணம், நீண்ட பயணம், நெடுநேர பயணம்,
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு நாள் பயணத்தின் போதும் இந்த ரிட்டர்ன் ட்ரிப் தாக்கத்தை உணர முடியுமா?

பொதுவாக இந்த தாக்கத்தை புது இடங்களுக்கு செல்லும் போது மட்டுமே உணர்வோம். ஆனால் மருத்துவர் அப்பாஜி, நாம் வழக்கமாக செல்லும் பயணங்களிலும் இதை உணர முடியும் என்று கூறுகிறார். இதனை ஆமோதிக்கிறார் பேராசியர் எம்.வி.ஆர். ராஜு.

"நாம் தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் போது ஒரு பதற்றம் இருக்கும். அதாவது, சரியான நேரத்திற்குச் செல்வோமா? போக்குவரத்து நெரிசல் இருக்குமா? இன்று என்ன நடக்கிறது? என்று பல எண்ணங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் நாம் வீட்டிற்குத் திரும்பும் போது அத்தகைய பதற்றம் நமக்கு இருக்காது. வீடு திரும்பும் போது குறைவான பிரச்னைகளும் எண்ணங்களும் மட்டுமே மனதில் இருக்கும். அதனால் குறைவான நேரத்தில் வீடு வந்து சேர்ந்ததைப் போன்று உணர்வோம்," என்று கூறுகிறார் ராஜு.

"நாம் அலுவலகத்திற்குச் செல்லும் போது எவ்வளவு நேரத்தில் செல்வோம் என்பதையெல்லாம் மனக்கணக்கு செய்வோம். ஆனால் வீடு திரும்பும் போது, விரைவாக வீடு சென்றால் போதும் என்று நினைப்போம். அப்போது நம் மனம் இத்தகைய கணக்கையெல்லாம் செய்யாது," என்று அவர் கூறுகிறார்.

"இந்த ரிட்டர்ன் ட்ரிப் தாக்கமானது சிலருக்கு அவர்களின் பயணத்தின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். சிலர் இந்த தாக்கத்தை மிக விரைவாக உணர்வார்கள். அதாவது எந்த நேரத்திற்கு திரும்புவோம் என்று அவர்கள் திட்டமிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், பயணத்தின் மீது அவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்காது," என்று அப்பாஜி விளக்குகிறார்.

நம்முடைய மூளையில் நடைபெறும் செயல்பாடுகளின் விளைவுகளே இந்த ரிட்டர்ன் ட்ரிப் எஃபெக்ட். உண்மையில் நாம் பயணிக்கும் தூரம் குறையவோ அதிகரிக்கவோ செய்யாது. நேரமும், தூரமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.

"மற்றபடி, நம்முடைய மூளை செயல்படும் விதமே நாம் விரைவாக வீடு திரும்பிவிட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது," என்று மருத்துவர் இந்தலா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு