ராஜஸ்தானை வென்று மூன்றாவது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேற்றம் - ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன?

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் பாதையை விசாலமாக்கியுள்ளது. ஆனால், ப்ளே ஆஃப் சுற்றை இன்னும் உறுதி செய்யவில்லை என்பதால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு டென்ஷன் நீடிக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மந்தமான ஆட்டம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கமாக அதிரடியாகத் தொடங்கக்கூடிய இருவரும் நிதானமாக ஆடினர். தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள்தான் எடுத்தனர். தீக்சனா வீசிய 2வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் ராஜஸ்தான் பேட்டர்கள் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில்தான் பட்லர் முதல் பவுண்டரியை அடித்தார். தீக்சனா வீசிய 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரி என 13ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஷர்துல் வீசிய 5வது ஓவரில் ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து 9 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் மட்டுமே சேர்த்து. இந்த ஐபிஎல் சீசனில் விக்கெட் இழப்பின்றி ஒரு அணி பவர்ப்ளேயில் சேர்த்த குறைந்த ஸ்கோராகும்.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவு

7வது ஓவரை வீசி சிமர்ஜீத் சிங் அழைக்கப்பட்டார். அவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்தநிலையில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த சாம்ஸன், பட்லருடன் இணை சேர்ந்தார். ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் பட்லர், சாம்ஸன் இருவரும் ரன்சேர்க்கத் தடுமாறினர்.

8-வது ஓவரை மீண்டும் சிமர்ஜீத் சிங் வீசினார். அப்போது ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்ற பட்லர் 21ரன்களில் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் வந்தவுடனே சிக்ஸர் விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆடுகளத்தில் பேட்டர்களை நோக்கி பந்து வருவது மெதுவாக இருந்ததால், ரன் சேர்க்க ராஜஸ்தான் பேட்டர்கள் திணறினர். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஜடேஜா வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் ஸ்விட்ச் ஹிட் ஷாட் அடிக்க டீப் கவர் திசையில் நின்றிருந்த தேஷ்பாண்டே அந்த கேட்சை தவறவிட்டார். சாம்ஸன், ரியான் பராக் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க சிரமப்பட்டு, ஒரு ரன், இரு ரன்களாகவே சேர்த்தனர். இதனால் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வீதமே சேர்க்க முடிந்தது.

15-வது ஓவரை சிமர்ஜீத் சிங் வீசினார். ரன் சேர்க்க ஏற்கெனவே சாம்ஸன் தடுமாறி வந்தார். அவர் நினைத்தபடி எந்த ஷாட்களையும் அடிக்க முடியாததால் விரக்தியில் இருந்தார். சிமர்ஜித் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தை சாம்ஸன் தூக்கி அடிக்க முற்பட்டு, மிட்ஆஃப் திசையில் கெய்க்வாட்டிடம் கேட்சானது. சாம்ஸன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணி ரன் சேர்க்க திணறல்

அடுத்து ஜூரெல் களமிறங்கி, பராக்குடன் சேர்ந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் ஜூரெல் டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர் பறக்கவிட ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கடந்தது. சிமர்ஜீத் வீசிய 17-வது ஓவரில் ஜுரெல், பராக் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.

கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். அவுட்சைட் ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை ஜூரெல் தூக்கி அடிக்க ஷர்துல் தாக்கூரிடம் கேட்சானது. ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் துபே, வந்த வேகத்தில் ஸ்லோவர் பாலை அடித்து ஷிவம் துபேயிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டாகினார். அந்த ஓவரில் ரியான் பராக் சிக்ஸர் அடித்து 10 ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 141ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 47 ரன்களுடனும், அஸ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

சிஎஸ்கே தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இவர்கள் தவிர ஜடேஜா, தீக்சனா இருவரும் நடுப்பகுதி ஓவர்களிலும், தொடக்கத்திலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ராஜஸ்தான் ரன்ரேட்டை உயர விடாமல் பார்த்து கொண்டனர்.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே அணி அதிரடி தொடக்கம்

142 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணியின் ரவீந்திரா, கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. சந்தீப் சர்மா வீசிய 2வது ஓவரில் ரவீந்திரா ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்த்தனர். போல்ட் வீசிய 3வது ஓவரில் ரவீந்திரா சிக்ஸர், பவுண்டரி என 12 ரன்கள் சேர்த்தார்.

சிஎஸ்கேவின் தொடக்க ஜோடியில் இடதுகை பேட்டர் இருப்பதால் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அஸ்வின் வீசிய ஓவரில் 4வது பந்தை ரச்சின் ரவீந்திரா தூக்கி அடிக்க அஸ்வினிடமே கேட்சானது. ரவீந்திரா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டேரல் மிட்ஷெல் களமிறங்கினார்.

சந்தீப் சர்மா வீசிய 5வது ஓவரில் மிட்ஷெல் இரு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் வீசிய 6-வது ஓவரிலும் மிட்ஷெல் 2 பவுண்டரிகளை விளாசி சிஎஸ்கே ரன்ரேட்டை உயர்த்தினார். பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிக்கனம்

7வது ஓவரை ஆந்த்ரே பர்கர் வீசினார், இந்த ஓவரில் பவுன்சராக வீசப்பட்ட பந்தை கெய்க்வாட் சிக்ஸர் விளாச 10 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் மாற்றம் செய்து சஹல் அழைக்கப்பட்டார். சஹல் வீசிய 8-வது ஓவரில் கால் காப்பில் வாங்கி மிட்ஷெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மொயின் அலி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார்.

ஆவேஷ் கான் வீசிய 9-வது ஓவரில் சிஎஸ்கே பேட்டர்கள் 7 ரன்களும், அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் 3 ரன்களும் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்தனர்.

11வது ஓவரை பர்கர் வீசினார். தொடக்கத்தில் இருந்தே திணறிய மொயின் அலி, டீப் கவர் பாயின்ட் திசையில் சிக்ஸருக்கு முயல, ஆவேஷ்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டார். மொயின் அலி 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

சிக்ஸர் துபே ஏமாற்றம்

அடுத்து ஷிவம் துபே களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். சஹல் வீசிய 13-வது ஓவரில் துபேவும், கெய்க்வாட்டும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 14-வது ஓவரை அஸ்வின் வீசினார், முதல் பந்திலேயே துபே, ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸருக்கு விளாசினார், 2வது பந்தில் துபே பவுண்டரி விளாசினார். அஸ்வின் வீசிய கடைசிப்பந்தில் துபே சிக்ஸருக்கு முயற்சிக்க ரியான் பராக்கிடம் கேட்சானது. துபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

துபே விக்கெட்டை வீழ்த்திய போது, அஸ்வின் முக்கிய மைல்கல்லை எட்டினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50-வது விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டன. 15-வது ஓவரை சஹல் வீசினார். இந்த ஓவரில் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடிக்க, ஜடேஜா சிக்ஸருக்கு முயன்றார். ஆனால் பவுண்டரி அருகே நின்றிருந்த பட்லர் கேட்ச் பிடித்த நிலையில் எல்லைக்கோட்டின் மீது விழுவதற்கு முன்பே பந்தை தூக்கி எறிந்ததால் கேட்சாக மாறவில்லை.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

ஜடேஜாவின் அரிதான ரன்அவுட்

ஆவேஷ் கான் 16-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தை சந்தித்த ஜடேஜா தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஒரு ரன் எடுத்த நிலையில், 2 வது ரன்னுக்கு ஓடி வரவே கெய்க்வாட் மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஜடேஜா ஓடும்போது, ஸ்டெம்பை மறைத்துக்கொண்டு ஓடினார். தன்னுடைய ஓடும் பகுதியையும் மாற்றி, பீல்டர் ரன்அவுட் செய்ய இடையூறு செய்யும் வகையில் ஸ்டெம்பை மறைத்து ஜடேஜா ஓடினார்.

பந்தை பிடித்து எறிந்த சாம்ஸன், ரன்அவுட் செய்ய முயல, பந்து ஜடேஜா கையில் பட்டது. ரன்அவுட்டுக்கு இடையூறாக ஓடியதாக ஜடேஜா மீது 3வது நடுவரிடம் சாம்ஸன் அப்பீல் செய்தார். இதை ஆய்வு செய்த 3வது நடுவர், ஜடேஜா ரன்அவுட் செய்யவிடாமல் ஸ்டெம்பை மறைத்து ஓடியது உறுதி செய்து அவுட் வழங்கினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஸ்வி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார்.

கெய்க்வாட் பொறுப்பான பேட்டிங்

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே வெற்றிக்கு 24 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டன. சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் ரிஸ்வி பவுண்டரி உள்பட 8 ரன்கள் சேர்த்தார். கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன.

ஆந்த்ரே பர்கர் வீசிய 18-வது ஓவரில் கெய்க்வாட் ஒரு சிக்ஸர் விளாசி ரசிகர்களின் பதற்றத்தைக் குறைத்தார். போல்ட் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து வெற்றியை நெருங்க வைத்தார். 2வது பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். 18.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை அடைந்தது. கேப்டன் கெய்க்வாட் 42 ரன்களிலும், ரிஸ்வி 15 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன?

இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் என்பதால், சிஎஸ்கே அணிக்கு ஆதரவு அளிக்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்திருந்தனர். அரங்கமே மஞ்சள்மயமாகக் காட்சியளித்தது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ஏகோபித்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு வெற்றியுடன் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மைதானத்தை வலம் வந்து நன்றி செலுத்தினர். அது மட்டுமல்லாமல் தோனி டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை ரசிகர்கள் மத்தியில் அடித்து அவர்களை மகிழ்வித்தார்.

ஆட்டநாயகன் சிமர்ஜீத் சிங்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அச்சாரமாக இருந்தது சிமர்ஜீத் சிங்கின் பந்துவீச்சும், கேப்டன் கெய்க்வாட்டின் ஆங்கர் ரோல் பேட்டிங்கும்தான். பதீராணா, முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லாத நிலையில் சிமர்ஜீத் பந்துவீச்சு, சிஎஸ்கே அணிக்கு பெரிய பலமாக மாறியுள்ளது.

சிமர்ஜீத் தொடக்கத்திலேயே பட்லர், ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். இந்த அழுத்தத்தில் இருந்து ராஜஸ்தான் அணி கடைசி வரை மீள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணி ஏன் தோற்றது?

அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி இதுவரை பேட்டர்களுக்கு சாதமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு, சேப்பாக்கத்தில் மந்தமான ஆடுகளத்தில் விளையாடும் போது ஸ்கோர் செய்யத் திணறியதும் தோல்விக்கான காரணம். 141 ரன்கள் சேர்த்து அதை ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வது கடினமானது,

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தான் அணியை விட உயர்ந்து 0.528 என வலுவாக இருக்கிறது. சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும். ஏற்கெனவே வலுவான நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி இருப்பதால், 16 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ், டெல்லி, லக்ளெ அணிகள் போட்டியிட்டாலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியுடன் தோல்வி அடைந்து, ஆர்சிபி அணி இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றாலும், 14 புள்ளிகளுடன் இரு அணிகளும் கடைசி இடத்துக்கு போட்டியிடும். ஆனால், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே வலுவாக இருப்பதால், குறைந்தபட்சம் 4வது இடம் கிடைக்க வாய்ப்புண்டு.

CSK vs RR

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தானுக்கு 2வது இடம் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தாலும், ராஜஸ்தான் அணி தனது 2வது இடத்திலிருந்து கீழே இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் பெரிதாக குறையாமல் 0.349 என நீடிக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வென்றாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் ராஜஸ்தானுக்கு சவாலாக இருக்கும். இன்னும் ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால்கூட 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும்.

அதேநேரம், சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால், ராஜஸ்தான் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்று, ராஜஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் தீர்மானிக்கப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)