ஜவான்: தமிழ்த் திரையுலகை நோக்கி திரும்புகிறதா பாலிவுட்?

பட மூலாதாரம், X/@anirudhofficial
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி என இந்தப் படத்தில் பல தமிழ் திரைப்படக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தியா முழுவதும் Imax மற்றும் 4DX வடிவங்களில் இந்தப் படம் வெளியாகி உள்ளது.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விக்ரம் ரத்தோர், ஆஸாத் ரத்தோர் என இரண்டு பாத்திரங்களில் நடித்திருக்கிறார் ஷாருக் கான்.
காளி என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவர் தவிர, நயன்தாரா, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பட மூலாதாரம், X/@Atlee_dir
இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், இந்தப் படம் வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் வேகமாக டிக்கெட்கள் விற்பனையாகிவருகின்றன.
கொல்கத்தாவில் ஒரு திரையரங்கில் அதிகாலை 2.15 மணிக்கு காட்சிகளை வெளியிடும் அளவுக்கு இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போதுவரை இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்பனையாகியிருக்கும் என கருதப்படுகிறது. இந்தப் படம் 543 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் 65 - 70 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ் ரசிகர்களை போல வெறித்தனமான ஷாருக் கான் ரசிர்கள்
பாலிவுட் சினிமா வர்த்தகம் தொடர்பான விஷயங்களைக் கவனித்துவரும் நிபுணரான அதுல் மோகன், "ஷாருக் கானின் ரசிகர் வட்டமே இவ்வளவு பெரிய வரவேற்புக்குக் காரணம். சல்மான் கான், அக்ஷய் குமார், ஆமிர் கான், ஆகியோரின் ரசிகர்களோடு ஒப்பிட்டால், ஷாருக் கானின் ரசிகர்கள் மிகத் தீவிரமானவர்கள். ஒவ்வொரு படத்திற்கும் கையில் போடும் பேண்டுகள், டி - ஷர்ட் ஆகியவற்றை உருவாக்குவார்கள். தென்னிந்தியாவில் சினிமா நட்சத்திரங்களுக்கு எந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே மாதிரியான ரசிகர் வட்டம் பாலிவுட்டில் ஷாருக் கானுக்கு மட்டும்தான் இருக்கிறது" என்கிறார் அவர்.
கடந்த ஆண்டுவரை, இந்தியில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும் பெரும் தோல்வியைச் சந்தித்துவந்த நிலையில், இந்த ஆண்டு நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த சத்யபிரேம் கி கதா, ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, ஓஎம்ஜி 2 ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இந்தப் படமும் பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் 150 கோடி வசூல் என எதிர்பார்ப்பு
தென்னிந்தியாவில் மட்டும் இந்தப் படம் 150 கோடி ரூபாயை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக வெளியான Gadar - 2 படமும் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் 4,800 திரையரங்குகளில் வெளியான கதர் - 2, முன்பதிவில் மட்டும் சுமார் 40 கோடி ரூபாயை வசூலித்தது. அந்தப் படம் வெளியான சமயத்தில் ஜெயிலர், OMG 2 ஆகிய படங்கள் வெளியான நிலையிலும் இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது.
ஆனால், ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் நிலையில், அன்று எந்த பெரிய படமும் வெளியாகவில்லை என்பதால், இந்தியா முழுவதும் சுமார் 5,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், X/@anirudhofficial
பாலிவுட்-ன் கவனத்தை பெறும் தென்னிந்தியா
பொதுவாக பாலிவுட் திரைப்படங்களைப் பொறுத்தவரை, இந்தி பேசும் மாநிலங்களுக்கு வெளியில் உள்ள ரசிகர்களை மனதில்வைத்து வெளியாகும் திரைப்படங்கள் மிகக் குறைவு. இந்தி பேசும் ரசிகர்களுக்காக எடுக்கப்படும் திரைப்படங்களே, பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்தோ, செய்யப்படாமலோ வெளியாகும்.
ஆனால், தென்னிந்தியாவின் வசூல் சந்தை விரிவாகிக்கொண்டே போகும் நிலையில், பாலிவுட் தனது வியூகத்தை மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படம், தென்னிந்திய ரசிகர்களையும் மனதில் வைத்து பெரிய அளவிலான தென்னிந்திய நட்சத்திரப் பட்டாளத்தை இணைத்திருக்கிறது. குறிப்பாக, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு போன்றவர்கள் தமிழ் ரசிகர்களை குறிவைத்து களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அட்லீ இந்தப் படத்தின் இயக்குநராக இருப்பது மட்டும் இதற்குக் காரணம் இல்லை என்பது தெளிவு.

பட மூலாதாரம், X/@RedChilliesEnt
இதற்கிடையில், ஜவான் படத்தை புறக்கணிக்க வேண்டுமென கடந்த இரண்டு நாட்களாக வலதுசாரி ஹேண்டில்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றன. இதற்கான காரணம் தெளிவாக இல்லை. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவி இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென சில பதிவுகள் தெரிவித்தன.
ஆனால், இதற்கு முன்பாக பதான் திரைப்படம் வெளிவந்தபோதும் அந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென அப்போதும் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஆனால், அதையும் மீறி அந்தப் படம் வெற்றிபெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












