ஓ.பி.எஸ் தனக்கு உதவாத பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்து விட்டாரா?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் கைகோர்த்திருப்பதோடு தனக்கு உதவாத பா.ஜ.கவை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கான முயற்சியில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.

இருந்தபோதும், பா.ஜ.க.வின் ஆதரவை வெகுவாக அவர் தரப்பு நம்பியிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களில் அதிலும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் சூழலில், ஓ.பி.எஸ், டிடிவி இருவரும் இன்னும் தீவிரமாக இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம், பா.ஜ.கவுடன் கூட்டணி தொடர்வதாகவே தொடர்ந்து சொல்லி வருவார். அது தொடர்பாக செய்தியாளர்கள் எந்தவிதமாகக் கேள்வியெழுப்பினாலும் மாறுபட்ட பதிலை அளிக்கமாட்டார்.

ஆனால், இப்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலின்போதுகூட, தானே வலிய பா.ஜ.க.வின் மாநில தலைமையகத்திற்குச் சென்று ஆதரவு கொடுத்தார் ஓ. பன்னீர்செல்வம்.

நீண்ட காலமாகவே எடப்பாடி கே. பழனிச்சாமி - ஓ. பன்னீர்செல்வம் இரு தரப்பினரையும் ஒன்றாகவே நடத்தி வந்த பா.ஜ.க. தலைமை, ஒரு கட்டத்திற்குப் பிறகு முழுமையாக எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் பக்கம் சாய்ந்துவிட்டது.

ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தபோது, எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் எல்லாவற்றுக்கும் உச்சமாக அமைந்தது.

இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட இடம் வழங்கப்படாத சின்னச் சின்ன கட்சிகள்கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டன. ஆனால், அ.தி.மு.க.வின் சார்பில் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதோடு, அவர் பிரதமர் மோதியின் அருகிலும் அமர வைக்கப்பட்டார்.

இதற்கு சில நாட்கள் முன்பாக ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும் பா.ஜ.க. தரப்பிலிருந்து ஆதரவான வார்த்தைகள் ஏதும் வரவில்லை. இந்த நிலையில்தான், ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனோடு இணைந்து முழுமையாகச் செயல்பட முடிவெடுத்தார்.

அதிமுக.வினர் அண்ணாமலையை புறக்கணிக்கிறார்களா?

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை ஜூலை 28ஆம் தேதி துவங்கியபோது, அ.தி.மு.க.வின் இரு தரப்பிற்குமே அழைப்பு விடுக்கப்பட்டது.

இருந்தபோதும், எடப்பாடி தரப்பிலிருந்து ஆர்.பி. உதயகுமாரை தவிர வேறு யாரும் செல்லவில்லை. ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து யாருமே போகவில்லை.

அதற்குப் பிறகு, கொடநாடு கொலையாளிகளைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி, டி.டி.வி. தினகரனுடன் இணைந்து ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தையும் ஓ.பி.எஸ் அறிவித்தார். தேனி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் டி.டி.வி. தினகரனும் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்ட தினகரன் பேசும்போது, "துரோகிகள் கையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்கவே தானும் ஓ.பி.எஸ்சும் ஒன்றிணைந்துள்ளதாக" தெரிவித்தார்.

இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பாத யாத்திரையில் இருந்த அண்ணாமலையிடம், பா.ஜ.க. ஒதுக்குவதால் ஓ. பன்னீர்செல்வம் விரக்தியில் இருக்கிறாரா எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

"நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. அவரும் விரக்தியில் இல்லை" என்று பதிலளித்தார் அண்ணாமலை.

ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அண்ணாமலை மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகவே தெரிகிறது. புதன்கிழமையன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். தரப்பின் கொள்கை பரப்புச் செயலாளரான புகழேந்தி, பா.ஜ.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

"எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணியில் இருக்கிறார்கள் என்கிறார் அண்ணாமலை. ஆனால், தே.ஜ.கூவின் கூட்டம் நடந்தபோது ஓ.பி.எஸ்சுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே, அப்போதே கூட்டணி முடிந்துவிட்டது.

உங்களை நம்பி நாங்கள் இல்லை. மேலும், அண்ணாமலை பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்று குறிப்பிடுகிறார். ஆனால், ஓ.பி.எஸ்.ஐ ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடுவது இல்லை.

முன்னாள் முதல்வர் என்று மட்டுமே கூறுகிறார். அண்ணாமலை மீண்டும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஐ முன்னாள் முதல்வர் என்றும் குறிப்பிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்,” என்று அண்ணாமலையைக் கடுமையாக ஒருமையில் பேசினார்.

'பா.ஜ.க. ஒரு மூன்று சதவீத கட்சி' - ஓ. பன்னீர்செல்வம் தரப்பு

புகழேந்தியின் இந்தப் பேச்சை வைத்துப் பார்க்கும்போது, ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை பா.ஜ.கவை கடுமையாக எதிர்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

இதுகுறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசிய ஓ. பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்புச் செயலாளரான மருது அழகுராஜ், பா.ஜ.கவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

"பா.ஜ.கவின் கூட்டணியில் இருந்தபடி, அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தவர்கள் சி.வி. சண்முகம், செங்கோட்டையன், பொன்னையன், எடப்பாடி கே. பழனிச்சாமி போன்றவர்கள். தரம்தாழ்ந்தெல்லாம் விமர்சித்தார்கள்.

இதற்கெல்லாம் உச்சபட்சமாகப் பேசிய பொன்னையன், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல் கட்சி பா.ஜ.கதான்; ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்களை முன்வைத்து இந்தியாவை அழிக்கப் பார்க்கிறது என்றார்.

ஆனால், பா.ஜ.கவிடம் தோழமை உணர்வோடு தவறுகளைச் சுட்டிக்காட்டி, இணக்கமான அரசியலை மேற்கொண்டார் ஓ.பி.எஸ். இருந்தபோதும், எங்களுக்குள் இந்தப் பிளவு உருவானதிலிருந்து எடப்பாடிக்கு பா.ஜ.க. உதவுகிறது என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டே வந்தது.

'இப்போதைய சூழலில் மேற்கு மண்டலத்தில்தான் ஒன்றிரண்டு தொகுதிகளைக் கைப்பற்றலாம், அதற்கு எடப்பாடி அவசியம்' என பா.ஜ.க. நினைக்கலாம். ஆகவே, எடப்பாடியிடம் பா.ஜ.க. சரணடைந்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

பத்து ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பா.ஜ.க. தனது இடது புறம் எடப்பாடி கே. பழனிச்சாமியை அமர்த்தும் அளவுக்கு பலவீனமான கூட்டணியாகி விட்டார்கள். அந்தக் கூட்டணியிலேயே பெரிய கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிச்சாமியை குறிப்பிடுகிறார்கள். ஆனால், அவரிடம் ஒரு எம்.பிகூட கிடையாது.

அ.தி.மு.கவின் தொண்டர்கள் முடிவெடுக்க வேண்டிய ஒரு விவகாரத்தில், பல இடங்களில் அழுத்தம் கொடுத்து பல சாதகமான முடிவுகளைப் பெற்றுத் தந்ததாக தொண்டர்கள் கருதுகிறார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் வந்தபோது, இதில் எடப்பாடி தரப்பே போட்டியிடட்டும்; நீங்கள் வேட்பாளரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என சமாதான பஞ்சாயத்து செய்தார் அண்ணாமலை.

ஆனால், அதே நேரத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி இடைக்காலப் பொதுச் செயலாளர் என எங்கேயும் அங்கீகாரம் வருவதற்கு முன்பாகவே, அவரை இடைக்காலப் பொதுச் செயலாளராக அறிவித்தார். ஆனால், ஓ.பி.எஸ்ஸை முன்னாள் முதல்வர் என்கிறார்.

கட்சித் தலைமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எங்களுக்குப் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், இதுபோன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்காது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு சாதகமான தீர்ப்புகள் எடப்பாடிக்குக் கிடைத்தன. ஆகவே, நாங்கள் நீதிமன்றத்தைவிட மக்கள் மன்றத்தைப் பெரிதாக நம்புகிறோம்.

கட்சிக்குள் உரிமைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்திருக்கிறார்கள். நாங்கள் இதற்காகப் போராடும்போது, பா.ஜ.க. விலகி நின்று வேடிக்கை பார்க்காமல், ஒரு தரப்புக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்கள் என்ற கோபம் உருவாகியிருக்கிறது.

டெல்லியில் தே.ஜ.கூட்டணி கூட்டம் நடந்தபோது, எடப்பாடியை அழைத்து இன்னொரு கூடுதல் அங்கீகரத்தை அளிப்பது போல நடந்து கொண்டது மிகப் பெரிய தவறு.

இம்மாதிரி சூழலில் எங்களை எட்டி உதைக்கும் கால்களை முத்தமிட வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. பா.ஜ.க. ஒரு 3 சதவீத கட்சி. 30 சதவீத வாக்குகளைக் கொண்ட அ.தி.மு.கவை மூன்றாகப் பிளவுபட வைத்து, மூன்று பேரும் வந்து எங்கள் பல்லக்கைத் தூக்குங்கள் என்ற அரசியலை முன்னெடுக்கிறார்கள். பா.ஜ.கவின் நரித்தனத்தை நாங்கள் புரிந்துகொண்டுவிட்டோம்.

தென் மாவட்டங்களில் மட்டும்தான் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு இருப்பதாகச் சொல்வது தவறு. எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. கே.சி. பழனிச்சாமி ஆதரிக்கிறார். சசிகலா எங்களை ஆதரிக்கலாம். ஏற்கெனவே அ.ம.மு.க. எங்களை ஆதரிக்கிறது.

விரைவிலேயே எடப்பாடி இல்லாத அ.தி.மு.க. உருவாகலாம். அவர்தான் தலைவர் என்றால் 2024இல் மிகப் பெரிய அவமானத்தை அவர்கள் எதிர்கொள்வார்கள்," என்கிறார் மருது அழகுராஜ்.

வரவுள்ள 2024ஆம் ஆண்டு தேர்தலின் போது அ.தி.மு.கவின் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பிடமிருந்து கூடுதல் இடங்களைப் பெற்று, ஓ.பி.எஸ். தரப்புக்கும் டிடிவி தினகரன் தரப்புக்கும் தர பா.ஜ.க. முயன்றால், அதை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஏற்குமா?

"அ.தி.மு.கவே நாங்கள்தான் எனும்போது, பா.ஜ.க. அளிக்கும் கொசுறுச் சோறை வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வெறும் தேர்தலை மட்டும் அரசியல் என நாங்கள் நினைக்கவில்லை.

பிரதமர் மோதியின் ஆட்சி மீதான கோபத்தைவிட, அமித்ஷாவின் அரசியல் மீதான கோபம் அதிகம் இருக்கிறது. சிவசேனாவை பிளந்தார்கள். நிதிஷ் குமாரை சிதறடித்தார்கள்.

தென்னகத்தில் மிகப் பெரிய வாய்ப்புகளை பா.ஜ.கவுக்கு உருவாக்கிக் கொடுத்த பாலயோகி, சந்திரபாபு நாயுடு ஆகியோரையும் கைவிட்டார்கள். இதே அரசியலை அவர்கள் அ.தி.மு.கவிடமும் செய்கிறார்கள். அவர்களுக்கு 2024 தேர்தல் உயிர் மூச்சு. எங்களுக்கு அ.தி.மு.கவின் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் உயிர் மூச்சு," என்கிறார் மருது அழகுராஜ்.

அண்ணாமலை எடப்பாடியை உரசிப் பார்க்க நினைக்கிறாரா?

பன்னீர்செல்வம் தரப்பு, பா.ஜ.கவை விட்டுவிலக முடிவெடுத்துவிட்டாலும், புதன்கிழமையன்று பேட்டியளித்த அண்ணாமலை, ஓ. பன்னீர்செல்வத்தை ஒதுக்கவில்லை என்று கூறியிருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"ஓ.பி.எஸ்-ஐ ஒதுக்கவில்லை என அண்ணாமலை சொன்னதற்கு என்ன அர்த்தம்?

இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார். இப்படிப் பேசுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இப்படிப் பேசுவதன் மூலம் எடப்பாடியை உரசிப் பார்க்க நினைக்கிறார் என்றால், அண்ணாமலையின் நிலை சிக்கல்தான். அதே நேரம், ஓ.பி.எஸ் தரப்பை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. தலைமை விரும்பாது.

வரவுள்ள 2024இல் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது டிடிவி - ஓ.பி.எஸ். அணி குறிப்பிடத்தகுந்த நெருக்கடியை ஏற்படுத்துவார்கள். தென் மாவட்டங்களில் 6-7 தொகுதிகளில் டி.டி.விக்கு தலா ஒவ்வொரு தொகுதியிலும் 2 சதவீத வாக்குகள் இருக்கின்றன. சில இடங்களில் கூடுதலாகவும் இருக்கும்.

ஓ.பி.எஸ். அவருடன் இணைந்தால் இந்த வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கும். இந்த 6-7 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய அளவில் நெருக்கடி கொடுப்பார்கள். டிடிவி - ஓ.பி.எஸ். தரப்புக்கு தி.மு.கவும் மறைமுக உதவியைச் செய்யலாம்.

தாங்கள் இல்லாவிட்டால் அ.தி.மு.கவுக்கு நெருக்கடிதான் என்பதை எடப்பாடி உணர வேண்டும் என டிடிவி - ஓ.பி.எஸ். தரப்பு நினைக்கிறது. ஆனால், டி.டி.வி., ஓ. பன்னீர்செல்வம், சசிகாலா ஆகிய மூவரும் உள்ளே வந்தால் தனக்குச் சிக்கல் என்பது எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும். அதற்கு அவர் அனுமதிக்க மாட்டார்.

இந்தத் தேர்தல் எடப்பாடிக்கு நெருக்கடியான தேர்தல்தான். ஆனால், அவருடைய இலக்கு 2026தான். அந்த நேரத்தில் டி.டி.வி. - ஓ.பி.எஸ். என்ன செய்கிறார்கள் என்பதை அப்போது பார்த்துக்கொள்ளலாம் என அவர் முடிவெடுக்கலாம்," என்கிறார் குபேந்திரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: